தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தேவை: கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகள் என்ன? - மத்திய மந்திரி பதில்


தமிழகத்தில் அதிகரிக்கும் மின் தேவை: கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகள் என்ன? - மத்திய மந்திரி பதில்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Aug 2025 5:01 PM IST (Updated: 11 Aug 2025 5:16 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகும் என்று மத்திய மின்சாரத் துறை இணை மந்திரி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கணக்கில்கொண்டு கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்ய மத்திய அரசு எடுத்த முயற்சிகள் என்ன? இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை முறையாகப் பயன்படுத்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி என்.வி.என். சோமு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலளித்து மத்திய மின்சாரத்துறை இணை மந்திரி ஶ்ரீபாத் நாயக் தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் தற்போதைய மின் உற்பத்தி திறன் 43,107 மெகாவாட்டாக இருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் இதை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, அடுத்த மூன்றாண்டுகளில் அனல் மின்நிலையங்கள் மூலம் கூடுதலாக 3,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதே காலகட்டத்தில் அணுமின் நிலையங்கள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்காக 2,152 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். அடுத்த மூன்றாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் மூலம் கூடுதலாக 6 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும்.

இப்படி தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மிகை மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பவும், அவசர காலத்தில் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு மின்சாரத்தை எடுத்து வரும் வகையிலும் மின் பாதைகள் மற்றும் அதற்கான இணைப்பு ஏற்பாடுகள் இதர தென் மாநிலங்களுடனும், மத்திய தொகுப்புடன் நல்ல முறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின் உற்பத்தி துறையில் குறிப்பாக புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் முதலீட்டை ஊக்கப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக அடுத்த ஐந்தாண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் திட்டங்களை வகுத்துள்ளது. இந்த விஷயத்தில் முதலீட்டாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாநிலங்களுக்கிடையே மின்சாரத்தை எடுத்துச் செல்ல வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தியை, மாநிலத்துக்குள்ளேயே பிற இடங்களுக்கும்; பிற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்ல மின் தொடரமைப்பில் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதிகளை செய்துகொடுத்த பின்பு, மின் உற்பத்தியில் 100 சதவீத அந்நிய முதலீட்டை சுலபமாக அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கென சம்பந்தப்பட்ட அமைச்சகத்தில் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை தங்கு தடையின்றி மேற்கொள்ள தேவையான துணை மின் நிலையங்கள், மின் தொடரமைப்பு கட்டமைப்புகளை உருவாக்க பசுமை எரிசக்திப் பாதைத் திட்டம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கடற்கரையில்லாத இடங்களில் 500 மெகாவாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தி செய்ய தனித்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மின் உற்பத்தியில் தனியார் பங்களிப்பை ஊக்கப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான நீரேற்று மின் உற்பத்தி மற்றும் நீர் மின் நிலையங்களை அமைக்க தமிழ்நாடு அரசு தனிக் கொள்கைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

மொத்தம் 13,500 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்று மின் திட்டங்களை தமிழ்நாடு அரசு தனியார் மற்றும் அரசின் பங்களிப்போடு செயல்படுத்தி வருகிறது. இதை மேலும் அதிகப்படுத்த தகுதியான தனியார் நிறுவனங்களையும் தமிழ்நாடு அரசு அடையாம் கண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு மந்திரி ஶ்ரீபாத் நாயக் தெரிவித்தார்.

1 More update

Next Story