வைகை அணை நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்தது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து வைகை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் சுருளியாறு, கொட்டக்குடி ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
அணைக்கு நேற்று காலை 6 மணிக்கு வினாடிக்கு 2,268 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை 11 மணிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர தொடங்கியது. இதனால் நேற்று மாலைக்குள் வைகை அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்து நீர்மட்டம் 66 அடியை எட்டியது.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 68.50 அடியாக உயரும் போது 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் கொடுக்கப்படும். பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரியாக ஆற்றில் திறக்கப்படும்.
பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே வைகை அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் எந்த நேரத்திலும் உபரியாக ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.






