‘வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன’ - பிரதமர் மோடி
வாழ்க்கையையும், வணிகத்தையும் எளிதாக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
மத்திய அரசின் ‘ரோஜ்கர் மேளா’ எனப்படும் வேலைவாய்ப்பு திட்டத்தின் 18-வது தவணையில் சுமார் 61,000 பேருக்கு அரசு பணிகளுக்கான நியமன ஆணைகள் இன்று வழங்கப்பட்டன. இது தொடர்பாக நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்களில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது;-
“இந்தியா பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் உள்ளனர். நமது அரசாங்கம் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இன்று பணி நியமனம் பெற்றவர்கள், நியமன கடிதத்தை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான அழைப்பாகவும், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கு உழைப்பதற்கான உறுதிமொழியாகவும் இதனை கருத வேண்டும்.
இளைஞர்கள் முந்தைய ஆண்டுகளில் அரசு அலுவலகங்களில் தங்கள் அனுபவங்களை நினைவு கூர்ந்து, தங்கள் பதவிக்காலத்தில் அதுபோன்ற கஷ்டங்கள் குடிமக்களைப் பாதித்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது குடிமக்கள் கடவுளுக்கு சமம் என்ற குறிக்கோளுடன் பணியாற்ற வேண்டும்.
சமீப காலங்களில், அரசாங்கம் நவீன உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முதலீடுகளைச் செய்துள்ளது. இது கட்டுமானம் தொடர்பான துறைகளில் அதிகரித்த வேலைவாய்ப்பை உருவாக்கியது. 'டிஜிட்டல் இந்தியா' ஒரு புதிய பொருளாதாரத்தை விரிவுபடுத்தியுள்ளது, இந்தியா அனிமேஷன், டிஜிட்டல் மீடியா மற்றும் பல துறைகளில் உலகளாவிய மையமாக உருவெடுத்துள்ளது.
வாழ்க்கையையும், வணிகத்தையும் எளிதாக்கும் சீர்திருத்த நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜி.எஸ்.டி.யில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தொழில்முனைவோர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு பயனளித்துள்ளன. மேலும் வரலாற்று சிறப்புமிக்க தொழிலாளர் சீர்திருத்தங்கள், தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளன. இது வணிகங்களுக்கும் பயனளித்துள்ளது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.








