இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 May 2025 4:29 PM IST
3 நாடுகளுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம்
நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய 3 நாடுகளுக்கு மத்திய வெளிவிவகார துறை மந்திரி எஸ். ஜெய்சங்கர் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்த பயணத்தில், அந்நாடுகளின் தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார். அதில், இருதரப்பு உறவுகள் பற்றி முழு அளவில் ஆலோசனை மேற்கொள்கிறார். இதுதவிர, உலகளாவிய மற்றும் மண்டல அளவிலான விவகாரங்களில் பரஸ்பர நலன்களை பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
- 18 May 2025 3:47 PM IST
அருங்காட்சியக தினத்தை ஒட்டி, இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பொதுமக்கள் நுழைவு கட்டணம் இன்றி இலவசமாக கண்டு ரசித்து வருகின்றனர்.
- 18 May 2025 3:12 PM IST
பூமியை நெருங்கும் சூரிய காந்த புயல்
பூமியை நெருங்கி வரும் சூரிய காந்த புயல் தொலைத்தொடர்பு பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என ஐரோப்பிய விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
- 18 May 2025 3:07 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
- 18 May 2025 2:30 PM IST
8 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்க முன் வர வேண்டும் எனவும் ஜனாதிபதியின் குறிப்பினை ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும் என 8 மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயமா உள்ளிட்ட 14 கேள்விகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுப்பி இருந்தார்.
- 18 May 2025 1:47 PM IST
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கி சூடு-ஒருவர் காயம்
மதுரை: திருமங்கலம் அருகே பணப் பிரச்னையால் முன்னாள் ராணுவ வீரர் மாரிசாமி என்பவர் துப்பாக்கியால் சுட்டதில் உதயகுமார் என்பவருக்கு காயம் ஏற்பட்டது. மணிகண்டன் என்பவரிடம் ஏற்பட்ட தகராறில் தடுக்க வந்த உதயகுமார் மீது துப்பாக்கிசூடு நடத்தியதாக கூறப்படுகிறது. அருகே விளையாடிக் கொண்டிருந்த பள்ளி மாணவனுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
- 18 May 2025 1:21 PM IST
நயினார் நாகேந்திரனை சந்தித்த காவலர்கள் மாற்றம்
திருப்பூரில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
- 18 May 2025 1:05 PM IST
திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று ஒரே நாளில் கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது.
- 18 May 2025 1:02 PM IST
திருவாரூரில் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது
திருவாரூரில் இடத்திற்கான பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், (29) என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
- 18 May 2025 1:00 PM IST
விவசாயி வீட்டில் 50 சவரன் கொள்ளை
பொள்ளாச்சியில் உள்ள விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
















