தேசிய என்ஜினீயர்கள் தினம்: என்ஜினீயர்களை போற்றுவோம்


தேசிய என்ஜினீயர்கள் தினம்: என்ஜினீயர்களை போற்றுவோம்
x
தினத்தந்தி 15 Sep 2023 12:38 PM GMT (Updated: 15 Sep 2023 12:57 PM GMT)

நம் நாட்டை பொறுத்தவரை தேசிய என்ஜினீயர்கள் தினம் செப்டம்பர் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது.

இயற்கை படைத்த பூகோளப் பந்தில் மலைகள், காடுகள், ஆறுகள், கடல், பாலைவனங்கள் என எத்தனையோ வளங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுக்கு மத்தியில் உருவான மனிதன் அந்த வளங்களில் இருந்து புதுப்புது விஷயங்களை படைத்து நவீன யுகத்தை உருவாக்கினான்.விலங்குகளை வேட்டையாட முதலில் கற்களை ஆயுதமாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொண்ட ஆதி மனிதன், தனது ஆறாம் அறிவால் படிப்படியாக புதுப்புது விஷயங்களை கற்றுத்தேர்ந்தான்.அப்படி உருவான விந்தைகள் ஏராளம். இன்று வானுயர உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் முதல் வானில் பறக்கும் விமானம் வரை ஒவ்வொரு படைப்புகளிலும் மனிதன் மகத்தானவன் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறான். கால மாற்றங்களுக்கு ஏற்ப அனைத்து துறையிலும் நவீனங்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறது.

அவற்றில் ஒரு முத்தாய்ப்புதான் சமீபத்தில் இந்திய மண்ணில் இருந்து நிலவில் கால் பதித்த விக்ரம் லேண்டர். அதையும் தாண்டி சூரியன் குறித்து ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா எல்-1 விண்கலம். இவை இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறை சாதனைக்கு கிடைத்த மணிமகுடங்கள்.

இதுபோன்ற சாதனைகளுக்கு பின்புலம் என்று பார்த்தால் முதலிடம் பெறுவது மனித மூளைக்குள் வித்திட்ட என்ஜினீயரிங் என்ற விருட்சம்தான். எத்தனையோ சாதனைகள் இருந்தாலும் அத்தனையிலும் என்ஜினீயரிங் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் எக்காலத்திற்கும் என்ஜினீயரிங் துறையின் சேவை தேவை என்ற நிலையில் என்ஜினீயர்கள் அத்தனைபேருமே போற்றுதலுக்குரியவர்கள்தான்.இதற்காகவே உலக அளவில் என்ஜினீயா்கள் தினம் கடைபிடிக்கப்பட்டு என்ஜினீயர்கள் கவுரவிக்கப்படுகின்றனர். உலக அளவில் என்ஜினீயர்கள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டை பொறுத்தவரை தேசிய என்ஜினீயர்கள் தினம் செப்டம்பர் 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ஏன் அந்த தேதியை தேர்வு செய்தனர் என்று பார்த்தால் அதற்கு பின்னால் ஒரு மிகச்சிறந்த என்ஜினீயரின் அளப்பரிய சாதனைகள் அணிவகுத்து நிற்கின்றன. அவர்தான் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா. இவர் இந்தியாவின் முதல் சிவில் என்ஜினீயர். இவர் பிறந்த தினத்தையே தேசிய என்ஜினீயர்கள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

என்ஜினீயரிங் துறையின் பிதாமகனாக கருதப்படும் இவரைப்போல் சாதித்த என்ஜினீயர்கள் ஏராளம் உண்டு. தமிழகத்தை சேர்ந்த அணு விஞ்ஞானி அப்துல் கலாம் முதல் நிலவுக்கு சந்திரயான்-3 அனுப்பிய விழுப்புரம் விஞ்ஞானி வீரமுத்துவேல், சூரியனுக்கு ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்பிய திட்டத்துக்கு இயக்குனராக பணியாற்றிய தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த நிகர் ஷாஜி சுல்தானா வரை போற்றுதலுக்குரியவர்களாக இருக்கிறார்கள்.

