தீர்ப்பாய சீர்திருத்த சட்டம் தொடர்பான வழக்கை மத்திய அரசு இழுத்தடிக்க நினைப்பது ஏன்? வீரமணி கேள்வி

மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.
சென்னை ,
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2021-ஆம் ஆண்டின் தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம், அரசியலமைப்பு சட்டத்தின்படி செல்லத்தக்கது அல்ல என்று தொடுக்கப்பட்ட வழக்கினை, உச்சநீதிமன்றம் தற்போது முழுமையாக விசாரித்து முடித்துள்ளது. இந்நிலையில் திடீரென, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு இதனை விசாரித்து, வழக்கின் இறுதித் தீர்ப்பு இந்த மாதம் வெளிவரவிருக்கும் நிலையில், மீண்டும் வழக்கை நவம்பர் 23-ந்தேதிக்குப் பிறகு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையை மத்திய அரசு எழுப்பியுள்ளது. தீர்ப்பாயச் சீர்திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிந்தபின்பும் வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏன்?.
இதை புரிந்துகொண்ட பி.ஆர்.கவாய் ஒன்றிய அரசைக் கண்டித்து, "தீர்ப்புக்கு தயாராக உள்ள நிலையில், இப்படி மீண்டும் வாதங்களை தொடரக் கேட்பதா?" என்று வேதனையுடன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனாலும் நீதித்துறையின் மாண்புகளை பாதுகாக்க தனது கடமையை வழுவாமல், நழுவாமல் செய்து வருகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






