பூமியின் சிறுநீரகம்: அலையாத்தி காடுகள்


பூமியின் சிறுநீரகம்: அலையாத்தி காடுகள்
x

அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் காலநிலையை சமன்செய்யும் முக்கிய பணியை செய்து வருகிறது.

மனிதர்கள் பருகும் நீர் கழிவுகளாக வெளியேறும், மரங்கள் உறிஞ்சும் நீரோ காய், கனிகள், மலர்களாக மாறி வெளியேறும். இப்படி நமக்கான தேவைகளை தனக்கான செயல்பாடுகளின் மூலம் பூர்த்தி செய்யும் அற்புதம் தான் இயற்கை நமக்களித்த நீரும், மரமும்.

சங்க கால தமிழர்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தை அதன் சூழலுக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகைப்படுத்தினர். இதில் முல்லை நிலமான காடும், காடு சார்ந்த பகுதிகளும் மனித குலத்துக்கு நன்மைகளை அளித்துக்கொண்டு தான் இருக்கிறது. காடுகள் என்றதும் அடர்ந்த உயர்ந்த மரங்களும், சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளும் தான் நம் நினைவிற்கு முதலில் வரும். ஆனால் காடுகள் என்றால் அதுமட்டுமல்ல. அவை உலகில் வாழும் ஜீவராசிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எண்ணற்ற நன்மைகளை புரியும் ஓர் அமுதசுரபி.

வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கரியமில வாயுவை உறிஞ்சி அதை பிராணவாயுவாக மாற்றுவதில் காடுகள் அளப்பறிய பங்காற்றுகிறது. மரங்களில் உள்ள இலைகள் காற்று மாசுகளை வடிகட்டும் வடிகட்டியாக செயல்படுகின்றன. நுண்ணுயிர் தொடங்கி பல்வேறு உயிரினங்கள் வாழும் இருப்பிடமாக காடுகள் விளங்குகிறது.

இதுமட்டுமின்றி வான்மழை பொழிய வழிவகை செய்வதில் பெரும்பங்காற்றுவது காடுகளே. ஏன்... மனித வாழ்வும் காடுகளில் இருந்து தொடங்கியது தான். காடுகள் நமது கிரகத்தின் மிக முக்கியமான இயற்கை வளம். காடுகள் இல்லையேல், வாழ்க்கையே இல்லை என்பதில் துளி அளவிலும் சந்தேகமில்லை.

31 சதவீத காடுகள்

பூமியின் மொத்த நிலப்பரப்பில் 31 சதவீதம், தங்களின் பசுமை போர்வையை போர்த்தி விரிந்துள்ளன காடுகள். இந்த காடுகள் ஓவ்வொன்றும் இருக்குமிடம், சுற்றுச்சூழலை மையமாக கொண்டு பல்வேறு விதமாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு காடு அது எந்த வகையை சேர்ந்தது என்று வகைப்படுத்துவதற்கு அந்த காடு அமைந்துள்ள மண்ணின் வகை, நிலப்பரப்பு, மற்றும் அவை அமைந்துள்ள உயரம் ஆகியவை முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது.

மேலும் காடுகளின் இயல்பு, வளரும் காலநிலை மற்றும் சுற்றியுள்ள சூழலுடனான அதன் உறவு ஆகியவைகளும் வகைப்படுத்துவதற்கு கருத்தில் கொள்ளப்படுகின்றன. மேற்கூறிய காரணிகளின் அடிப்படையில் உலக அளவில் போரியல் காடுகள், மிதமான வெப்பமண்டல காடுகள், வெப்பமண்டல காடுகள் என காடுகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கட்டிடக்கலை, கலாசாரங்களுக்கு மட்டுமல்ல பரந்து, விரிந்த காடுகளுக்கும் இந்தியா பேர்போனதே. நமது நாட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நிலப்பயன்பாடு காடுகளே. இந்தியா பல்வேறு வகையான காடுகளை கொண்டுள்ளது. இந்தியாவின் மொத்த நிலப்பரப்பளவில் 21.71 சதவீதம் காடுகள் தான். இந்த காடுகள் வெப்பமண்டல காடுகள், வெப்பமண்டல மழைக்காடுகள், மிதவெப்பமண்டல காடுகள், மித வெப்பமண்டல மழைக்காடுகள், மிதவெப்ப மண்டல பசுமைமாறாக் காடுகள், மிதவெப்பமண்டல இலையுதிர் காடுகள், ஊசியிலைக்காடுகள், சதுப்பு நிலக்காடுகள் அல்லது அலையாத்திக்காடுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் 20.31 சதவீதம் காடுகள் இடம்பிடித்துள்ளன. இந்த நிலப்பரப்பில் வெப்ப மண்டல பசுமை மாறாக் காடுகள், மித வெப்ப மண்டல மலைக்காடுகள், வெப்ப மண்டல இலையுதிர்க்காடுகள், அலையாத்தி காடுகள் ஆகிய காடுகள் காணப்படுகின்றன.

