பாம்பு கடியால் அதிகரிக்கும் உயிரிழப்பு


பாம்பு கடியால் அதிகரிக்கும் உயிரிழப்பு
x

உலகில் ஆண்டுதோறும் 54 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர்வரை பாம்புக்கடியால் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர்.

பாம்பை பார்க்கும்போது ஏற்படும் பயம் இருக்கிறதே? அது வேறு எந்த உயிரினத்தைப் பார்த்தாலும் ஏற்படுவது இல்லை. அதனால்தான் பாம்பு என்றால் படையே நடுங்கும் என்கிறார்கள். காரணம் அதனிடம் உள்ள கொடிய விஷம், அதன் விறுவிறுப்பான ஊர்தல் தன்மை, விரைவாகச் சென்று ஒளிந்துகொள்ளும் விதம் போன்றவைதான். ஊர்வன வகைகளில் படுவேகம் கொண்ட பாம்புகள் எவ்வளவு பெரிய மனித கூட்டத்தையும் சில நொடிகளில் சிதறடித்துவிடும்.

பாம்புகள் புகுந்துவிட்டன

முன்பெல்லாம் காட்டுப்புறங்களிலும், ஊருக்கு ஒதுக்குப்புறங்களில் ஊர்ந்துகொண்டிருந்த பாம்புகள் இப்போது வீடுகள், கார்கள், ரேஷன் கடைகள் என்பதோடு நின்றுவிடாமல் வீட்டிலுள்ள வாஷிங் மெஷின்கள், ஏ.சி. மெஷின்களில்கூட புகுந்துவிடுகின்றன. சென்னை அருகே ஏ.சி. எந்திரத்தை சுத்தப்படுத்தும்போது நல்லபாம்பு கடித்து ஒருவர் பலியானது நினைவில் இருக்கக்கூடும்.

நகர விரிவாக்கம் என்ற பெயரில் வயல்வெளிகள், நீர்நிலை கரையோரங்கள், வனப்பகுதிகள், மலையடிவாரங்களில் வீடுகள் முளைத்துவருவதன் எதிரொலியாக பாம்புகள் தங்கள் வசிப்பிடங்களை இழந்து ஊர்களுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் பாம்புகள் பிடிபடும் சம்பவங்களும், பலர் பாம்புகளிடம் கடிபடும் பரிதாபங்களும் அடிக்கடி அரங்கேறுகின்றன.

பொதுவாகவே பாம்புகள் எளிதில் பயப்படக்கூடிய தன்மை கொண்டவை. மனிதர்களைக் கண்டால் அது ஊர்ந்து ஓடத்தான் செய்யும். ஆனால் அது தம்மை கடித்துவிடக்கூடும் என்ற உயிர்ப் பயத்தில்தான் அதைப் பார்த்து மனிதர்கள் ஓடுகிறார்கள். துணிச்சல் மிகுந்தவர்கள் பாம்பைப் பிடித்துவிடுகிறார்கள். பயத்தால் பலர் அடித்துக் கொல்கிறார்கள்.

உயிரிழப்பு

இருப்பினும் நாட்டில் பாம்பு கடியால் மனித உயிரிழப்புகள் குறையவில்லை. பெரும்பாலும் வயல்வெளிகள், காட்டுப்பகுதிகளில் வேலை செய்யும் விவசாய தொழிலாளிகள், மலையடிவாரங்களில் வசிப்பவர்கள்தான் பாம்புக்கடியால் உயிரிழப்புகளைச் சந்திக்கிறார்கள். உலகில் ஆண்டுதோறும் 54 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர்வரை பாம்புக்கடியால் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 58 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பை சந்திக்கின்றனர். தென் அமெரிக்கா, ஆப்பிரிக்காவை அடுத்து இந்தியாவில்தான் பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகம் ஆகும்.

தமிழகம் 2-வது இடம்

இந்திய அளவில் பாம்புக்கடியால் அதிக உயிரிழப்பு நேரிடும் மாநிலங்களில் தமிழகமும் இருந்து வருகிறது. தேசிய சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி, 2020-ம் ஆண்டில் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலத்தில் பாம்புகள் கடித்து அதிகம் பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்திருக்கிறது. இங்கு 132 பேர் இறந்துள்ளனர்.

