இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 07-06-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 7 Jun 2025 6:37 PM IST
நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு, கிளாம்பாக்கமே சாட்சி! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்:
கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளதாக செய்திகள் வருகின்றன.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு.சரி, அதை முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை!இன்று வரை "கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" ஓய்ந்த பாடில்லை.
பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா? அதற்கான முறையான ஏற்பாடுகளை செய்யக் கூட இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வக்கில்லையா?சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம்.கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்து சேவை முறையாகவும், சீராகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
- 7 Jun 2025 5:08 PM IST
பாலியல் குற்றத்தில் சிக்கியுள்ள ஜெப்ரி எப்ஸ்டைன் தொடர்பாக வெளியிடப்படாத ஆவணங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் குறிப்பிடப்பட்டதாக எலான் மஸ்க் நேரடியாக குற்றம்சாட்டி, எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாகவே பொதுவெளியில் ஆவணங்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்த செயலால் அதிருப்தி தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை, அதிபர் டிரம்ப் மீதான இந்தக் குற்றச்சாட்டு மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கூறியிருந்தது. இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எக்ஸ்தளப் பதிவை எலான் மஸ்க் நீக்கியுள்ளார்.
- 7 Jun 2025 4:00 PM IST
- வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை
- சூலூர் அருகே, அரசூர் பகுதியில் டாஸ்மாக் கடையின் பின்புறம் உள்ள காட்டில் வடமாநில நபர் கல்லால் அடித்து கொலை
- முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுப்பு
- கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து சூலூர் போலீசார் விசாரணை
- 7 Jun 2025 3:43 PM IST
கேதார்நாத் சென்ற ஹெலிகாப்டரில் கோளாறு
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ருத்ரபிரயாக் மாவட்டம் சிர்சி அருகே உள்ள நெடுஞ்சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சரியான நேரத்தில் ஹெலிகாப்டரை சாலையில் தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- 7 Jun 2025 3:39 PM IST
அரியானா மாநிலம் குருகிராமில் கடந்த ஆண்டு 2 கிளப்புகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வழக்கில் கனடாவைச் சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாதி கோல்டி பிரார் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
- 7 Jun 2025 3:14 PM IST
மீனவர்களுக்கு எச்சரிக்கை
ஜூன் 8,9 தேதிகளில் மன்னார் வளைகுடா, குமரிக்கடலில் சூறாவளிக்காற்று 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் - வானிலை மையம்
- 7 Jun 2025 1:44 PM IST
சிக்கிம் நிலச்சரிவு... ராணுவ முகாமில் சிக்கித் தவித்த 76 வீரர்கள் மீட்பு
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப்பகுதியில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இப்பகுதியில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். இதேபோல் சாட்டன் ராணுவ முகாமில் சிக்கித் தவித்த 76 ராணுவ வீரர்கள், பாதுகாப்பாக ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
சாட்டன் ராணுவ முகாம் உள்ள பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 வீரர்கள் உயிரிழந்தனர். 6 வீரர்களை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.