மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது - மு.க.ஸ்டாலின்

வரிக்குறைப்பின் பயன்கள் நேரடியாகச் சாமானிய மக்களைச் சென்றடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஜி.எஸ்.டி. வரி எளிமைப்படுத்தல் குறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
மாநிலங்களின் வருவாயைப் பாதுகாக்காமல், ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மக்களுக்குப் பயனளிக்காது! மத்திய அரசு முன்மொழிந்துள்ள ஜி.எஸ்.டி. வரி எளிமைப்படுத்தல் குறித்து கலந்தாலோசிப்பதற்காக டெல்லியில் எதிர்க்கட்சிகள் ஆளும் எட்டு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தச் சீர்திருத்தங்களின் நோக்கத்தை வரவேற்கும் அதே வேளையில், மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்புக்கு அவசியமான மாநில வருவாயைப் பாதிக்காத வகையில் இவை அமைய வேண்டும், வரிக்குறைப்பின் பயன்கள் நேரடியாகச் சாமானிய மக்களைச் சென்றடைய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளோம்.
இதுகுறித்து தயார் செய்யப்பட்டுள்ள ஒருமித்த வரைவறிக்கை ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, மாநில வருவாயினைப் பாதுகாத்து, நியாயமான முடிவுகளை உறுதிசெய்ய அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் ஆதரவு கோரப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