அடுத்ததாக பாம்புக்கடி உயிரிழப்பில் தமிழகம் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த ஆண்டு தமிழகத்தில் 78 பேர் பாம்பு கடியால் பலியாகி உள்ளனர். ஒடிசா 3-வது இடத்திலும் (75 பேர்), உத்தரபிரதேசம் 4-வது இடத்திலும் (54 பேர்) இருக்கின்றன.

தமிழகத்தில் 2017-ம் ஆண்டு 38 பேரும், 2018-ம் ஆண்டு 50 பேரும், 2019-ம் ஆண்டு 70 பேரும், 2020-ம் ஆண்டு 78 பேரும் என 2017 ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 236 பேர் பாம்பு கடிக்கு பலியாகி இருக்கிறார்கள். அதேப்போல் 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

இதில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 55 பேரும், அதற்கு அடுத்தபடியாக சேலத்தில் 40 பேரும், வேலூரில் 34 பேரும், திருவண்ணாமலையில் 32 பேரும், செங்கல்பட்டில் 28 பேரும், தஞ்சை, திருவாரூரில் தலா 26 பேரும், மதுரை, திருச்சியில் தலா 21 பேரும் இறந்து இருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்தே வந்துள்ளது.

தாமதம்

கிராமங்களில் பாம்பு விஷ முறிவு மருந்துகள் உரிய நேரத்தில் கிடைக்காதது உயிரிழப்பு நேரிடுவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. ஒரு கிராமத்தில் பாம்புக் கடிபட்டவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க அந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலோ, அல்லது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலோ உரிய மருந்துகள் இருப்பதில்லை.

இதனால் பாம்புக்கடி சிகிச்சை தேவைப்படும் நபர் தாலுகா அல்லது மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு தொலைதூரங்களுக்கு செல்லும்போது காலதாமதம் காரணமாக உயிரிழப்பைச் சந்திக்கும் பரிதாபம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி உயிரிழப்பில் இருந்து தப்பித்தாலும் பலருக்கு உடல்நலக் குறைபாடுகளும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

நவீன தொழில்நுட்பம்

தற்போது பாம்புக்கடிக்கு அளிக்கப்படும் சிகிச்சை பல ஆண்டுகள் பழமையானது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதில் கிடைக்கும் வகையில் தரமான மருந்தை கண்டுபிடித்து மனித உயிர்களை காக்க வேண்டும். மேலும் இந்தியாவில் நான்கு விதமான பாம்புகளில் இருந்துதான் பாம்புக் கடிக்கு விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த 4 வகை பாம்புகளை கடந்து மற்ற விஷமுள்ள பாம்புகள் கடித்தால் கைவசம் உள்ள விஷமுறிவு மருந்து பலனளிப்பது குறைவு. அதனால் இந்தியாவில் உள்ள பாம்பு இனங்களின் விஷம் ஏற்படுத்தும் பாதிப்புகளுக்கு ஏற்ப புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட வேண்டியதும் அவசியமாகிறது. அப்போதுதான் பாம்புக்கடி உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் வலியுறுத்தலாக இருக்கிறது.

இந்தியாவில் காணப்படும் கொடிய விஷப்பாம்புகள்

உலகளவில் 3,500 வகையான பாம்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 600 வகை பாம்புகளே விஷத்தன்மை கொண்டவை என்றும், அதிலும் 200 வகையான பாம்புகள் மட்டுமே மனிதனை கொல்லும் அளவுக்கு கொடிய விஷத்தன்மை கொண்டவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை விஷத்தன்மை மற்றும் பாதியளவு விஷத்தன்மை கொண்ட 62 வகை பாம்புகள் உள்ளன. இதில் நாகப்பாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், சுருட்டை பாம்பு, கண்ணாடி விரியன் போன்றவை கொடிய விஷத்தன்மை கொண்டவை. மற்றபடி தண்ணீர் பாம்பு, பச்சைபாம்பு, சாரைப்பாம்பு போன்றவை விஷம் இல்லாதவை.

