துபாயில் பிரமாண்ட ‘தங்க வளாகம்' - ஒரே இடத்தில் 1,000 நகை வர்த்தக நிறுவனங்கள்

உலகின் முதலாவது தங்கத்திலான தெரு துபாயில் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்,
துபாய் தேரா பகுதியில் நேற்று ‘கோல்டு டிஸ்ட்ரிக்ட்’ என்ற பெயரில் தங்க வளாகம் அறிமுகம் செய்யப்பட்டது. தனியார் வளர்ச்சி நிறுவனம் மூலம் அந்த பகுதியில் அமைக்கப்படும் தங்க நகை வர்த்தக நிறுவனங்கள் மூலமாக துபாயை நகை வர்த்தகத்திற்கான உலகின் முன்னணி மையமாக வலுப்படுத்தும் முயற்சி ஆகும்.
இது ஒருங்கிணைந்த நகை வர்த்தக சுற்றுச்சூழல் அமைப்பாக உருவாக்கப்படுகிறது. சில்லரை விற்பனை, மொத்த வியாபாரம் மற்றும் முதலீடு ஆகியவைகளை உள்ளடக்கிய செயல்பாடுகளை கொண்ட நிறுவனங்கள் இந்த வளாகத்தில் செயல்பட உள்ளன. இந்த வளாகத்தில் மொத்தம் சுமார் 1,000 நகை வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நகைக்கடைகளை நிறுவ உள்ளன.
மலபார் கோல்டு அண்ட் டயமண்ட்ஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் பிரமாண்டமான கிளைகளை அங்கு நிறுவி உள்ளன. இதில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமான கிளையை இந்த வளாகத்தில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கிளை மத்திய கிழக்கு பிரதேசத்தில் மிகப்பெரிய சில்லரை விற்பனை நிலையம் என்ற பெருமையை சேர்க்க உள்ளது.
இங்கு தங்க நகை வர்த்தக நிறுவனம் மட்டுமின்றி வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் ஆகியவைகளின் விற்பனை நிறுவனங்கள் தங்கள் கடைகளை நிறுவ உள்ளன. அதேபோல் மிகவும் முக்கியமாக இந்த வளாகத்தில் உலகின் முதலாவது தங்கத்திலான தெரு ஒன்று அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சாலை மற்றும் உள்கட்டமைப்புகள் தங்கத்தில் அமைக்கப்படுமா? போன்ற விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என துபாய் நகை குழும அதிகாரிகள் அறிவித்தனர். துபாய் தங்க வளாகத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறையின் ஒரு அங்கமான துபாய் விழாக்கள் மற்றும் சில்லரை விற்பனை நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி அகமது அல் காஜா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘‘தங்கம் துபாயின் கலாசாரம் மற்றும் வணிக கூட்டமைப்பில் ஆழமாக பிணைக்கப்பட்டுள்ளது. இது நமது பாரம்பரியம், செழிப்பு மற்றும் நீடித்து கட்டமைக்கும் உணர்வை குறிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க திட்டம் மூலம் படைப்பாற்றல் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த ஒரு சகாப்தம் படைக்க காத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.






