டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினம்: கொண்டாடுவதன் நோக்கம் என்ன தெரியுமா..?


டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினம்: கொண்டாடுவதன் நோக்கம் என்ன தெரியுமா..?
x
தினத்தந்தி 22 Dec 2023 12:31 PM GMT (Updated: 22 Dec 2023 12:36 PM GMT)

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் சிறந்த கணிதவியலாளர்களில் ஒருவராக அறியப்பட்ட சீனிவாச ராமானுஜன் கணிதத்தில் முறையான பயிற்சி பெற்றவர் இல்லை. இருப்பினும், ராமானுஜன் எண் கோட்பாடு, எல்லையற்ற தொடர்கள், கணித பகுப்பாய்வு மற்றும் தொடர்ச்சியான பின்னங்கள் ஆகியவற்றில் அவரது பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

1887-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் பிறந்த ராமானுஜன் 1920-ம் ஆண்டு தன்னுடைய 32 வயதில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிறந்த நாளை தேசிய கணித தினமாக கொண்டாட இந்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், கணிதத்தில் ராமானுஜனின் அசாதாரண பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளான டிசம்பர் 22-ந்தேதியை தேசிய கணித தினமாக அறிவித்தார்.

மேலும் 2012-ம் ஆண்டு தேசிய கணித ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது. கணிதத்தின் முக்கியத்துவம் மற்றும் கணிதத் துறையில் சீனிவாச ராமானுஜன் ஆற்றிய பங்களிப்புகள் பற்றிய விழிப்புணர்வை பரப்பும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22-ந்தேதி தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் உயர்தர கல்விப் பயிற்சி பெறுவது மட்டுமே பெரிய சாதனைகளை அடைவதற்கான வழி அல்ல என்ற கருத்தை வலியுறுத்தி, ராமானுஜனைப் போலவே, குழந்தைகளும் பாடப்புத்தகங்களைத் தாண்டி விமர்சன சிந்தனை மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவுகளில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள். தேசிய கணித தினத்தை கொண்டாட பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போட்டிகள், ஒலிம்பியாட்கள் மற்றும் பிற கல்வி நிகழ்வுகளை நடத்துகின்றன.


Next Story