இதேபோல் உலகமறிந்த அளவில் ஈ.ஸ்ரீதரன், நாராயண மூர்த்தி, சுந்தர்பிச்சை, சத்யா நாதெள்ளா, வர்கீஸ் குரியன் மற்றும் சத்யநாராயண் கங்காராம் பிட்ரோடா போன்ற என்ஜினீயர்களும் பெயர்பெற்றவர்கள்.இவர்களைப்போல் சாதனையாளர்களாக உருவெடுக்க காத்திருக்கும் என்ஜினீயரிங் மாணவ-மாணவிகள் லட்சக்கணக்கானோர் நம் நாட்டில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

என்ஜினீயரிங் படிப்பை பொறுத்தவரையில் கடந்த சில ஆண்டுகளாக அதன்மீதான மோகம் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம். குறிப்பாக பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்டிரிக்கல், எலக்டிரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபபைல், ஏரோனாட்டிக்கல், பி.டெக் இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற படிப்புகளில் சேர மாணவ-மாணவிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்தோர் சதவீதம் 59.9 ஆக இருந்தது. அதுவே இந்த ஆண்டு 66 சதவீதமாக உயர்ந்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ, இ.இ.இ படிப்புகளுக்கு ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்திய அளவில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி கடந்த இரு ஆண்டுகளாக என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு படித்தவர்களின் எண்ணிக்கையில் பாதியளவு பேர் வேலை கிடைக்கப்பெற்றுள்ளனர். அதாவது கடந்த 2022-ம் ஆண்டு 55.15 சதவீதம் பேரும், இந்த ஆண்டு 57.44 சதவீதம் பேரும் வேைலயை கைப்பற்றி உள்ளனர்.

இது 2014-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை சராசரியாக 51 சதவீதம் என்ற அளவில் நீடித்து உள்ளது. இந்த விகிதம் 2019-ம் ஆண்டு 57.09 என்று உயர்ந்து பின்னர் கொரோனாவின் தாக்கம் காரணமாக சர்ரென குறைந்து உள்ளது. அதாவது கொரோனா காலகட்டமான 2020-ம் ஆண்டு 49 எனவும், 2021-ம் ஆண்டு 46.82 எனவும் குறைந்து இருக்கிறது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை தகவலின்படி மாநிலத்தில் கடந்த ஆகஸ்டு மாத நிலவரப்படி மொத்தம் 65 லட்சத்து 71 ஆயிரத்து 300 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கிறார்கள். இதில் இளநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள் 2 லட்சத்து 73 ஆயிரத்து 942 பேர். முதுநிலை என்ஜினீயரிங் படித்தவர்கள் 2 லட்சத்து 40 ஆயிரத்து 753 பேர். முதுநிலை விவசாய பொறியியல் படித்தவர்கள் 9 பேர். இதுதவிர டிப்ளமோ படித்தவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 894 பேர் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

என்ஜினீயரிங் படிப்பை பொறுத்தவரை மதிப்பெண் மட்டுமின்றி புதிய கண்டுபிடிக்கும் திறன், மொழித்திறனை வளர்த்துக் கொண்டால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்கிறார்கள் கல்வி ஆலோசகர்கள். இந்த தினத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி மனித சமுதாயத்துக்கு உதவிக்கரம் நீட்டும் என்ஜினீயர்களையும், கல்லூரிகளில் தயாராகிக்கொண்டிருக்கும் வருங்கால என்ஜினீயர்களையும் வாழ்த்துவோம்.

இந்திய பொறியியலின் தந்தை விஸ்வேஸ்வரய்யா

கர்நாடக மாநிலத்தில் முத்தனஹள்ளி என்ற கிராமத்தில் 1861-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி பிறந்தவர் விஸ்வேஸ்வரய்யா. இவரது பெற்றோர் சீனிவாச சாஸ்திரி-வெங்கடலட்சுமி. இவரது முன்னோர்கள் ஆந்திர மாநிலம் மோக்சகுண்டம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவரது தந்தை சீனிவாச சாஸ்திரி ஆயுர்வேத மருத்துவத்தில் வல்லுனர் ஆவார்.

விஸ்வேஸ்வரய்யா தனது சொந்த ஊரில் ஆரம்ப கல்வியை கற்று அடுத்த கட்டத்துக்கு வர இருந்த நிலையில் அவரது 15-வது வயதில் அவரது தந்தை இறந்தார். அதைத்தொடர்ந்து மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் பெங்களூருவில் பள்ளிக்கல்வியை முடித்துவிட்டு அப்போதைய மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார்.

