இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025


இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 19-01-2025
x
தினத்தந்தி 19 Jan 2025 9:14 AM IST (Updated: 19 Jan 2025 8:09 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 19 Jan 2025 3:05 PM IST

    காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது

    காசாவில் போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேல் ஹமாஸ் மேற்கொண்ட ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. 3 பெண் பிணைக் கைதிகளின் பெயரை ஹமாஸ் வெளியிட்ட நிலையில், காசா போர் நிறுத்தம் இந்திய நேரப்படி மதியம் 2.45 மணியளவில் அமலுக்கு வந்தது.

  • 19 Jan 2025 1:56 PM IST

    போர்நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வராத நிலையில், காசா மீது இஸ்ரேல் படைகள் மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ளன.

  • 19 Jan 2025 1:53 PM IST

    பிரதமர் மோடி மாதந்தோறும் இறுதி ஞாயிற்று கிழமையில் வானொலி வழியே பொதுமக்களுடன் உரையாடும், மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். இது 118-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஆகும். இந்த ஆண்டின், முதல் மன் கி பாத் நிகழ்ச்சி என்ற பெருமையை பெற்ற இதில் கலந்து கொண்டு அவர் பேசினார்.

    அப்போது அவர், நம்முடைய நாட்டில் கடந்த 2 மாதங்களில், 2 புதிய புலிகள் காப்பகங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஒன்று சத்தீஷ்காரில் உள்ள குரு காசிதாஸ் - தமோர் பிங்லா புலிகள் காப்பகம். 2-வது, மத்திய பிரதேசத்தில் ரதபானி புலிகள் காப்பகம் ஆகும் என கூறியுள்ளார்.

  • 19 Jan 2025 1:10 PM IST

    காசாவில் திட்டமிட்டபடி போர்நிறுத்தம் அமலுக்கு வராததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தாக்குதலை தொடரப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகுதியில் விடுவிக்கப்படுவதற்காக ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளின் பெயர்களை ஒப்படைக்கும் வரை போர் நிறுத்தம் தொடங்காது என்று ராணுவத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரிவித்தார். 

  • 19 Jan 2025 12:54 PM IST

    பனிமூட்டத்தால் வாகனங்கள் மோதல்- லாரி டிரைவர் பலி

    உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில், கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. கமரவுலி ரெயில்வே கிராசிங் கேட் மூடப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் கிராசிங்கில் காத்திருந்த ஒரு கார் மீது லாரி மோதியது. பின்னால் வந்த 5 வாகனங்களும் அடுத்தடுத்து மோதின. இதில் லாரி டிரைவர் உயிரிழந்தார்.

  • 19 Jan 2025 12:46 PM IST

    சாதிவாரி மக்கள் தொகை.. அப்போது மவுனம் காத்த ராகுல்

    சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி பாசாங்குத்தனமாக நடந்து கொள்வதாக ஐக்கிய ஜனதா தளம் குற்றம் சாட்டியது. இதற்கு முன்பு, பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணி கூட்டங்களில் இந்த விஷயத்தை எழுப்பியபோது ராகுல் காந்தி மவுனம் காத்ததாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ஜா கூறினார்.

  • 19 Jan 2025 12:38 PM IST

    நாட்டு மக்களுக்கு, முன்பே குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர் மோடி

    118-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, நீங்கள் ஒரு விசயம் கவனித்து இருப்பீர்கள். மாதத்தின் கடைசி ஞாயிறன்று மன் கி பாத் நடைபெறும்.

    ஆனால் இந்த முறை, 4-வது வாரத்திற்கு பதிலாக, ஒரு வாரத்திற்கு முன்பே, மாதத்தின் 3-வது வாரத்தில் நாம் சந்திக்கிறோம். ஏனெனில், அடுத்த ஞாயிற்று கிழமை குடியரசு தினம் வருகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகளை நான் முன்பே தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார்.

  • 19 Jan 2025 12:26 PM IST

    பரந்தூர் போராட்டக்குழுவினரை சந்திக்கும் விஜய்

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நாளை சந்தித்து பேச உள்ளார். மேல்படவூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • 19 Jan 2025 12:22 PM IST

    சத்யராஜின் மகள் தி.மு.க.வில் இணைந்தார்

    நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்-அமைச்சர் மு.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.

  • 19 Jan 2025 12:21 PM IST

    புதுக்கோட்டை முக்காணிபட்டியில் புனித ஆரோக்கிய அன்னை தேவாலய பொங்கல் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. முக்காணிபட்டி ஜல்லிக்கட்டில் 750 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் களம் கண்டனர். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டன. மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்கும் ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story