பாம்பு கடிக்கு விரைவான சிகிச்சை தேவை

திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் சதீஷ் குமார்:-

பாம்புகளில் நிறைய வகைகள் உள்ளன. சில பாம்புகள் கடித்ததும் ரத்தப்போக்கு ஏற்படும். சில பாம்புகள் கடித்தால் மூளையை பாதித்துவிடும். மனிதர்களின் உடலில் பாம்பு கடித்தால் உடனடியாக கயிற்றை எடுத்து கடித்த இடத்துக்கு மேலே இறுக்கி கட்டுவார்கள். ஏனென்றால் விஷத்தன்மை பரவக்கூடாது என்பார்கள். அவ்வாறு செய்வது மூடநம்பிக்கை. அது மிகவும் தவறானது. இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

பாம்பு கடித்தவுடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்ல வேண்டும். அங்கு பாம்பு கடிக்கு ஆளான நபரின் உடலில் ரத்தம் உறைகிறதா? என்பதை பரிசோதித்துவிட்டு anti snake venom என்ற மருந்தை ஊசி மூலம் செலுத்துவார்கள். அந்த மருந்தை செலுத்தினால் நோயாளியை ஆபத்தில் இருந்து காக்கலாம். ஒருசில சமயங்களில் அந்த மருந்தினால்கூட அலர்ஜி அல்லது ஏதாவது எதிர்வினைகள் ஏற்படக்கூடும். ஆனால் அந்த மருந்தை செலுத்தினால் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும். அப்போது அவர்களுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும்.

ஆனால் எந்தவகையான பாம்பு கடித்தாலும் இந்த ஊசி என்பது பொதுவானது. ஆனால் பாம்பு கடியால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பு, ரத்தக் கசிவு போன்றவற்றுக்கு தகுந்தாற்போல் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு சிலருக்கு பாம்பு கடித்த இடத்தில் வீங்கி இருக்கும். அப்போது அறுவை சிகிச்சை நிபுணர்கள் அங்கு கத்தியால் கீறிவிட்டு சிகிச்சை அளிப்பார்கள். எந்தவகையான பாம்பு கடித்தது என்று தெரிந்து கொண்டால் சிகிச்சை அளிப்பதற்கு எளிதாக இருக்கும். அதனால்தான் சிலர் கடித்த பாம்பை தூக்கி கொண்டே மருத்துவமனைக்கு வந்துவிடுவார்கள். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் எந்தவகையான பாம்பு கடித்தது என்பதை எளிதில் கூறிவிடுவார்கள். சில பாம்புகள் ஒரு மனிதரை கடிக்கும்போது முழுவதுமாக விஷத்தை உடலுக்குள் செலுத்திவிடாது. இது அவற்றுக்கு எச்சில்துப்புவதை போல்தான். சிலருக்கு முழுஅளவு விஷமும் உள்ளே ஏறிவிடும். அப்படியானவர்களுக்கு விரைவில் உடலில் விஷம் பரவி அது ரத்தத்தில் கலந்துவிடும். பாம்பு கடித்ததும் எவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு செல்ல முடியுமோ?. அவ்வளவு சீக்கிரம் சென்றுவிட வேண்டும். ஒரு சிலருக்கு பாம்புகடியில் இருந்து குணமாகிவிட்டாலும், பிற்பாடு ஏதாவது பின்விளைவுகள் உள்ளிட்ட பாதிப்பை உண்டு பண்ணலாம். அதற்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும்.

