மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

மும்மொழிக் கொள்கையை எந்த சூழ்நிலையிலும் தமிழக அரசு அனுமதிக்காது என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமி, சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சிறு விளையாட்டரங்கம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது;
கலைஞருடைய நூற்றாண்டை முன்னிட்டு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோபலபுரத்தில் சர்வதேச தரத்திலான பாக்ஸிங் அகாடமி அமைக்க முடிவு செய்யப்பட்டது. 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இதற்கான பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். தற்போது அந்த பணிகள் முடிவுற்று வருகின்ற 25 ந்தேதி இந்த அகாடமியை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்கள். சென்னையில் இருந்து பல சர்வதேச பாக்ஸிங் வீரர், வீராங்கனைகளை உருவாக்க இந்த கலைஞர் நூற்றாண்டு குத்துச் சண்டை அகாடமி முழு அளவில் உபயோகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
தமிழ்நாட்டில் எப்போதுமே இருமொழிக் கொள்கைதான். நாங்கள் எந்த காலத்திலும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டாம் என்று பேரறிஞர் அண்ணா சொல்லியுள்ளார். எந்த வகையில் முயன்றாலும், எந்த நேரத்திலும், எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், தமிழக அரசு அனுமதிக்காது, தமிழ்நாட்டு மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள்.
நாடு முழுக்க ஏற்றுக் கொண்டால், நாங்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இந்தியா என்பதே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த ஒன்றியம்தான் இந்தியா என்பது. அதனால், ஒவ்வொரு மாநிலத்திற்கும், ஒரு அடையாளங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு புரிதல் உள்ளது. நாங்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டு மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.






