இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-02-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 14 Feb 2025 2:26 PM IST
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் போலி இணையதளம் நடத்தி வந்த கோவில் அர்ச்சகர் மற்றும் செயலி நடத்தி வந்த பெண் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- 14 Feb 2025 2:06 PM IST
செர்னோபில் அணு உலைக்கு கவசமாக உள்ள மேற்கூரை மீது ட்ரோன் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1986-ல் செர்னோபில் அணு உலை வெடித்த விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணு உலை மீது ட்ரோன் மூலம் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என ரஷியா தரப்பில் கூறப்படுகிறது.
- 14 Feb 2025 1:57 PM IST
மத நல்லிணக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த போராட்டத்திற்கும் அனுமதி வழங்க கூடாது என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
- 14 Feb 2025 1:55 PM IST
சென்னை அசோக் நகரில் பைக்கில் வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்ட பிரபல ரவுடியான இளஞ்செழியன் (38) மற்றும் அவரது கூட்டாளி ஆட்டோ டிரைவர் சரத் (29) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இளஞ்செழியன் மீது 13 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
- 14 Feb 2025 1:39 PM IST
அயனாவரத்தில் 10ம் வகுப்பு மாணவனை வேறு பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அயனாவரம் காவல்துறை இதுதொடர்பாக விசாரித்து வருகிறது.
- 14 Feb 2025 12:52 PM IST
சென்னை சென்ட்ரலில் மெட்ரோ நிறுவனம் சார்பில் அமையும் சென்ட்ரல் கோபுரக் கட்டடத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- 14 Feb 2025 12:32 PM IST
மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முத்திரை கட்டணம் குறைவாக வசூலித்து அரசுக்கு 1.34 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட பதிவாளரும், அவரது மனைவியும் வீட்டில் இல்லாத நிலையில் உறவினர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- 14 Feb 2025 11:44 AM IST
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
- 14 Feb 2025 11:43 AM IST
திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் சரக்கு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது சுமைதூக்கும் தொழிலாளி திவாகர் (வயது 27) திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்தார். சரக்கு வண்டியில் நெல் மூட்டைகளை ஏற்றும் ஒப்பந்தக்காரர், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை என திவாகரின் தாய், திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- 14 Feb 2025 11:28 AM IST
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தைத் தொடர்ந்து சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி இந்து அமைப்பினர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.