அதன்பிறகு புனேயில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து சிவில் என்ஜினீயரிங் முடித்து என்ஜினீயர் ஆனார். 1885-ம் ஆண்டு பம்பாய் பிரசிடென்சியில் உள்ள பொதுப்பணித்துறை உதவி பொறியாளராக தனது பணியை தொடங்கினார். 1899-ல் இந்திய நீர்ப்பாசன ஆணையத்தில் சேர்ந்தார். அவர் பணியில் இருந்த காலகட்டத்தில் ஏராளமான நீர்ப்பாசன முறைகளில் பல புதுமைகள் நிகழ்ந்தன.

இவர் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே புகழ்பெற்று விளங்கும் கிருஷ்ணராஜசாகர் அணையை கட்டும் பணியில் முதன்மை என்ஜினீயராக பணியாற்றி திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றினார். இது இந்தியாவின் அப்போதைய அணைகளுள் பெரியது ஆகும். இந்த அணை 1911 மற்றும் 1938-ம் ஆண்டுகளுக்கு இடையே அப்போதைய மதிப்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்தில் கட்டப்பட்டது. இது கர்நாடகாவில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான பாசன பகுதிக்கு தண்ணீரை வழங்குகிறது.

1894-ம்ஆண்டு மைசூருக்கு அருகில் ஆசியாவிலேயே முதல் நீர்மின் உற்பத்தி ஆலை அமைய காரணமாக இருந்தார்.இவர் மைசூரு மன்னரின் திவானாகவும் பணியாற்றி உள்ளார். பத்ராவதி எக்கு ஆலை, மைசூரு பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.இவருடைய மகத்தான சேவைகளைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசாங்கம் 'நைட் கமாண்டர்' பட்டத்தை வழங்கியது. சுதந்திரத்துக்குப் பிறகு 1955-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் விஸ்வேஸ்வரய்யாவுக்கு 'பாரத ரத்னா' பட்டம் வழங்கி கவுரவித்தது.

'இந்தியப் பொறியியலின் தந்தை' என்று கொண்டாடப்படும் விஸ்வேஸ்வரய்யா, 1962-ம் ஆண்டு தனது 101 வயதில் மரணம் அடைந்தார்.

என்ஜினீயரிங் கல்வி பயிலும் மாணவர்களுக்கான கல்வியாளர்கள் கூறும் சில ஆலோசனைகள்:-

என்ஜினீயரிங் கல்வி என்பது இதுநாள்வரை அறிவுசார்ந்த கல்வியாக இருந்தது. அது எதிர்காலத்தில் செயல்முறை வழிக்கல்வியாக மாறும் நிலை ஏற்படும். முன்பெல்லாம் 4 ஆண்டுகள் படித்துவிட்டு தேர்வெழுதி மதிப்பெண் பெற்று வேலையில் சேரும் நிலை இருந்தது.

இனிமேல் அந்த நிலை மாறி மாணவர்கள் படித்த படிப்பை செயல்வடிவமாக்கும் நிலை வரக்கூடும். புதிய கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளை உருவாக்கினார்களா என்ற கேள்வி எழக்கூடிய நிலையில் என்ஜினீயரிங் கல்வி இருக்கும். செயல்வடிவத்தை வெளிக்கொணரும் மாணவர்களுக்கே சிறந்த வாய்ப்பு என்ற நிலை ஏற்படும்.

மாணவர்கள் படித்த படிப்பு வெறும் வேலைக்காக மட்டும் இருக்கக்கூடாது. சமுதாயத்துக்கு பயன் அளிக்கக்கூடிய விதமாக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் மேலாண்மை போன்றவற்றை உருவாக்குவதிலும், மனித தேவைகளுக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்குவதிலும் இருக்க வேண்டும்.

கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல், எலக்டிரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேசன், சிவில், மெக்கானிக்கல் என எந்த பிரிவில் படித்தாலும் மாணவர்களை வேலைக்கு எடுக்கக்கூடிய நிறுவனங்களும் வந்துவிட்டன. அவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்கி வேலையில் அமர்த்தி சம்பளம் தரக்கூடிய அளவுக்கு இப்போது காலம் மாறிவிட்டது. இதை கைப்பற்றிக்கொள்ள வெறும் மதிப்பெண்கள் மட்டும் போதாது.

அதையும் தாண்டி மொழித்திறன், படைப்புத்திறன் போன்றவற்றை மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். பெரும்பாலான நிறுவனங்கள் இவற்றை எதிர்பார்க்கின்றன.


Next Story