300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்


300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்
x
தினத்தந்தி 19 Sept 2025 10:13 AM IST (Updated: 19 Sept 2025 4:11 PM IST)
t-max-icont-min-icon

ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலான நவீன கழிவுநீரகற்று இயந்திர வாகனத்தை துணை முதல்-அமைச்சர் கொடியசைத்து வழியனுப்பினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 18.9.2025 அன்று சென்னை திருவெற்றியூர் சுங்கச்சாவடி பகுதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதியின் கீழ் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள், பேட்டரியால் இயங்கும் நான்கு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்ட, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியில் கழிவுநீரகற்று பணி மேற்கொள்வதற்கான நவீன இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தை கொடியசைத்து வழியனுப்பினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் ஆற்றிய உரை

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் கலாநிதி வீராசாமியின் ஏற்பாட்டில், இன்றைய தினம் ரூ.75 லட்சம் மதிப்பில் 300 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்குகின்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உங்களையெல்லாம் நேரில் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.

இந்த தொகுதிக்கு மட்டுமல்ல, அவருடைய தொகுதிக்கு மட்டுமல்ல, எங்களுடைய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதிக்கும் கழிவு நீரகற்றும் பணிக்காக அவருடைய ஏற்பாட்டில் நிறுவனங்களின் சமூகப்பங்களிப்பு நிதியிலிருந்து ஒன்றரை கோடி ரூபாயில் அளவில் கழிவு நீர் அகற்றும் வாகனத்தை (Sewer Jetting Machine) இன்றைக்கு எங்களுக்கு வழங்கி இருக்கின்றார்.

வட சென்னை பகுதி மக்களுடைய மேம்பாட்டுக்காக, நிறுவனங்களின் சமூகப்பங்களிப்பு நிதியின் மூலமாக ரூ.5 கோடியை சென்னை மாநகராட்சிக்கு இன்றைக்கு அவர் அளித்திருக்கின்றார்.

இதற்காக உங்களின் அனைவரின் சார்பாகவும், வடசென்னையின் சார்பாகவும் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி உறுப்பினராகவும் உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் கலாநிதி வீராசாமிக்கு என்னுடைய பாராட்டுகள், வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போது வடசென்னையில் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாளும், எப்போது வந்தாலும் மிகச் சிறப்பான, எழுச்சியான, மகிழ்ச்சியான ஒரு வரவேற்பை எப்போதுமே எனக்கு கொடுத்திருக்கின்றது.

இன்றைக்கு இந்தியாவில் எத்தனையோ இயக்கங்கள் இருக்கிறது, இந்தியா முழுவதும் பல மாநில அரசுகள் இருக்கின்றது. ஆனால், நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் தான், நம்முடைய அரசு மட்டும் தான் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்காக தனியாக சிந்தித்து கொண்டிருக்கிறது. செயல்பட்டு கொண்டிருக்கிறது.

இன்றைக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஒரு துறையை ஆரம்பித்தது கலைஞர் தான் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லப்போனால், மாற்றுத்திறனாளிகள் என்ற பெயரை வைத்ததே கலைஞர் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதுமட்டுமல்ல, அந்தத்துறையை தனக்கு கீழ் ஒரு முதல்-அமைச்சர் வைத்துக் கொண்டார்கள் என்றால், அதுவும் முதன்முறையாக நம்முடைய கலைஞர் தான்.

இன்றைக்கு கலைஞர் வழியில் நம்முடைய முதல்-அமைச்சரும், மாற்றுத்திறனாளிகள் துறையை தன் வசம் வைத்து ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாக செய்து வருகின்றார். மாற்றுத்திறனாளிகளை மாற்றத்துக்கான திறனாளிகளாக நம்முடைய முதல்-அமைச்சர் உயர்த்திக் கொண்டு இருக்கின்றார்.

