‘மல்டி ஆக்சில்’ சொகுசு பஸ்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? எஸ்.இ.டி.சி தகவல்


‘மல்டி ஆக்சில்’ சொகுசு பஸ்கள் எப்போது பயன்பாட்டுக்கு வரும்?  எஸ்.இ.டி.சி தகவல்
x
தினத்தந்தி 4 Nov 2025 7:08 PM IST (Updated: 4 Nov 2025 7:09 PM IST)
t-max-icont-min-icon

20 ‘மல்டி ஆக்சில்’ சொகுசு பஸ்கள் அடுத்த மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

சென்னை,

அரசு விரைவு போக்குவரத்துக்கழகத்திற்கு 2025-26-ம் ஆண்டுக்கு 130 புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 110 பஸ்கள் ஏ.சி. வசதியில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டது. எஞ்சிய 20 பஸ்களும் இருக்கை வசதி கொண்ட ‘மல்டி ஆக்சில்’ சொகுசு பஸ்கள் ஆகும். தனியார் ஆம்னி பஸ்களுக்கு நிகராக அரசு பஸ்களை தரம் உயர்த்தும் நடவடிக்கையில் ஒன்றாக இந்த 20 ‘மல்டி ஆக்சில்’ பஸ்களும் இருக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கான இந்த 130 பஸ்களுமே கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 20 மல்டி ஆக்சில் பஸ்களும் இந்த மாத இறுதிக்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இந்த மல்டி ஆக்சில் பஸ்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஏ.சி. வசதியில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 பஸ்களில் 2 பஸ்களுக்கான அடிப்பகுதி வந்துள்ளதாகவும், அவை பெங்களூருவில் கூண்டு கட்டப்பட்டு வருகிறது என்றும், இந்த பஸ்கள் கூண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததும் எஞ்சிய பஸ்கள் விரைவாக கூண்டு கட்டப்பட்டு அந்த பஸ்களும் பொங்கல் பண்டிகைக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்காக வடிவமைக்கப்பட்டு உள்ள ‘மல்டி ஆக்சில்’ பஸ்களின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதேபோன்று, அரசு விரைவு போக்குவரத்துக்கழக டிரைவர்களுக்கு வெள்ளை நிறச் சீருடை, கருநீல நிறத் தொப்பி, கருப்பு நிற பெல்ட் மற்றும் சட்டைப்பையின் மேல் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தால் பயணிகளுக்கு ஆர்வத்தை வழங்கும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.

1 More update

Next Story