அபுதாபியில் 'பறக்கும் டாக்சி' சோதனை வெற்றி - அடுத்த ஆண்டு அறிமுகம்


அபுதாபியில் பறக்கும் டாக்சி சோதனை வெற்றி - அடுத்த ஆண்டு அறிமுகம்
x
தினத்தந்தி 14 Jun 2024 8:39 PM IST (Updated: 14 Jun 2024 8:48 PM IST)
t-max-icont-min-icon

அபுதாபியில் பறக்கும் டாக்சி சோதனை வெற்றிபெற்றுள்ளது.

அபுதாபி,

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மாற்று எரிசக்தி பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தவும் பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, நாடு முழுவதும் வரும் காலங்களில் பறக்கும் டாக்சியை பயன்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், எரிபொருளை சேமிக்கவும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

இதில் தற்போது அபுதாபியில் பறக்கும் டாக்சி இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஆர்ச்சர் நிறுவனத்தின் மிட்நைட் ஏர் கிராப்ட் என்ற விமானம் அபுதாபியில் பறக்கும் டாக்சியாக இயக்கப்பட உள்ளது.

இந்நிலையில், அபுதாபியில் பறக்கும் டாக்சி இன்று வெற்றிகரமாக வானில் இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த விமானம் மேற்புறம் மற்றும் பக்கவாட்டில் சுழலும் இறக்கைகளை வைத்துள்ளதால் ஹெலிகாப்டர் போல செங்குத்தாக நின்ற இடத்தில் இருந்தே மேலெழும்பி பறக்க முடியும். அதேபோல் விமானம் போன்று நேராக செல்லக்கூடியது ஆகும்.

சோதனை ஓட்டத்தின்போது பறக்கும் டாக்சி மணிக்கு 360 கி.மீட்டர் வேகத்தில் வானில் பறந்து சென்றது. இந்த விமானத்தை பயணிகள் மட்டுமல்லாமல் சரக்குகளை ஏற்றி செல்லவும் பயன்படுத்த முடியும். இந்த பறக்கும் டாக்சி திட்டம் அடுத்த ஆண்டு அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்த பறக்கும் டாக்சி திட்டத்தால் அபுதாபி-துபாய் இடையே பயண நேரம் 10 முதல் 20 நிமிடமாக குறையும். நகருக்குள் மட்டும் செல்ல 350 திர்ஹாமும், வெளியூர்களுக்கு செல்ல 800 முதல் 1,500 திர்ஹாம் வரையும் கட்டணங்கள் விதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பறக்கும் டாக்சி விமானம் 4 பேர் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story