கொடைக்கானல் அணையில் தண்ணீருக்குள் நடந்த கண்ணீர் யுத்தம்: வேட்டையாட வந்த நாய்களுக்கு விடை கொடுத்த மான்


கொடைக்கானல் அணையில் தண்ணீருக்குள் நடந்த கண்ணீர் யுத்தம்: வேட்டையாட வந்த நாய்களுக்கு விடை கொடுத்த மான்
x
தினத்தந்தி 6 July 2025 5:30 AM IST (Updated: 6 July 2025 4:52 PM IST)
t-max-icont-min-icon

ஆபத்தான நேரத்தில், அணையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று மான் நினைக்கவில்லை.

கொடைக்கானல்,

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள மனோரத்தினம் அணைக்கு தண்ணீர் அருந்த மான் ஒன்று வந்தது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த அணையின் கரைப்பகுதியில் எந்த வித சலனமும் இன்றி நடந்து வந்த அந்த மானை, அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் பார்த்து விட்டன. அவைகளுக்கு ஒரே கொண்டாட்டம். வயிறு முட்ட இரை கிடைத்து விட்டது என்ற மகிழ்ச்சி அந்த நாய்களுக்கு. மானை வேட்டையாடி ரசித்து ருசித்து இரையாக்கி விட வேண்டும் என்ற எண்ணம் அவைகளுக்கு தோன்றியது.

தூரத்தில் இருந்து உற்சாகமாய் மானை துரத்தியபடி நாய்கள் வந்தன. இதை பார்த்து, கரையோரத்தில் நின்றிருந்த மான் கதி கலங்கி விட்டது. நாய்களிடம் சிக்கி பலியாவதை விட, வாழ்வதற்கு போராடி பார்க்கலாம் என்று அந்த மான் கருதியது. ஆபத்தான நேரத்தில், அணையில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று மான் நினைக்கவில்லை. நாய்களிடம் இருந்து தப்பிக்க தண்ணீருக்குள் குதித்து விட்டது மான். உயிரை பணயம் வைத்து மானை பின்தொடர்ந்து நாய்களும் அணைக்குள் இறங்கின. தண்ணீருக்குள் யுத்தம் தொடங்கியது.

உற்சாகத்தில் நாய்களும், உயிரை காப்பாற்றும் நிலையில் மானும் தண்ணீருக்குள் அங்கும் இங்குமாக அலைந்தன. நாய்களின் விழிகளில் இருந்து தப்பிய மானுக்கு வனப்பகுதியில் வழி கிடைத்தது. சுமார் 40 நிமிடங்கள் நாய்களுடன் மான் போராடியது. ஒரு கட்டத்தில் தப்பித்தோம், பிழைத்தோம் என அந்த மான், தண்ணீரில் இருந்து கரைக்கு ஏறி அடர்ந்த வனப்பகுதிக்குள் துள்ளிக்குதித்து தப்பி ஓடி விட்டது. அதன்பிறகு அந்த நாய்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்று விட்டன. துரத்தி வந்த தெருநாய்களிடம் இருந்து லாவகமாக தப்பிய காட்சி அணையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

1 More update

Next Story