ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு - தலைநகரில் போராட்டம்

வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹோண்டுராஸ் அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு - தலைநகரில் போராட்டம்
Published on

டெகுசிகல்பா,

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். அந்த நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 30-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பல்வேறு கட்டங்களாக எண்ணப்படுகின்றன. அதன்படி, முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவு கடந்த 2-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதில் ஹோண்டுராஸ் லிபரல் கட்சி வேட்பாளர் சால்வடோர் நஸ்ரல்லாவை விட 515 வாக்குகள் வித்தியாசத்தில் தேசிய கட்சி வேட்பாளர் நஸ்ரி அஸ்புரா முன்னிலையில் உள்ளார். இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக லிபரல் கட்சி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, தலைநகர் டெகுசிகல்பாவில் வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டிருக்கும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலைகளில் டயர்களை கொளுத்தி, தேசிய கட்சிக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையில், ஹோண்டுராஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com