இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 10 Feb 2025 12:46 PM IST
ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சின் மார்செய்லே நகரில் முதல் இந்திய தூதரக தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் பிரதமர் மோடி இருவரும் அந்நகருக்கு செல்கின்றனர்.
- 10 Feb 2025 12:45 PM IST
இந்தியா-இலங்கை பயணிகள் கப்பல் நாளை மறுநாள் முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.
சிவகங்கை என்ற பெயரிலான கப்பலின் போக்குவரத்து வரும் 12-ம் தேதி தொடங்கும் என கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.
- 10 Feb 2025 12:43 PM IST
பெரியாரை ஏற்றுக் கொள்ளக் கூடிய தம்பிகள் நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறலாம். பிரபாகரனே பெரியாரை ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
- 10 Feb 2025 12:06 PM IST
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு: கவர்னர் தரப்பிடம் கேள்வி எழுப்பிய சுப்ரீம்கோர்ட்டு
மசோதாக்களை ஒன்றிரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைத்த பின் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் கவர்னர். இது எப்படி முடியும்? மசோதா மீது கவர்னர் எடுக்கும் முடிவு ஏன் வெளிப்படையாக மாநில அரசுக்கு தெரிவிக்கப்படவில்லை..?
கவர்னர் மசோதாவை முடிவெடுக்காமல் நிறுத்தி வைக்கிறார் என்றால், அது செல்லாது என்ற கவர்னர் தரப்பு வாதத்தை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
- 10 Feb 2025 11:44 AM IST
பக்தர்கள் தட்டில் செலுத்தும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என நேற்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அர்ச்சகர் தட்டு காணிக்கை விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, முதலில் அர்ச்சகர்கள் பணி வரன்முறை செய்யப்படவில்லை. பிறகு பணி வரன்முறை செய்யப்பட்டது.
பக்தர்களிடம் இருந்து வரக்கூடிய காணிக்கையை உண்டியலில் போடும் சூழல் இருந்தது. அதில் ஏற்பட்ட சிறு சிக்கல் காரணமாக தக்கார் அனுமதி பெறாமல் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சுற்றறிக்கை தற்போது திரும்ப பெறப்பட்டுள்ளது. சிக்கலும் முடிவுக்கு வந்துவிட்டது என அவர் கூறியுள்ளார்.
- 10 Feb 2025 10:41 AM IST
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வை சேர்ந்த வி.சி. சந்திரகுமார் சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபை உறுப்பினராக இன்று பதவியேற்று கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
- 10 Feb 2025 10:37 AM IST
பெங்களூருவில் விமான கண்காட்சி தொடங்கியது
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் விமான கண்காட்சி தொடங்கியது. பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் வகையிலான விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 14-ம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.
- 10 Feb 2025 9:58 AM IST
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840க்கும், ஒரு கிராம் ரூ.7,980க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- 10 Feb 2025 9:38 AM IST
கொங்கு மண்டலத்தில் உள்ள சிவன் தலங்களில் 1,800 ஆண்டு பழமையானது பேரூர் பட்டீசுவரர் கோவில். வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா, இன்று (திங்கட்கிழமை) காலை 9.15 மணியிலிருந்து 10.15 மணிக்குள் நடக்கிறது.
இதையொட்டி பக்தர்களின் வசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, கோவையில் இன்று அதிகாலை 4 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுவதாக பேரூர் காவல்துறை அறிவித்திருந்தது.
அதன்படி பேரூருக்கு மேற்கே தொண்டாமுத்தூர் ஆலாந்துறை, மாதம்பட்டி, செம்மேடு, பூண்டி, காருண்யா நகர் ஆகிய புறநகர் பகுதிகளில் இருந்து வரும் பஸ், லாரி, கார், பைக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், பேரூர் செட்டிபாளையம் அருகே கோவைப்புதூர் மெயின்ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது.
இதே போல் காந்திபுரம், ரெயில்நிலையம், டவுன்ஹால் பகுதியில் இருந்து பேரூர் நோக்கி, பேரூர் மெயின் ரோட்டின் வழியே வரும் பஸ், லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் செல்வபுரம் சிவாலயா பஸ் ஸ்டாப் அருகே புட்டுவிக்கி வழியாக சுண்டக்காமுத்தூர் மெயின் ரோடு வழியாக திருப்பி விடப்படுகிறது. கும்பாபி ஷேகத்தையொட்டி இன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்தில் இந்த மாற்றம் இருக்கும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.






