துருக்கியில் வெப்பக்காற்று பலூன் தரையில் மோதி விபத்து - ஒருவர் பலி, 19 பேர் காயம்

காயமடைந்த சுற்றுலா பயணிகள் உடண்டியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்காரா,
மத்திய துருக்கியில் உள்ள பரந்த நிலப்பரப்பில் வெப்பக்காற்று பலூன் சவாரி ஒரு பிரபலமான சுற்றுலா நடவடிக்கையாக திகழ்கிறது. இந்த பகுதி பழங்கால தேவாலயங்களால் சூழப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட கப்படோசியாவின் கூம்பு வடிவ பாறை அமைப்புகள் உள்ளிட்டவை இங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களாக விளங்குகின்றன.
இந்நிலையில் மத்திய துருக்கியில் உள்ள அக்சரய் மாகாணத்தில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வெப்பக்காற்று பலூன் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த சுற்றுலா பயணிகள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனிடையே, துருக்கியில் உள்ள இல்ஹாரா பள்ளத்தாக்கில் இன்று மற்றொரு விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அங்குள்ள உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தரையில் இருந்து மேலே எழும்பிய வெப்பக்காற்று பலூன், கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதியதாகவும், இந்த சம்பவத்தில் 12 இந்திய சுற்றுலா பயணிகள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.






