தென் தமிழகத்தில் இன்று மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தென் தமிழகத்தின் (தென் மாவட்டங்கள்) ஓரிரு இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். 31-ந்தேதி மற்றும் பிப்ரவரி 1-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்றும், நாளையும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்.
29, 30 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






