மும்பை பொதுக்கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு


மும்பை பொதுக்கூட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு
x

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மும்பையில் ராகுல்காந்தி நிறைவு செய்தார். இதையொட்டி எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

மும்பை,

காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரை தொடங்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைந்தது. சுமார் 4 ஆயிரம் கி.மீ. தூரம் ராகுல்காந்தி நடந்தே இந்த யாத்திரையை மேற்கொண்டிருந்தார்.

இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடர்ந்து ராகுல்காந்தி மீண்டும் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் 2ம் கட்டமாக கடந்த ஜனவரி 14ம் தேதி யாத்திரை தொடங்கினார். மணிப்பூரில் இருந்து மராட்டிய தலைநகர் மும்பை வரை யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையில் அவர் பெரும்பாலும் திறந்தவெளி வாகனத்தில் அமர்ந்தபடி சென்று மக்களை சந்தித்தார். யாத்திரையின் இறுதியாக ராகுல்காந்தி நேற்று மராட்டிய மாநிலம் மும்பை வந்தார். தானே வழியாக மும்பை வந்த ராகுல்காந்தி தனது யாத்திரையை நிறைவு செய்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் மும்பை சிவாஜிபார்க்கில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஷ்டிரீய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்கண்ட் முதல்-அமைச்சர் சம்பாய் சோரன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ்-சரத்சந்திரபவார் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.


Next Story