இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-06-2025


தினத்தந்தி 11 Jun 2025 10:27 AM IST (Updated: 12 Jun 2025 7:45 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 11 Jun 2025 8:02 PM IST

    என்ஜினீயரிங் கலந்தாய்வு; மாணவர்களுக்கான ரேண்டம் எண் வெளியீடு

    என்ஜினீயரிங் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இந்நிலையில், என்ஜினீயரிங் கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் தனித்தனியான 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது. 

  • 11 Jun 2025 7:39 PM IST

    “இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி ஆற்றிய பங்கை மறுக்கவே முடியாது” - ஷாஹித் அப்ரிடி

    பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி கூறுகையில், “விராட் கோலி ஆக்ரோஷமானவராக இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய பங்கை மறுக்கவே முடியாது. தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து தனி ஒருவராக போட்டிகளை வென்றவர். அவரைப் போன்ற அரிதான வீரர்களை ஸ்பெஷலாக நடத்த வேண்டும். கோபக்காரராக இருந்த அவர், திருமணத்திற்கு பின் நிறைய மாறி விட்டார். அதிக மரியாதைக்கு தகுதியானவர் கோலி” என்று அவர் கூறினார்.

  • 11 Jun 2025 6:55 PM IST

    ரெட் அலர்ட்: கனமழையை எதிர்கொள்ள 7 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

    கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

  • 11 Jun 2025 6:32 PM IST

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

    விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஏற்கனவே இருவர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • 11 Jun 2025 6:18 PM IST

    ஈரோடு மாவட்டம் பவானியில் சாலை வலம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சாலையின் இருபுறமும் கூடியுள்ள மக்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • 11 Jun 2025 6:16 PM IST

    எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? - அண்ணாமலை கேள்வி

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார். தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார். மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்? வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • 11 Jun 2025 5:53 PM IST

    விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் தற்காலிக நிறுத்தம்

    தொழில்நுட்பக் கோளாறால் சென்னை விமான நிலையத்துக்கான மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் எனவும் விம்கோ நகர் முதல் மீனம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில் சேவை தொடரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • 11 Jun 2025 5:50 PM IST

    சாதி, மதம் இல்லை என சான்றிதழ்: அரசாணை பிறப்பிக்க அரசுக்கு ஐகோர்ட்டு பரிந்துரை

    சாதி, மதமில்லை என சான்று வழங்க மறுத்ததை எதிர்த்து திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பரிந்துரை செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.

  • 11 Jun 2025 5:12 PM IST

    தைவானில் கடும் நிலநடுக்கம்

    தைவானில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹுவாலியன் நகருக்கு தெற்கில் 71 கிலோ மீட்டர் தொலைவில் கடலுக்கடியில் 31.1 கிலோ மீட்டர் ஆழ்த்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

1 More update

Next Story