பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிவு - உபரிநீர் திறப்பு குறைப்பு

கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ந்தேதி தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை வரை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைகள், ஏரிகள், குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பின. சில இடங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. 105 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதற்கிடையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை குறைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்து 4,712 கன அடியில் இருந்து 3,017 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி பாசன தேவை மற்றும் குடிநீர் தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் 950 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.






