நிலத்தில் பயிரிடுவதை விட அதிக மகசூல் தரும் பசுமைக்குடில் சாகுபடி


நிலத்தில் பயிரிடுவதை விட அதிக மகசூல் தரும் பசுமைக்குடில் சாகுபடி
x

அதிக விளைச்சலை ஆண்டு முழுவதும் பெற ஏற்ற தொழில்நுட்பமாக பசுமைக்குடில் விவசாயம் இருக்கிறது. உலக அளவில் சிறந்ததாக கருதப்பட்டு விவசாயிகளால் இந்த சாகுபடி முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

பசுமைக்குடில்கள்

பசுமைக்குடில் எனப்படும் நிழல்வலைக்குடில் விவசாய தொழில் நுட்பம் என்பது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட உள் அமைப்பில் பயிர்களை சாகுபடி செய்வது ஆகும். நிழல் வலையால் போர்த்தப்பட்ட இந்த பசுமை இல்லத்தின் உள்புறத்தில் பயிருக்கு ஏற்ற வெப்பம், தண்ணீர் மற்றும் உரம் தரப்படுகிறது. சுற்றுப்புற நோய்ப்பரவல் காரணிகளில் இருந்து விலகி இருப்பதால் செடிகள் பாதிக்கப்படுவதில்லை.

ஆனால், சாதாரண நிலங்களில் பயிர் செய்யும் போது தண்ணீருக்கும், உரத்திற்கும், பயிரை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தவும், இன்னும் சில நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் அதிக அளவில் செலவிட நேரிடுகிறது. இதனால், பயிர் சாகுபடி செலவு அதிகரிக்கிறது. எனவே, வழக்கமான சாகுபடி நடைமுறையை ஒப்பிடும் போது பசுமைக்குடில் சாகுபடி மிகுந்த லாபகரமானது.

முதலீடும் லாபமும்

பசுமைக்குடில் விவசாயத்தை சிறு விவசாயிகள் கூட செய்ய முடியும். ஆனால், சிறு விவசாயிகளுக்கு இந்த முதலீடு என்பது சற்று கூடுதலான தொகைதான். அதே வேளையில், இந்த சாகுபடியில் கிடைக்கும் லாபத்தை கணக்கிடும்போது இதற்கு செய்யும் முதலீடு என்பது சிறிதுதான். பசுமைக்குடில் விவசாயத்தில் கிடைக்கும் மகசூல் மூலம் இதற்கு செய்த முதலீட்டை ஒரு சில மாதங்களிலேயே எடுத்து விட முடியும்.

பசுமைகுடில்களில் குடை மிளகாய், தக்காளி, பேபிகார்ன், பீன்ஸ், வெண்டை, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை பயிரிடலாம். மேலும் மலைப்பகுதிகளில் மட்டுமே அதிக பூக்களைத்தரும் ரோஜா, கார்னேசன் போன்ற மலர் செடிகளையும் பயிரிடலாம்.

செலவு குறைவு

பசுமைக்குடில் மூலம் விவசாயம் செய்யும்போது தண்ணீர், உரம், பூச்சி மருந்துகள், கூலி ஆகியவற்றுக்கான செலவும் குறைகிறது. இந்த முறையில் விளைவிக்கப்படும் காய்கறிகளும், பூக்களும் மிகவும் நேர்த்தியாகவும், தரமானதாகவும், ஒரே மாதிரியாகவும் இருக்கும். காய்கறிகளுக்கு நல்ல விலையும் கிடைக்கும்.

ஒரு முறை அமைக்கப்படும் இந்த குடில் அமைப்பை தொடர்ந்து நன்கு பராமரித்தால் 20 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும். இந்த குடில் அமைக்க விவசாயிகளுக்கு தேசிய தோட்டக்கலை வாரியம் மானியம் வழங்குகிறது. எனவே, விவசாயிகள் இதுபோன்ற நவீன விவசாய முறைக்கு மாறலாம்.

அதிக லாபம்

பசுமைக்குடில் வேளாண்மை என்பது நவீன விவசாயத்தின் கண்டுபிடிப்பாகும். மக்கள் பெருக்கத்தால் அதிக அளவில் உணவுப்பொருட்கள், காய்கறிகள், பழங்களுக்கு தேவை இருந்துவரும் நிலையில், இந்த முறையை பின்பற்றி விவசாயம் செய்வதன் மூலம் அதிக மகசூலும், அதிக லாபமும் பெற முடியும்.

பசுமைக்குடில்கள், நிழல் குடில்கள் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட சாகுபடி முறைகளின் மூலம் அதிக விளைச்சலையும், அதிக லாபத்தையும் பெற முடியும் என்று கண்டறியப்பட்டு இருக்கிறது. நிலத்தில் பயிரிடும்போது கிடைக்கும் மகசூலை விட 5 முதல் 7 மடங்கு மகசூல் அதிகம் கிடைக்கிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் இதுபோன்ற பசுமைக்குடில் தொழில்நுட்பம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.


Next Story