நாடாளுமன்ற தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை


நாடாளுமன்ற தேர்தல்: தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
x
தினத்தந்தி 18 March 2024 10:31 AM GMT (Updated: 18 March 2024 10:49 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை,

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் மாதம் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை முற்றிலும் தடுக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள், அலுவலர்கள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் வேட்புமனு தாக்கலுக்கான பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் செலவிற்காக தமிழ்நாடு அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவுத் தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் ரூ.95 லட்சம் வரை செலவு செய்யலாம் என்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.


Next Story