‘டபுள் இன்ஜின் அரசு மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை?’ - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

எந்த கெட்டப்பில் வந்தாலும் பா.ஜ.க.வுக்கு கெட் அவுட்தான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள திருமலைசமுத்திரம் பகுதியில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு இன்று நடைபெற்றது. தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவருமான கனிமொழி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தி.மு.க. மகளிர் அணியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-
“சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி ஏராளமான பொய்களை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். உலக வரைப்படத்தில் இருக்கும் அத்தனை நாடுகளுக்கும் போய்விட்டு, தேர்தல் காலங்களில் பிரதமர் மோடி இந்தியாவுக்கு வருவார். தேர்தல் சீசன் என்பதால் தமிழ்நாட்டிற்கு இனி அடிக்கடி வருவார்.
பிரதமர் வருகிறார் என்றதும் அவரிடம் நான் பல கேள்விகளை முன்வைத்தேன். ஆனால் அவர் எதற்கும் பதில் சொல்லாமல், வழக்கம்போல் பழைய கண்டென்ட்டை பேசிவிட்டு நமக்கு புது கண்டென்ட் கொடுத்துச் சென்றிருக்கிறார். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற அபாண்டமான பொய்யை சொல்லியிருக்கிறார்.
பெண்களாகிய நீங்கள் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? ஆயிரக்கணக்கான பெண்கள் கூடியிருக்கும் இந்த மாநாட்டின் மேடையில் நின்று நான் தலைநிமிர்ந்து சொல்கிறேன், இந்தியாவிலேயே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் எங்கள் தமிழ்நாடுதான். இங்குதான் அதிகமான பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.
பிரதமர் மோடி மணிப்பூரை மறந்துவிட்டாரா? 2023-ல் எரியத் தொடங்கிய மணிப்பூரில், இதுவரை அரசின் கணக்குப்படி 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம். மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். சுமார் 1 லட்சம் பேர் மாநிலத்தை விட்டே இடம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.
3 ஆண்டுகளாக மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் மணிப்பூரை ஆண்டது பா.ஜ.க.தான். ஆனால் உங்கள் டபுள் இன்ஜின் மணிப்பூர் மக்களை ஏன் காப்பாற்றவில்லை? மணிப்பூரை ஆண்ட பா.ஜ.க.வால் ஏன் அங்கு அமைதியை ஏற்படுத்த முடியவில்லை? இதுதான் பா.ஜ.க.வின் லட்சணமா? இதையெல்லாம் மறைத்துவிட்டு அமைதியான தமிழகத்தின் மீது அவதூறை பரப்ப வேண்டாம்.
ஏற்கனவே 2019 மற்றும் 2021 தேர்தல்களில் பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி அமைத்து தோற்றுப் போனார்கள். அடுத்து 2024 தேர்தலில் பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் பிரிந்ததாக கூறி மறைமுக கூட்டணியோடு வந்தார்கள். ஆனால் எந்த கெட்டப்பில் வந்தாலும் உங்களுக்கு கெட் அவுட் தான் என்று தமிழக மக்கள் சொல்லிவிட்டார்கள்.
இப்போது உடைந்துபோன கூட்டணியை ஒட்டியெடுத்து வந்து தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்லிக் கொண்டு வந்திருக்கிறார்கள். இது பதவியை தக்கவைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி உருவாக்கியுள்ள கூட்டணி. மிரட்டலால், உருட்டலால் உருவான பிளாக்மெயில் கூட்டணி.
தங்கள் கண்ணசைவுக்கு ஏற்ப தலையாட்டும் எடுபிடிகளை வைத்துக் கொண்டு டெல்லியில் இருந்தபடி தமிழ்நாட்டை ஆளலாம் என்று பா.ஜ.க. நினைக்கிறது. அவர்களின் கூட்டணிக்கு எதிர்வரும் தேர்தலில் தமிழ்நாடு சரியான பதிலடியை கொடுக்கும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