மாங்குரோவ் காடுகள்

இந்த காடு வகைகளில் முல்லை, மருதம், நெய்தல் ஆகிய மூன்று நிலங்களும் சந்திக்கின்ற இடமே சதுப்புநில வனங்களாக திகழ்கின்றன. அதாவது நிரந்தரமாக நீர் நிரம்பிய அல்லது நீரினால் நிரப்பப்பட்ட நிலப்பகுதிகளே சதுப்பு நிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை ஈரநிலங்கள் என்றும் அழைக்கப்படுவது உண்டு.

ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய சேறு நிறைந்த நிலங்களில் சிறு தாவரங்களும், நீர் வாழ் விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியே சதுப்பு நிலம். சதுப்பு நிலங்கள் தன்னிடம் நீர் பாயும் நேரங்களில் அதை நிலத்திற்கு அடியில் சேமித்து வைத்து, வறட்சி காலங்களில் அந்த தண்ணீரை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவைகளாக இருக்கின்றன.

சதுப்பு நிலங்கள் உவர்ப்புத் தன்மை கூடிய சதுப்பு நிலங்கள் என்றும், நன்னீர் சதுப்பு நிலங்கள் என்றும் இரண்டு வகையாக உள்ளது. இந்த சதுப்பு நிலங்களில் வளரும் காடுகளே சதுப்புநில காடுகள் எனப்படுகின்றன. இதில் உவர்ப்பு தன்மை கூடிய சதுப்பு நிலத்தில் வளரும் காடுகளே அலையாத்திக்காடுகள் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், ஸ்பானிஷ், போர்ச்சுக்கல், சுவிஸ் மொழிகளில் 'மாங்கு' என்றால் இணைந்த சிறுமரங்கள் என்று பொருள். இந்த சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.

சதுப்பு நிலக்காடுகள், அலையாத்தி அல்லது மாங்குரோவ் காடுகள் என்ற சொல்லை கேட்ட உடன் நம்மில் பெரும்பான்மையானவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் தான். சுற்றுலா தலமான பிச்சாவரத்தை பார்த்திருப்போமோ இல்லையோ அவற்றை பற்றி கண்டிப்பாக கேள்வி பட்டிருப்போம். கமல்ஹாசனின் 'தசாவதாரம்' திரைப்படத்தில் வரும் 'கல்லை மட்டும் கண்டால்' பாடல் காட்சிகள், விஷால் நடித்த துப்பறிவாளன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பிச்சாவரத்தில் படமாக்கப்பட்டதே.

4992 சதுர கிலோ மீட்டர்

உலகம் முழுவதும் சதுப்பு நிலக்காடுகள் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகின்றன. உலக பரப்பளவில் 15.2 மில்லியன் எக்டேர் அதாவது 1 லட்சத்து 52 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவிற்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சதுப்பு நிலக்காடுகள் உள்ளன.

உலகில் ஐரோப்பா, அண்டார்டிகா கண்டங்களைத் தவிர ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென்அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் இக்காடுகள் பரவிக் காணப்படுகின்றன. இதில் நான்கில் மூன்று பங்கு காடுகள் உலகில் உள்ள 15 நாடுகளில் உள்ளதாகவே அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் 42 சதவீதம் ஆசிய கண்டத்தில் காணப்படுகின்றன.

இந்தியாவில் 4992 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு சுமார் 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்தி காடுகளாக உள்ளன.

இவை சதுப்புநிலக் காடுகள், சுந்தரவனக் காடுகள், சமுத்திரக்காடுகள், கண்டன் காடுகள், சுரப்புன்னைக் காடுகள் மற்றும் தில்லைவனம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அதிக உப்புத் தன்மை உடைய உவர் நீரும், அதிவெப்பமும் உடைய கடினமான சூழலில் இவை செழித்து வருகின்றன. அதற்கு காரணம் இத்தாவரங்களில் காணப்படும் உப்பை வடிகட்டும் அமைப்பு மற்றும் அலைகள் நிறைந்த கடலில் மூழ்கி நிலைத்திருக்க பயன்படும் சிக்கலான வேர்கள் ஆகியவை ஆகும்.

