சென்னையில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய மழை
வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.
Live Updates
- 29 Nov 2024 1:40 AM IST
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 29 Nov 2024 1:21 AM IST
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவில் கனமழை பெய்து வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
- 28 Nov 2024 11:55 PM IST
சென்னையில் பலத்த மழை
சென்னையில் இரவு 11 மணியளவில் திடீரென சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது. சென்னையி நள்ளிரவு ஒரு மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.
- 28 Nov 2024 8:19 PM IST
புயலாக வலுவடையாது
வங்க கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடையாது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து நாளை மறுநாள் (நவ.30) காலை காரைக்கால் - மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 28 Nov 2024 7:47 PM IST
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (நவ.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 28 Nov 2024 7:20 PM IST
புதுச்சேரி - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரி- காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் (30-ம் தேதி) புதுவை மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- 28 Nov 2024 6:51 PM IST
கடலூர் மாவட்டத்தில் பள்ளி-கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
- 28 Nov 2024 6:21 PM IST
புயல் எச்சரிக்கை - விமான பயணிகளுக்கு அறிவுறுத்தல்
புயல் எச்சரிக்கை காரணமாக வானிலை நிலவரத்தைப் பொறுத்து விமானங்கள் இயக்கப்படும் என சென்னை விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விமான சேவைகள் குறித்து பயணிகள் கேட்டறிந்து பயணத்திற்கான திட்டமிடலை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும்பட்சத்தில் சிறிய ரக விமானங்களை இயக்கலாமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
- 28 Nov 2024 5:54 PM IST
மழைக்குப்பின் பாதிக்கப்பட்ட பயிர்கள் கணக்கீடு
மழைக்குப்பின் ஓரிரு நாட்களில் பாதிப்புக்குள்ளான பயிர்கள் கணக்கெடுக்கப்படும் என அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
- 28 Nov 2024 3:47 PM IST
தற்காலிக புயலாக மாறும்
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலைக்குள் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும்.வரும் 30ம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் காரைக்காலுக்கும், மகாபலிபுரத்திற்கும் இடையே கரையை கடக்கும். கரையை கடக்கும்போது 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.












