தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர் உயிரிழப்பு

தவெக மாநாட்டுக்கு வந்த தொண்டர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் 2-வது மாநில மாநாடு இன்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தவெக மாநாட்டுக்கு சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் (33 வயது) என்பவர் நண்பர்களுடன் வேனில் புறப்பட்டு வந்துள்ளார். மதுரை சக்கிமங்கலம் அருகே வந்தபோது பிரபாகரன் சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் பிரபாகரன் மீண்டும் திரும்பி வரவில்லை.
இதையடுத்து நண்பர்கள் அவரை தேடிச் சென்றுள்ளனர். அப்பொழுது பிரபாகரன் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