எனக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒரு நெருங்கிய சொந்தம் உண்டு, ஒரு அசைக்க முடியாத பந்தம் உண்டு. நான் சட்டமன்ற உறுப்பினரானதும், என்னுடைய முதல் கன்னிப்பேச்சில் நான் பேசியதே மாற்றுத்திறனாளிகளுக்கான கோரிக்கைகளுக்காக தான் அமைந்தது. மாற்றுத்திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுடைய பலவருட கோரிக்கையை நான் சட்ட மன்றத்தில் பேசி, முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

சென்ற வருடம் முதல்-அமைச்சர் அந்த கோரிக்கையை ஏற்று, இப்போது மாற்றுத்திறனாளிகள் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் தேர்ந்தெடுப்பதற்கான ஆணையை அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலமாக கிட்டத்தட்ட 15 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றீர்கள்.

இவ்வளவு நாள் கேட்கின்ற இடத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள், இன்றைக்கு உங்களுடைய தேவை அறிந்து, உங்களுடைய உரிமையை அறிந்து இனிமேல் கொடுக்கின்ற இடத்திற்கு வந்திருக்கின்றீர்கள். இனி, மாநகராட்சியிலிருந்து ஊராட்சிகள் வரை மாற்றுத்திறனாளிகள் உங்களுடைய உரிமைக் குரல் எதிரொலிக்க போகிறது.

எந்த திட்டத்தை செயல்படுத்தினாலும், அதில் மாற்றுத்திறனாளிகளை அரவணைத்து, அவர்களும் பயனடையும் வகையில் எல்லா திட்டங்களையும் அறிவித்திருக்கின்றார். உதாரணமாக முதல்-அமைச்சர் விடியல் பயணம் திட்டத்தை அறிவித்தார். உடனே மாற்றுத்திறனாளிகள் எல்லோரும் கோரிக்கை வைத்தார்கள். உடனே அந்த கோரிக்கையை ஏற்று மாற்றுத்திறனாளிகளும் அந்த திட்டத்தில் கட்டணமில்லா பயணத்தை மேற்கொள்ளலாம் என்று உடனடியாக அறிவித்தார்கள் நம்முடைய முதல்-அமைச்சர்.

சமீபத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துகின்ற வகையில் அரசு சார்பில் தாழ்தள பேருந்துகள் (Low – Lying Buses) சேவையும் நாம் தொடங்கி இருக்கின்றோம். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் இன்றைக்கு 840 தாழ்தள பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன.

கழக அரசு 2021ல் அமைந்ததுமே, நம்முடைய மெரினா கடற்கரையில் கடல் அலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கால்களை நனைக்க வேண்டும். கடல் அலையை அவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வகையில் ஒரு பிரத்யேக நடைபாதையை அமைத்தோம். மெரினா கடற்கரையை அடுத்து இப்போது, பெசன்ட் நகரிலும், தூத்துக்குடி கடற்கரையிலும் சிறப்பு நடைபாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. விரைவில், திருவான்மியூர், வேளாங்கண்ணி போன்ற கடற்கரைகளிலும் இத்தகைய நடைபாதைகளை அமைக்க இருக்கின்றோம்.

அதேமாதிரி சமீபத்தில் தொடங்கப்பட்ட தாயுமானவர் திட்டம் மூலம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று அவர்களுடைய ரேஷன் பொருட்களை நம்முடைய முதல்-அமைச்சர் கொடுப்பதற்கு உத்தரவிட்டு இருக்கிறார்கள். அதேமாதிரி விழுதுகள் என்ற திட்டத்தின் மூலம், உடல்நல பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. முக்கியமாக மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு தொகை, முன்பு இருந்த ஆட்சியில் ரூ. 1,000 இருந்தது. நம்முடைய அரசு பொறுப்பேற்றதும் அதை முதல்-அமைச்சர் ரூ. 2,000 உயர்த்தி கொடுத்தார்கள்.

