தூய்மை பணியாளர்களுக்கு ரூ.37.79 லட்சம் நலத்திட்ட உதவி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை "கழிப்பறை திருவிழா 3.0" விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை,
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (5.7.2025) பெருநகர சென்னை மாநகராட்சியுடன் வாஷ் லேப், தூய்மை மிஷன், சியர் மற்றும் ரீசைக்கிள் பின் அமைப்புகள் இணைந்து கழிப்பறையை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான "கழிப்பறை திருவிழா 3.0" நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கழிப்பறைகளில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் டாய்லெட் ரிப்பேர் கபே வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, புகைப்பட கண்காட்சி மற்றும் அரங்கங்களை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் இணைய தளம், வடிவமைப்பு கருவிப் பெட்டி இணையதளம் (Design Tool Kit Website) ஆகியவற்றை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளியின் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சுகாதாரம் குறித்த புத்தகங்களை வெளியிட்டு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 17 பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு மேற்கொள்ளும் 150 மாணவ சுகாதார அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.