கடலுக்கு அருகில் அமைந்துள்ள சதுப்புநிலங்கள் கடல்நீரையும், கடல் சீற்றத்தின்போது நிலத்திற்குள் வரும் நீரையும் தேக்கி வைக்கும் தன்மை கொண்டுள்ளது. அலையாத்தி காடுகள் எனப்படும் மாங்குரோவ் காடுகள் காலநிலையை சமன்செய்யும் முக்கிய பணியை செய்து வருகிறது.

அலையாத்தி காடுகள், ஆறு கடலில் கலக்கும் இடத்தில் வாழ்வதால், ஆற்றில் இருந்து அடித்து வரப்படும் மண், கனிமங்கள் உள்ளிட்ட திடப்பொருட்கள் இவற்றின் அடர்த்தியான வேர்களினால் தடுக்கப்பட்டு அவ்விடத்தில் சேகரமாகின்றன. இதனால் ஆற்றில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் வடிகட்டப்பட்டு கடலில் மாசுகள் கலப்பது தடுக்கப்படுகிறது. அதோடு கடலுக்கும், கரைக்கும் அரணாக திகழ்வதோடு கடல் அரிப்பையும் தடுக்கின்றன.

பவளப்பாறைகள் உருவாக காரணம்

பின்னல் போன்று சிக்கலான அமைப்பினை உடைய இத்தாவர வேர்கள் மிகச்சிறிய பாக்டீரியாக்கள் முதல் 10 அடி நீளமுள்ள சுறாக்கள் வரை பல்வேறு உயிரினங்களுக்கு வாழ்விடமாக திகழ்கின்றன. சதுப்பு நிலத்தில் உள்ள வாடிய சதுப்புநில இலைகள் நீரில் விழுந்து அழுகி பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் உண்ணப்படுகின்றன. இவை அனைத்தும் நண்டுகள், புழுக்கள், இறால்கள், சிறிய மீன்கள் போன்ற பல உயிரினங்களுக்கு உணவாகின்றன. இந்த சிறிய மீன்கள் அனைத்தும் இங்கு வாழும் பெரிய மீன்களுக்கு இரையாகின்றன.

பல வகையான சிறிய உயிரினங்கள் இளம் மற்றும் வயது வந்த மீன்கள் மற்றும் இறால்களுக்கு உணவாக அமைகின்றன. சதுப்பு நிலங்கள் இறால்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக பயன்படுத்தப்படுகிறது. அலையாத்தி தாவரங்கள் கடலுக்கு மீன் வளத்தை கொடுக்கும் பவளப்பாறைகளின் உருவாக்கத்திற்கு காரணமாகின்றன. அதாவது இத்தாவர வேர்களில்தான் இளம் பவளப்பாறைகள் தோன்றுகின்றன. வளமையான கடலுக்கு இக்காடுகள் மிகவும் அவசியமானது. அலையாத்தி காடுகள் நிலக்காடுகளைப் போல 10 மடங்கு கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கவரும் திறனுடையவை. எனவே பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அலையாத்தி காடுகளின் பங்கு அளப்பரியது. கடலின் உப்புநீரும் நிலப் பகுதியிலுள்ள நன்னீரும் ஒன்றோடு ஒன்றாக கலக்காமல் சதுப்பு நிலங்கள் தடுப்பு அரண்களாக இருக்கின்றன.

ஆழிப்பேரலைகளை அமைதிப்படுத்தும்

இத்தாவரங்கள் சுனாமி போன்ற ஆழிப்பேரலையின் சீற்றத்தை அமைத்திப்படுத்துவதில் திறம்பட செயல்படுகின்றன. கடலில் உண்டாகும் அலைகளின் வேகத்தை குறைக்கும் தன்மையை உடையதால் இவை அலை ஆத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது கடல் அலைகளின் வேகத்தை தடுத்து கடற்கரையையும், மக்களையும் அழிவில் இருந்து பாதுகாத்து, இயற்கை அரண்களாக செயல்படுகின்றன.

மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர்பன் மாங்குரோவ் காடுகள் உலகின் மிகப்பெரிய அலையாத்தி காடுகளாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், தூத்துக்குடி, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, விழுப்புரம் மாவட்டம் கழுவேலி உள்ளிட்ட இடங்களில் மாங்குரோவ் காடுகள் காணப்படுகின்றன.

