“உங்க கனவ சொல்லுங்க" திட்டம்: தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்புகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்


“உங்க கனவ சொல்லுங்க திட்டம்: தன்னார்வலர்களுக்கு கைபேசி இணைப்புகளை வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
x

தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை

சென்னை மாவட்டத்தில் "உங்க கனவ சொல்லுங்க" திட்டப் பணிகளை மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் “உங்க கனவ சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று கடந்த ஐந்து ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தினை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும், அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக அறிந்து கொள்ளும் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தினை செயல்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

"உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தில், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1.91 கோடி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள குடும்பங்களை சந்தித்து, அவர்கள் பயன்பெற்ற திட்டங்கள் மற்றும் கனவுகளை கண்டறியும் களப்பணி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 50,000 தன்னார்வலர்களை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் தெரிவிக்கும் கருத்துகளை பதிவு செய்ய தனியாக கைபேசி செயலி இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு முறை செல்வர். முதல் முறை வீட்டிற்கு செல்லும் போது விண்ணப்ப படிவத்தினை குடும்பத் தலைவர் / உறுப்பினரிடம் வழங்குவர். அவ்விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசு திட்டங்களின் பெயர் பட்டியல் விவரங்களை அவர்களிடம் தெரிவித்து, படிவத்தினை பூர்த்தி செய்து தரும்படி கோருவர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை சரிபார்த்து கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்வர். கைபேசி செயலியில் பதிவேற்றிய பின்னர் அக்குடும்பத்திற்கு தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டையினை வழங்குவர். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.

முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைத்த “உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தின் கீழ், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற காணொலி காட்சி நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “உங்க கனவ சொல்லுங்க" திட்டப் பணிகளை சென்னை மாவட்டத்தில் மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்.

மேலும் தன்னார்வலர்களிடம் தங்கள் கனவினை தெரிவிப்பவர்களுக்கான தனித்துவமான அடையாள எண்ணுடன் கூடிய கனவு அட்டைகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை துணை முதல்-அமைச்சர் வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story