வெள்ளைக்கழிச்சல், அம்மை நோய்களில் இருந்து நாட்டுக்கோழிகளை காப்பது எப்படி?


வெள்ளைக்கழிச்சல், அம்மை நோய்களில் இருந்து நாட்டுக்கோழிகளை காப்பது எப்படி?
x

கிராமங்களில் நாட்டுக்கோழிகள் திடீரென்று அதிக அளவில் இறப்பதற்கு முக்கிய காரணம் அவற்றுக்கு முறையாக தடுப்பூசிகள் போடாததுதான்.

குறிப்பாக வெள்ளைக்கழிச்சல் மற்றும் அம்மை நோய்களால்தான் இறப்பு ஏற்படும். இந்த நோய்களை தடுக்க தடுப்பூசி போடுவது அவசியம் ஆகும்.

வெள்ளைக்கழிச்சல் நோய்

வெள்ளைக்கழிச்சல் நோய் நாட்டுக்கோழிகளை மிகவும் கடுமையாக பாதித்து கோழிகளில் 20 முதல் 90 சதவீதம் வரை இறப்பை ஏற்படுத்தும். இந்த நோய் பருவ மாற்றங்களின்போது அதிக அளவில் ஏற்பட்டாலும் ஆண்டு முழுவதும் நாட்டுக்கோழிகளை பாதிக்கிறது. இந்த நோய் காற்று, நீர், தீவனம், பறவைகள், பாதிக்கப்பட்ட கோழிகள் மற்றும் ஆட்கள் மூலம் விரைவாக பரவுகிறது.

வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்குதலால் கோழிகளின் குடலும், நரம்பு மண்டலமும் பாதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகள் தீவனம் மற்றும் நீர் உட்கொள்ளாது. வெள்ளையாகவோ பச்சையாகவோ கழியும். எச்சமிடும்போது ஒரு காலை மட்டும் தூக்கிக்கொள்ளும். சுவாச உறுப்புகள் பாதிக்கப்படுவதால் வாயினால் மூச்சுவிடும்.

சில கோழிகள் தன் கழுத்தை திருக்கி கொள்ளுதல், தலையை வேகமாக சுழற்றுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இறக்கைகளும், கால்களும் செயல் இழந்து துவண்டு தொங்கும். கோழியின் வயிற்று பகுதியில் ரத்த புள்ளிகளும், குடலில் புண்களும் காணப்படும். தலைைய முறுக்கிக்கொள்ளும். அதனால், கொக்கு போல் குறுகி கொண்டு நிற்கும். நோய் அறிகுறிகள் தென்பட்ட 2 அல்லது 3-வது நாளில் கோழிகளில் இறப்பு ஏற்படும்.

தடுப்பு முறைகள்

வெள்ளைக்கழிச்சல் நோய் வந்த பிறகு மருத்துவம் செய்து குணப்படுத்துவது மிகவும் கடினம். ஆனால், முறையாக தடுப்பூசி போடுவதன் மூலம் வெள்ளைக்கழிச்சல் நோயில் இருந்து நாட்டுக்கோழிகளை காப்பாற்ற முடியும். குஞ்சு பொரித்ததும் 7-வது நாளில் லசோட்டா என்ற தடுப்பு மருந்தை கண் அல்லது மூக்கில் சொட்டு மருந்தாகவும், 21-வது நாளில் லசோட்டா மருந்தை குடிக்கும் தண்ணீரிலும் கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி கொடுக்க வேண்டும்.

பிறகு ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆர்.டி.வி.கே என்ற தடுப்பூசியை போட வேண்டும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் அரசு கால்நடை பராமரிப்பு துறை, மருத்துவ, மருந்தக மற்றும் கிளை நிலையங்களில் இந்த தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

கோழி அம்மை

இதுவும் நாட்டு கோழிகளை தாக்கும் நச்சுயிரி நோய்களில் மிக முக்கியமான நோய் ஆகும்.கோழிக்கொண்டை, தலை, கண் புருவம், செவில் மடல், நாசி துவாரத்தின் மேலும் கொப்புளங்கள் உண்டாகி புண்கள் உருவாகும். சில நேரம் கொப்புளங்கள் உடைந்து புண்கள் பெரிதாகும். நோய் தாக்குதல் அதிகமாகும்போது கண் பார்வை மறைந்து தீனி எடுக்க முடியாமல் போகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளில் முட்டையிடுதல் மற்றும் எடை குறைதல் ஏற்படும். சில கோழிகள் இறந்துவிடும். பாதிக்கப்பட்ட குஞ்சுகளில் அதிக இறப்பு ஏற்படும்.

சிகிச்சை முறை

நோய் வந்த கோழிகளுக்கு மஞ்சள் மற்றும் வேப்பிலையை அரைத்து கொப்புளங்களில் பூசி வர குணமாகும். வேப்பிலை மற்றும் மஞ்சள் அரைத்த விழுதை ஒரு மிளகு அளவு வாயிலும் தினம் ஒரு முறை வீதம் 5 முதல் 7 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். மேலும், ஆன்டிபயாடிக் மருந்து மற்றும் பி காம்ப்ளக்ஸ் மருந்தை கால்நடை மருத்துவர் உதவியுடன் 5 நாட்களுக்கு கொடுத்து வந்தால் அம்மை நோயுடன் இதர நோய் தொற்றை கட்டுப்படுத்தி கோழிகளை காப்பாற்ற முடியும். கோழிகள் குஞ்சாக இருக்கும்போதே தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேற்கண்ட இரு நோய்களும் வேகமாக ஒரு கோழியில் இருந்து மற்ற கோழிகளுக்கு பரவக்கூடியவை. இந்த நோய்களில் இருந்து கோழிகளை காக்க தகுந்த பராமரிப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். நோய் அறிகுறிகள் தென்பட்ட உடன் கோழிகளை தனியே பிரித்து வைத்து பராமரிக்க வேண்டும். தீவனம் மற்றும் தண்ணீரில் நோயுற்ற கோழிகளின் எச்சம் விழாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கிருமிநாசினி கலந்த நீரால் கோழிகளை அடைக்கும் இடம், தரை, பக்கவாட்டு சுவர் போன்றவற்றை கழுவி விட வேண்டும். நோய்கள் வந்தவுடன் சிகிச்சை அளிப்பதைவிட வரும்முன் காப்பது தான் சிறந்தது. எனவே, நாட்டுக்கோழிகளை காக்க உரிய நேரத்தில் வெள்ளைக்கழிச்சல் மற்றும் அம்மை நோய் தடுப்பூசிகளை போட வேண்டும்.


Next Story