இதில் பிச்சாவரத்தை விட 10 மடங்கு பெரியது முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள். இவற்றில் பிச்சாவரம் பகுதியில் 12 வகையான அலையாத்தி தாவரங்களும், முத்துப்பேட்டை பகுதியில் 8 வகையான அலையாத்தி தாவரங்களும் உள்ளன. நாட்டில் உள்ள அலையாத்தி காடுகளில் 61 சதவீத காடுகள், தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய லகூன் பகுதியில் 29,713 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பூமியின் சிறுநீரகம்

இப்படி பல வகைகளில் நமக்கு உதவும் அலையாத்தி காடுகள் பருவ நிலை மாற்றம் காரணமாக பெரிய அழிவை சந்தித்து வருகின்றன . இதனால் பல்லுயிர் பெருக்கம் குறையும். கடலின் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும். இறால் வளம் முற்றிலுமாக அழிந்து போகும். இக்காடுகள் இல்லையெனில் மீன்களே இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கரியமில வாயுவை உறிஞ்சி பிராண வாயு வழங்கும் மழைக்காடுகளை எப்படி 'பூமியின் நுரையீரல்' என்று அழைக்கின்றோமோ அதேபோல் மாங்குரோவ் அல்லது அலையாத்தி காடுகள் நீரில் உள்ள மாசுக்களை வடிகட்டுவதால் அவை "பூமியின் சிறுநீரகம்" என்று அழைக்கப்படுகின்றது.

இயற்கையாய் நம்மை பாதுகாக்கும் அலையாத்தி காடுகளை அதன் இயற்கை மாறாமல் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இயற்கையோடு இணைந்து செயல்பட்டால் அது ஈடற்ற இன்பங்களை நமக்கு அளித்துக்கொண்டே இருக்கும் என்பதில் இம்மி அளவும் சந்தேகமில்லை.

ராம்சர் பிரகடனம்

புயல், வெள்ளப்பெருக்கு, சுனாமி உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களில் இருந்து நிலப்பகுதிகளை காப்பதில் முக்கிய பங்காற்றும் சதுப்பு நிலங்களின் அழிவை தடுப்பதற்காக ஈரான் நாட்டின் ராம்சர் நகரில் 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி முதல் சர்வதேச மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சென்று உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் பிரகடனம் வெளியிடப்பட்டது. இதற்கு ராம்சர் பிரகடனம் என்று பெயர். இந்த மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட 172 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்தியாவில் 75 ராம்சர் தலங்கள் உள்ளன. அவற்றுள் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 14 ராம்சர் தலங்கள் உள்ளன இதில் பிச்சாவரமும் ஒன்று.

பிரதமர் தொடங்கி வைத்த 2 திட்டங்கள்

கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தில் நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையாக பிரதமர் 'அம்ரித் தரோஹர்' மற்றும் 'மிஷ்டி' (கரையோர வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்திற்கான சதுப்புநில முன்முயற்சி) என்ற இரண்டு திட்டங்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அம்ரித் தரோஹர் திட்டம் ராம்சர் தளங்களின் பாதுகாப்பை பொதுமக்கள் பங்கேற்பின் மூலம் உறுதி செய்ய ராம்சார் தளங்களை சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களாகவும், ஆயிரக்கணக்கான மக்களுக்கு பசுமை வேலை வாய்ப்புகளை வழங்கவும், அடுத்த 3 ஆண்டுகளில் உள்ளூர் சமூகங்களின் உதவியுடன் நிலையான சுற்றுச்சூழல் வளர்ச்சியை அடையவும் வகுக்கப்பட்டது.

மிஷ்டி திட்டம் நாட்டில் உள்ள சதுப்புநில சுற்றுச்சூழல் அமைப்பை புதுப்பிக்கவும், பாதுகாக்கவும், 2023-24 நிதியாண்டில் தொடங்கி ஐந்து ஆண்டுகளில் 11 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் ஏறக்குறைய 540 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்ட சதுப்பு நிலங்களின் வளர்ச்சிக்கான சாத்தியமான பகுதியை விரிவாக ஆராய்வது உள்ளிட்ட அம்சங்களை செயல்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. இந்த திட்ட செலவில் 80 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை மாநில அரசுகளும் அளிக்கின்றன.


Next Story