இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 20-12-2024


தினத்தந்தி 20 Dec 2024 8:42 AM IST (Updated: 21 Dec 2024 10:07 AM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 20 Dec 2024 4:38 PM IST

    நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் ஆபத்தானவை அல்ல.. கேரள அதிகாரி விளக்கம்

    கேரளாவில் இருந்து கொண்டு வந்து நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அகற்றி கேரளாவுக்கு எடுத்து செல்லும்படி கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    இதையடுத்து கேரள சுகாதார துறை அதிகாரிகள் 7 பேர் கொண்ட குழு இன்று, நெல்லை மாவட்டத்தில் கழிவுகள் கொட்டப்பட்ட இடங்களை ஆய்வு செய்கின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் அபாயகரமானதாக இல்லை என்றும், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி மருத்துவக் கழிவுகளை அகற்றுவது குறித்து கேரள அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினர். 

  • 20 Dec 2024 4:25 PM IST

    அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது- பா.ரஞ்சித்

    அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது என இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என்றும் ரஞ்சித் கூறினார்.

  • 20 Dec 2024 4:03 PM IST

    'யுஜிசி - நெட்' தேர்வு தேதியை மாற்ற வேண்டும் - சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

    தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள "யுஜிசி - நெட்" தேர்வு அட்டவணையில் 30 பாடங்கள் மீதான தேர்வுகள் ஜனவரி 15, 16 தேதிகளில் வருகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி வரும் இந்தத் தேர்வு தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர்பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு கடிதம் எழுதியிருப்பதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

  • 20 Dec 2024 3:19 PM IST

    பெட்டியில் சடலத்தை அனுப்பி ரூ.1.3 கோடி கேட்டு மிரட்டிய கும்பல்

    ஆந்திர மாநிலம் யெண்டகண்டி பகுதியில் கட்டுமான பணி நடைபெறும் ஒரு வீட்டிற்கு அடையாளம் தெரியாத நபரின் சடலத்தை அனுப்பி, அத்துடன் 1.3 கோடி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • 20 Dec 2024 2:33 PM IST

    தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

    நீதிமன்ற வாயில்களில் அச்சமின்றி குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெறுவது என்பது மு.க.ஸ்டாலினின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மீள முடியாத அளவிற்கு படு பாதாளத்திற்கு சென்றுவிட்டதன் அத்தாட்சி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  • 20 Dec 2024 1:34 PM IST

    சென்னை ஐஐடி வளாகத்தில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரின் காமராஜரின் மார்பளவு சிலையை ஐஐடி இயக்குநர் காமகோடி திறந்துவைத்தார். சென்னை ஐஐடியை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த காமராஜருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  • அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்
    20 Dec 2024 12:59 PM IST

    அரியானா முன்னாள் முதல்-மந்திரி சவுதாலா காலமானார்

    இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். அரியானா மாநிலம் கூர்கானில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் உயிர் பிரிந்தது. 89 வயதான ஓம் பிரகாஷ் சவுதாலா 4 முறை அரியானா முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார். முன்னாள் துணை பிரதமர் சவுதாரி தேவி லாலின் மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா ஆவார். ஓம் பிரகாஷ் சவுதாலா 1989 முதல் 2005 வரை 4 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். 

  • 20 Dec 2024 12:35 PM IST

    மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள தம்ஹினி காட் பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பயணிகள் உயிரிழந்தனர்.

  • 20 Dec 2024 12:33 PM IST

    நெல்லை நீதிமன்ற வளாகம் முன்பு மாயாண்டி என்பவர் இன்று காலை வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டியை வெட்டிக் கொலை செய்து ஒரு கும்பல் காரில் தப்பிச் சென்ற நிலையில், உடனடி விசாரணை நடத்தி ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story