60 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பந்தய சைக்கிள்கள் - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சிறந்த சைக்கிள் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கேடயங்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
சைக்கிள் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு சைக்கிள் சங்கத்தின் (TNCA) 60 ஆம் ஆண்டு விழாவையொட்டி, சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பந்தய சைக்கிள்களை வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“முதல்-அமைச்சர் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கு பெறும் வகையில் சென்னையில் ஆசிய, சர்வதேச அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்தி, சென்னையை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாகவும், உலகின் முக்கிய நகரமாகவும் உருவாக்கி வருகின்றார்.
மேலும் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளவும், வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெறவும், அதிநவீன உயர்தர விளையாட்டு உபகரணங்களை வாங்கவும், தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையை உருவாக்கி நிதியுதவி அளித்து வருகின்றார். மேலும், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி வருகின்றார்.
குறிப்பாக சைக்கிளிங் விளையாட்டு போட்டிகளுக்கு மிகுந்த ஆதரவு அளிக்கும் வகையில் தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் முதல் பயனாளியாக சைக்கிள் வீராங்கனை தபிதா தேர்வு செய்யப்பட்டு அவருக்கு அதிநவீன பந்தய சைக்கிளை வழங்கினார். சர்வதேச மற்றும் தேசிய அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த சைக்கிள் வீரர், வீராங்கனைகளுக்கு இதுவரை சுமார் 2 கோடி மதிப்பிலான 16 அதிநவீன பந்தய சைக்கிள்களையும், பதக்கம் வென்று வந்த வீரர், வீராங்கனைளுக்கு உயரிய ஊக்கத்தொகை, சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பயிற்சியாளர்கள் நியமனம், சைக்கிளிங் வீரர்களுக்கு விடுதி வசதி ஆகியவற்றை அளித்துள்ளார். மேலும் முதல்-அமைச்சர் சென்னையில் இந்தியாவின் முதல் BMX Track அமைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
Asian MTB Championship போட்டி, Gravel World Championship போட்டிகளில் பங்கேற்கவும் வீரர்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள சைக்கிள் போட்டிகளுக்கான சைக்கிள் பந்தய தளத்தை Cycling Velodrome மறுசீரமைத்து, தேசிய அளவிலான போட்டிகளை நடத்தியுள்ளார். சாம்பியன் அறக்கட்டளையின் கீழ் பந்தய சைக்கிள் பெற்ற Para Athlete பிரதீப் Asian Games Para Event தேர்வு பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் ஆகியோரின் முயற்சிக்கு துணை நிற்கும் வகையில் தமிழ்நாடு சைக்கிள் சங்கத்தின் (TNCA) 60 ஆம் ஆண்டு வைரவிழா இன்று (9.1.2026) தமிழ்நாடு துணை முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகமான குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்றது.
1966 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு சைக்கிள் சங்கம், இளம் வீரர்களின் திறன்களை மேம்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களை உருவாக்கி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் பல தங்கப் பதக்கங்களை தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ள TNCA, சைக்கிள் விளையாட்டை ஒரு கலாசார அடையாளமாகவும் வளர்த்துள்ளது.
30-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான சைக்கிள் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டு 76-வது தேசிய டிராக் சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி பாராட்டுப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, 2026 ஆம் ஆண்டு Track Asia Cup போட்டியை தமிழ்நாட்டில் நடத்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளது.
“60 Cycles for Young Dreams” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த விழாவில், சைக்கிள் பந்தயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 60 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு சைக்கிள் சங்கத்தின் (TNCA) 60 ஆம் ஆண்டு விழாவையொட்டி, சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சைக்கிள்களை வழங்கினார்.
மேலும் மூத்த சைக்கிள் வீரர்களுக்கும், சர்வதேச, தேசிய அளவிலான சிறந்த சைக்கிள் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் கேடயங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சைக்கிள் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






