கரூர்: விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பலி
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தார்.
Live Updates
- 27 Sept 2025 8:29 PM IST
நாமக்கல்லில் பிரசாரத்தை முடித்துக் கொண்ட தவெக தலைவர் விஜய், அடுத்ததாக கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கரூரில் நடந்த பிரசாரக்கூட்டத்தில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கர நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளுவில் சிக்கிய பலர் மயக்கம் அடைந்தனர். அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
- 27 Sept 2025 8:28 PM IST
கரூர் விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
- 27 Sept 2025 7:31 PM IST
ஆம்புலன்சுக்கு வழி விட கூறிய விஜய்... அப்போது நடந்த சம்பவம்
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் விஜய்யின் பிரசாரம் இரவு 7.20 மணியளவில் தொடங்கியது. அப்போது, த.வெ.க. கொடியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. உடனே, அதற்கு வழி விடும்படி விஜய் கூறினார். அதன்பின்னே மற்றொரு ஆம்புலன்சும் சென்றது.
அப்போது, அந்த ஆம்புலன்சின் உட்புறம் முன்பகுதியில், த.வெ.க. கொடி வைக்கப்பட்டு இருந்தது. இதனை கவனித்த விஜய், என்ன ஆம்புலன்ஸ் நம்ம கொடியுடன் போகுது என கூறினார். அ.தி.மு.க. அரசியல் கூட்டத்தின் இடையேயும் இதுபோன்று ஆம்புலன்ஸ் சென்று அது சர்ச்சையானது. ஆம்புலன்ஸ் செல்ல கூடிய இடத்தில் பிரசார அனுமதி கொடுத்ததும் மறுபுறம் சர்ச்சையானது.
- 27 Sept 2025 6:58 PM IST
கரூரில் விஜய் பிரசார பகுதியில் மின்தடை
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்வதற்காக, தொண்டர்களின் மத்தியில் அவர்களின் ஊடே வாகனத்தில் விஜய் பயணித்து வருகிறார். அவருடைய பேச்சை கேட்க கட்டிடங்கள் மீதும் தொண்டர்கள் திரண்டு நிற்கின்றனர். விஜய் பிரசாரம் செய்ய கூடிய திடலில் மின்தடை ஏற்பட்டு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
- 27 Sept 2025 5:25 PM IST
பரமத்திவேலூரில் தொண்டர்களை நோக்கி கையசைத்து உற்சாகமூட்டிய விஜய்
நாமக்கல் பிரசாரம் முடிந்ததும், கரூர் செல்லும் வழியில் பரமத்திவேலூரில் மக்களை பார்த்ததும் விஜய்யின் வாகனம் நின்றது. வாகனத்தின் மேலே நின்றபடி மக்களை நோக்கி அவர் கையசைத்து தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார். அப்போது அவருக்கு வெற்றிலை மாலை பரிசாக வழங்கப்பட்டது.
- 27 Sept 2025 3:52 PM IST
விஜய் பிரசாரம்; 15 பேர் மயக்கம்
விஜய் பிரசாரத்தின்போது, கூடியிருந்த கூட்டத்தினரில் 15 பேர் மயக்கம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளனர்.
- 27 Sept 2025 3:10 PM IST
பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துவிட்டார்கள்? விஜய் கேள்வி
விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்த தேவையான தீர்வுகளை யோசித்து எங்க தேர்தல் அறிக்கையில் சொல்வோம். பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு என்ன செய்துவிட்டார்கள்? நீட் ஓழித்து விட்டார்களா? தமிழகத்திற்கு செய்ய வேண்டிய உதவிகள் செய்து கொடுத்தார்களா? கல்வி நிதி ஒதுக்கிவிட்டார்களா? அப்புறம் எதற்காக இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று நான் கேட்கவில்லை. புரட்சித்தலைவரின் தொண்டர்கள் கேட்கின்றனர் என நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
- 27 Sept 2025 3:02 PM IST
நாமக்கல் பிரசாரத்தில் அதிமுகவை தாக்கிய விஜய்
மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா-னு சொல்லிட்டு, ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துட்டு, பொருந்தாத கூட்டணிய அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி-னு சொல்லிட்டு இருக்காங்களே அவங்கள மாதிரி நாம இருக்க மாட்டோம் என்று விஜய் கூறினார்.
- 27 Sept 2025 3:01 PM IST
சொன்னார்களே... செய்தார்களா? - தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கிய பிறகு விக்கிரவாண்டி, மதுரை ஆகிய இடங்களில் பிரமாண்ட மாநாடுகளை நடத்தினார். அதன் பிறகு, சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த 13-ந் தேதி முதல் வாகன பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், கடந்த 2 வாரங்களில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரத்தை நிறைவு செய்த விஜய், இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். வழிநெடுக அவருக்கு த.வெ.க. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
நாமக்கல் பி.கே.புதூர் பகுதியில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் வாகனம் மீது நின்றபடி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியதாவது:-
“சாரி, கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. சாப்டீங்களா எல்லாரும்? போக்குவரத்து ஹப் ஆக உள்ள நாமக்கலும், முட்டையும் ரொம்ப பேமஸ். தமிழ்நாட்டு மக்களுக்கு சத்தான உணவான முட்டையை கொடுக்கும் ஊராக மட்டுமில்லாமல், உணர்ச்சியூட்டும் மண்ணும் இதுதான். அண்ணன் கேப்டன் பேசிய, 'தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா' என்ற நாடி நரம்பெல்லாம் ரத்தம் பாய்ச்சும் வரிகளை எழுதியவர், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதும், நாமக்கல்லை சேர்ந்த சுப்புராயன் அவர்கள் தான்.
இடஒதுக்கீடு உரிமையை வழங்கியதில் மிகப்பெரிய பங்குடைய, சென்னை மாகாண முதல்வராக பதவியேற்ற முதல் தமிழர் சுப்புராயன் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதி எண் 456-ல் கொடுத்தது யாரு? சொன்னாங்களே... செஞ்சாங்களா?" நாமக்கல்லில் முட்டை சேமிப்புக்கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பலஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. திமுகவுக்கு போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. திமுக - பாஜக மறைமுக உறவு. 2026-ல் தவெக - திமுக இடையேதான் போட்டி. நம்பிக்கையோடு இருங்கள்...சத்தியமாக பார்த்திடலாம்..இரண்டில் ஒரு கை பார்ப்போம் என்றார்.
- 27 Sept 2025 2:47 PM IST
6 மணி நேரம் தாமதத்திற்குப் பின் நாமக்கல்லில் பரப்புரையை தொடங்கினார் தவெக தலைவர் விஜய்.

















