கோவில் தூணில் சுதந்திர வீரர்களின் சிற்பங்கள்


கோவில் தூணில் சுதந்திர வீரர்களின் சிற்பங்கள்
x

வழக்கமாக கோவில் தூண்களில் கடவுள்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம், கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதற்கு மாறாக, கோவில் தூணில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதுவும் ஒரே தூணை சுற்றிச் சுற்றி காணப்படுகின்றன.

இப்படி சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிற்பங்கள் காணப்படுவது, ஈரோடு மாவட்டம் கோபி அருகே பிரசித்திபெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில்தான். கோபி பஸ் நிலையத்தில் இறங்கி அந்தியூர், பவானி செல்லும் பஸ்சில் ஏறி சுமார் 4 கி.மீ. தூரம் பயணித்தால், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலை அடையலாம்.

இந்தக் கோவிலின் தூணில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிற்பங்களை செதுக்கியுள்ளனர். காந்தி, நேரு, ஜான்சிராணி, சர்தார் வல்லபாய் படேல், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவங்களும், கொடியின் படமும் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் இந்தக் கோவில், நாடு விடுதலை அடைவதற்கு முன்பு அதாவது சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்த காலகட்டமான 1942-ல் கட்டப்பட்டதாகும்.

சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்த ஒருவர் இந்த கோவிலை கட்டியதாகத் தெரிகிறது. இந்தக் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் தரிசனத்தை முடித்துவிட்டு கோவிலில் ஆங்காங்கே சிறிது நேரம் அமர்ந்துவிட்டு செல்கிறார்கள். அப்போது தூணில் செதுக்கப்பட்டிருக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிற்பங்களை கண்டு ரசிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளிடமும் கூறுகிறார்கள். இதன் மூலம் குழந்தைகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை தெரிந்து கொள்கிறார்கள்.

வணிகம் செய்வதற்காக இந்தியாவுக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் மெல்ல மெல்ல நம் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள். அதன்பின்னர் நாடு எவ்வாறு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு் கிடந்தது? அவர்களிடம் இருந்து நாட்டை மீட்க யார் யார் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார்கள்? நாடு எப்போது விடுதலை அடைந்தது? என்பது குறித்து பல்வேறு தகவல்களை கூறி வருகிறார்கள்.

இதன் மூலம் நாட்டுப்பற்று மேலோங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.


Next Story