இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...18-05-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 18 May 2025 7:59 PM IST
கொடைக்கானலில் மே 24-ந்தேதி 62-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. இந்த மலர் கண்காட்சி ஜூன் 1-ந்தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இக்கண்காட்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன என மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவித்து உள்ளார்.
- 18 May 2025 7:44 PM IST
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பின்வரும் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் விபரம்:
இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம்.
லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், தென்காசி மற்றும் தேனி.
- 18 May 2025 7:34 PM IST
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்தது. ஷசாங்க் சிங் 59 ரன்களுடனும், ஓமர்சாய் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முழுமையாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் பிரார் 3 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் மற்றும் ஓமர்சாய் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- 18 May 2025 7:16 PM IST
அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்படும் என ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா உறுதியாக தெரிவித்து உள்ளார்.
- 18 May 2025 7:06 PM IST
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
- 18 May 2025 6:49 PM IST
கர்நாடகாவின் பெங்களூரு நகரின் பல்வேறு பகுதிகளிலும் இன்று கனமழை பெய்தது. வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து பெரும் சேதம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களுடைய பொருட்களை பாதுகாக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதில், பெங்களூருவின் ஹோரமாவு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தரைதள வீட்டின் உள்ளே நீர் புகுந்து, நாற்காலி, மேஜை உள்ளிட்ட பொருட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்வேறு சாலைகளிலும் நீர் தேங்கியதில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
- 18 May 2025 5:34 PM IST
நடிகர் அஜித்குமார் ஐரோப்பாவில் நடைபெற்று வரும் ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த பந்தயத்தின்போது ரேஸ் டிராக்கில் சென்று கொண்டிருந்த அஜித்குமார் காரின் முன்பக்க டயர் வெடித்தது. டயர் வெடித்ததில் புகையும் எழுந்தது.
இந்த நிலையில், நடிகர் அஜித் லாவகமாக காரை நிறுத்தியதால் காயமின்றி தப்பினார். அதன் பின்னர் கிரேன் உதவியுடன் பந்தய டிராக்கில் இருந்து கார் அப்புறப்படுத்தப்பட்டது.
- 18 May 2025 5:24 PM IST
ஐ.பி.எல். தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 5 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் குவித்துள்ளது. ஷசாங்க் சிங் 59 ரன்களுடனும், ஓமர்சாய் 21 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் தரப்பில் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 220 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் களமிறங்க உள்ளது.
- 18 May 2025 5:20 PM IST
விராட் கோலி இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறும் முடிவை சமீபத்தில் வெளியிட்டார். இதனால், அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய கோலியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- 18 May 2025 4:59 PM IST
கோவையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், சாலை முழுவதும் குளம் போல் மழைநீர் தேங்கியது. மழை நீருடன், கழிவு நீரும் சேர்ந்து சாலையில் ஓடியது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை காணப்பட்டது.