அதுமட்டுல்ல, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி முதல், கல்லூரி, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு வரை, அந்த படிப்புக்கு ஏற்ப 2 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகையை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி வருகின்றது. மேலும், எங்களுடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகின்றோம். குறிப்பாக, வெளிநாடுகளில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இதுவரைக்கும் சுமார் 200 மாற்றுத்திறனாளிகளுக்கு 5 கோடி வரை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் வழங்கி இருக்கின்றோம். அதே மாதிரி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள் 200 பேருக்கு இதுவரைக்கும் நம்முடைய அரசு ரூ.25 கோடி பரிசுத் தொகையாக நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பையும் நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார். சென்றாண்டு மட்டும் 5 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலையை நம்முடைய முதல்-அமைச்சர் கொடுத்திருக்கிறார். இந்த முறை எங்களுக்கு முதல்-அமைச்சர் இலக்கு கொடுத்திருக்கிறார். 20 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு நீங்கள் விளையாட்டுத் துறை மூலமாக அரசு வேலை வழங்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். நிச்சயம் அதை செயல்படுத்தி, அந்த வேலைவாய்ப்பை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கொடுப்போம்.

நம்முடைய திராவிட மாடல் அரசு மட்டுமல்ல, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகமும் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்று பல்வேறு வகையிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஓர் உதாரணமாக தான், தி.மு.கவில் எத்தனையோ அணிகள் இருந்தாலும், நம்முடைய கழகத்தலைவர் புதிய அணியாக மாற்றுத்திறனாளிகள் அணியை தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில், தன்னம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் எடுத்துக்காட்டாகத் திகழுகின்ற மாற்றுத்திறனாளி சகோதரர்களுக்கு இன்றைய தினம் நலத்திட்ட உதவிகளை வழங்கியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது. வட சென்னை பகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக 5 கோடி ரூபாய் நிதி, சென்னை மாநகராட்சியிடம் இன்று ஒப்படைத்து இருக்கின்றோம். ஏற்கனவே, வட சென்னையை வளர்ந்த சென்னை ஆக்க 8 ஆயிரம் கோடி செலவில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இந்த நிதி பங்களிப்பின் மூலம் புதிய பணிகளும் நிச்சயம் தொடங்கும்.

சென்னையை சிங்காரச் சென்னை என்று சொல்லி வருகிறோம். அதை வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், செயலாக்க வேண்டும் என்று நினைக்கின்ற மக்கள் பிரதிநிதிகளில் மிக, மிக முக்கியமானவர் உங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சகோதரர் கலாநிதி வீராசாமி. அதற்கு ஓர் உதாரணமாக இன்றைக்கு ரூ.2 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் வாகனம் (Sewer Jetter Machine) கொடுத்து இருக்கிறார். அவருக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுகள். அதே மாதிரி CPCLக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

என்னதான் ஒரு அரசாக இருந்தாலும் சரி, ஒரு இயக்கமாக இருந்தாலும் சரி. பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடந்தாலும், தனியார் பங்களிப்போடு சேர்ந்து செய்கின்ற போது இன்னும் கூடுதல் மாற்றுத்திறனாளிகளுக்கு அந்த பயன்கள் எல்லாம் சென்று சேரும். இனிமேல் அவர்கள் எந்த நிகழ்ச்சிகள் நடத்தினாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என்று சொன்னால், நிச்சயம் நான் கலந்து கொண்டு அந்த உதவிகளை வழங்குவதற்கு தயாரக இருக்கிறேன் என்று இந்த மேடையில் உங்கள் முன் கூறிக் கொள்கின்றேன்.

இன்றைய தினம் நலத்திட்டங்களை பெற்ற மாற்றுத்திறனாளிகள் உட்பட அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த அரசு, நம்முடைய முதல்-அமைச்சர் என்றைக்கும் உங்களுடைய நலனையும், உரிமையையும் காக்கின்ற முதல்-அமைச்சராக இருப்பார். ஆகவே, நம்முடைய முதல்-அமைச்சருக்கு நீங்கள் பக்க பலமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், தாயகம் கவி, ஆர்.டி.சேகர், ஆர்.மூர்த்தி, ஜே.ஜே.எபினேசர், கே.பி.சங்கர், மண்டலக் குழுத் தலைவர் நேதாஜி யு.கணேசன், நிலைக்குழுத் தலைவர்கள் தா.இளைய அருணா, சர்பஜெயாதாஸ் நரேந்திரன், சி.பி.சி.எல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹெச்.சங்கர், இயக்குநர் (நிதி) ரோகித் குமார் அகர்வாலா உள்பட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story