இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 April 2025 3:06 PM IST
தஞ்சை அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் தீ விபத்து
ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் முதல் தளத்தில் உள்ள மகப்பேறு பிரிவு மற்றும் குழந்தை பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனை கண்ட கர்ப்பிணி பெண்கள் செய்வதறியாது அலறினர். தீ விபத்தை தொடர்ந்து கட்டிடம் முழுவதும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.
- 24 April 2025 1:06 PM IST
பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு, இன்று காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர் ஜந்து அலி ஷேக் வீரமரணம் அடைந்தார்.
- 24 April 2025 11:44 AM IST
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி
அட்டாரி - வாகா எல்லையில் நடைபெறும் பீட்டிங் ரிட்ரீட் நிறுத்தம்?
பீட்டிங் ரிட்ரீட் நிகழ்வை நிறுத்தி வைக்க இந்தியா முறையான உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளதாக தகவல்
- 24 April 2025 11:41 AM IST
பஹல்காம் தாக்குதலை அடுத்து பாக். தூதரகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் அகற்றம்
பாக். தூதரக அதிகாரிகள் வெளியேற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது
- 24 April 2025 11:29 AM IST
- நடிகையிடம் அத்துமீறியதாக எழுந்த புகாரில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ மன்னிப்பு கேட்டதாக தகவல்
- நடிகை காவல்துறைக்கு செல்லாததால் நடிகர் சங்கத்திலேயே பேசி தீர்வு காணப்படும் என தகவல்
- ஷைன் டாம் சாக்கோ மீது போலீசார் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பதிந்துள்ள வழக்கு விசாரணை தொடரும்
- 24 April 2025 11:29 AM IST
மயோனைஸ் பயன்பாட்டுக்கு தடை: மாற்று உணவுப் பொருள் என்ன?
சென்னை,
மயோனைஸ் என்பது முட்டையின் மஞ்சள் கரு, எண்ணெய் மற்றும் வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும் சாஸ் ஆகும். வெள்ளை நிறத்திலான இந்த சாஸ் தான் ஷவர்மா, தந்தூரி, சான்ட்விச், சலாட், பார்பிகியூ உள்பட துரித உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், மயோனைஸில் உள்ள சால்மோனெல்லா டைபிமுரியம், சால்மோனெல்லா என்டிரிடிடிஸ், எஸ்கெரிச்சியா கோலி மற்றும் லிஸ்டீரியா மோனோசைட்டோஜென்ஸ் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தமிழகத்தில் ஏப்ரல் 8-ந் தேதி முதல் ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மயோனைஸ் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மாற்று உணவுப் பொருள் என்ன? என்று உணவுப் பிரியர்கள் யோசித்து வருகின்றனர். தற்போது, அதற்கு மாற்றாக மிராக்கிள் விப், கிரேக்க தயிர், அக்வா பாபா, புளிப்பு கிரீம், வெண்ணெய், தஹினி, அவகேடோ, டோபு போன்றவற்றை பயன்படுத்தலாம் என்று சில உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
- 24 April 2025 10:49 AM IST
கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு
இந்திய அமைப்புகள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தகவல்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனையை மேற்கொள்வது வெறும் சோதனை மட்டுமா? அல்லது போருக்கு தயாராகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது