இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 23 May 2025 4:55 PM IST
சல்மான் கான் வீட்டிற்குள் நுழைய முயன்ற பெண்ணுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
கைது செய்யப்பட்ட இஷா இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு இஷா சாம்ராவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- 23 May 2025 4:50 PM IST
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை தண்டனை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு ஆளான, அன்சுல் மிஸ்ராவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டது.
- 23 May 2025 4:06 PM IST
சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு தரும் : மல்லிகார்ஜுன கார்கே
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது இந்திய ஜனநாயகத்தின் தார்மீகக் கடமை. பொதுநோக்குடன் வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு தரும். ஓபிசி, பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு பெற வேண்டும். அதற்காக அரசமைப்பின் 15 (5) பிரிவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
- 23 May 2025 3:27 PM IST
லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்ற சென்னை நபர்
எமிரேட்ஸ் லாட்டரியில் ரூ.230 கோடி பரிசு வென்றார் சென்னையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியாளர் ஸ்ரீராம் ராஜகோபாலன். தனது பிறந்தநாளை ஒட்டி, கடந்த மார்ச் 16ம் தேதி வாங்கிய லாட்டரியில் ஜாக்பாட் அடித்துள்ளது. கண்களை மூடிக்கொண்டே செல்போனில் யதார்தமாக தொட்ட ஒரு நம்பருக்கு லாட்டரி விழுந்துள்ளதாக மெய்சிலிர்த்து போயுள்ளார். 'முதலில் என் கண்ணையே இவ்வளவு பெரிய தொகை கிடைத்தது பயம் கலந்த சந்தோஷத்தை தருகிறது' எனக் கூறுகிறார்.
- 23 May 2025 3:22 PM IST
அன்சுல் மிஸ்ராவுக்கு ஒரு மாத சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும முன்னாள் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஒருமாதம் சிறை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
- 23 May 2025 2:29 PM IST
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்று
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று (மே 23ம் தேதி) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை
கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் நாளை(மே 24ம் தேதி) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- 23 May 2025 2:28 PM IST
பயங்கரவாத முகாம்களை மட்டுமே அழித்தோம் - அமித் ஷா
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகளை மட்டுமே அழித்தோம்; பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகளையும் இந்தியா குறிவைத்து தாக்கவில்லை. உலகம் முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பல நாடுகள் பதில் அளித்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு இந்தியா அளித்த பதில் அவற்றில் மாறுபட்டது என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறியுள்ளார்.
- 23 May 2025 2:19 PM IST
தங்கள் பிரச்சினை குறித்து ரவி மோகன், ஆர்த்தி அறிக்கை வெளியிடத் தடை விதித்தது கோர்ட்டு
பொதுவெளியில் அவதூறு கருத்துகள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் ரவி மோகன், ஆர்த்தி குறித்த செய்திகளை வெளியிடவும், விவாதிக்கவும் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 23 May 2025 1:34 PM IST
டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நாளை பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.டெல்லி விமான நிலையத்தில் முதல்-அமைச்சருக்கு, மேள தாளங்களுடன் திமுகவினர் வரவேற்பு அளித்தனர்.டெல்லி சிறப்பு பிரதிநிதி விஜயன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ராசா கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- 23 May 2025 12:56 PM IST
வான் பரப்பை பயன்படுத்த அனுமதி மறுத்த பாகிஸ்தான்
டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் கடுமையான சூறைக்காற்று, ஆலங்கட்டி மழையால் நடுவானில் கடுமையாக குலுங்கியது. பாகிஸ்தான் வான் பரப்பை பயன்படுத்த கேட்ட கோரிக்கையை ஏற்க (Lahore Air Traffic) லாகூர் ஏர் டிராபிக் மறுத்துவிட்டது. பயணிகள் அச்சத்தில் உறைந்த நிலையில் பைலட்டுகளின் சாமர்த்தியத்தால் ஸ்ரீநகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பாகிஸ்தான் அனுமதி மறுத்ததால் இந்திய விமானம் தன்னுடைய வழக்கமான பாதையிலேயே பயணித்துள்ளது.
