மலைக்கவைக்கும் மலைப்பாம்புகள்

தமிழகத்தில் புதுக்கோட்டை, ஈரோடு, தேனி, கோவை உள்பட மலையோர மாவட்ட பகுதிகளில் மலைப்பாம்புகள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றன. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவில் மலைப்பாம்புகள் இருப்பதாக வனத்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மலைப்பாம்புகளின் இனப்பெருக்கம் அதிகரித்தது காரணமாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி, இலுப்பூர், கீரனூர், புதுக்கோட்டை, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பாம்புகள் அதிகமாக உள்ளன. கடந்த ஓராண்டில் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்த சுமார் 120 மலைப்பாம்புகள் வரை வனத்துறையினர், தீயணைப்பு துறையினரால் பிடிக்கப்பட்டு வனத்துறைக்கு சொந்தமான காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, விலங்கினங்களில் ஒரு விலங்கு, மற்றொரு விலங்கை வேட்டையாடி இரைக்கு பயன்படுத்துவதை சங்கிலி தொடர் போல வரைபடம் காண்பித்து விலங்கியல் பாடங்களில் குறிப்பிட்டதை கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் ஒரு சங்கிலி துண்டிக்கப்பட்டால், அதாவது ஒரு உயிரினம் அழிந்தால் மற்ற விலங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். விலங்கினங்களில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கை தற்போது அதிகமாக காணப்படுகிறது. இதற்கு காரணம் அதன் வாழ்விடமான காட்டுப்பகுதியை அழித்தலும், மலைப்பாம்புகளின் முட்டைகளை இரையாக உண்ணக்கூடிய விலங்கினமான நரிகளின் எண்ணிக்கை குறைந்ததும்தான். மனிதர்களால் வேட்டையாடப்பட்டதால் நரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. நரிகள் எண்ணிக்கை குறிப்பிட்ட அளவு இருந்திருந்தால் அவை மலைப்பாம்புகளின் முட்டைகளை இரையாக்கி இருக்கும். ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.

குடியிருப்பு பகுதிகளில், விவசாய நிலங்களில் பிடிபடும் மலைப்பாம்பை ஒரு முறை காட்டில் கொண்டு விட்டால் அது அங்கேயே இருந்து விடும். மீண்டும் அங்கிருந்து வெளியில் வர வாய்ப்பு இல்லை. அதேநேரத்தில் இரைக்காக அவை சில நேரங்களில் மலைப்பகுதியை விட்டு வெளியே வரக்கூடும். தட்பவெப்ப நிலையில் மாற்றம் காரணமாகவும் அவை வெளியே வரலாம். ஒரு மலைப்பாம்பு குறைந்தது 12 முட்டைகள் போடும். இதில் உருவாகும் குட்டி குடியிருப்பு பகுதியின் அருகே வசித்து வளரலாம். அவை ஊருக்குள் வரும் போது மக்கள் கண்ணில் பட்டுவிடுகிறது. இதுதான் புதுக்கோட்டை மாவட்டத்தில் மலைப்பாம்புகள் அதிகம் பிடிபட காரணம். மக்கள் மலைப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டாமலும், நரிகளை வேட்டையாடாமல் இருக்க வேண்டும். மலைப்பாம்புகளின் வாழ்விடம் மலைப்பகுதிதான்.

விஷமுறிவு மருந்து எப்படி தயாராகிறது?

ஒருவரை பாம்பு கடித்தவுடன் எவ்வளவு விரைவாக விஷமுறிவு மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது என டாக்டர்கள் கூறுகிறார்கள். உயிர்காக்கும் விஷமுறிவு மருந்து கொடிய விஷப்பாம்பின் நஞ்சில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. முதலில் பாம்பில் இருந்து எடுக்கப்படும் நஞ்சு நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. அதன்பிறகு அதை குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தியபிறகு அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்திகளை பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. பாம்புக்கடிக்கான விஷ முறிவு மருந்துகள் உலக அளவில் குறைவாகவே தயாரிக்கப்படுகிறது என்றும், அவற்றின் விலையும் அதிகமாக இருப்பதாகவும் அதனாலேயே பாம்பு கடிபட்டவர்களை காப்பாற்றுவதில் பின்னடைவு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

பாம்புகள் பழிவாங்குமா?

பொதுவாக பாம்புகள் பழிவாங்கும் என்று இன்றளவும் கிராமப்புறங்களில் சொல்லப்படுவது உண்டு. அதாவது நல்ல பாம்பை அடித்து அது தப்பிவிட்டால் மற்றொரு நாளில் அது அடித்தவரை தேடிவந்து கடித்துவிடும் என்றும், ஒரு பாம்பை அடித்து கொன்றுவிட்டால் அதன் துணைப் பாம்பு வந்து அடித்தவரை தீண்டும் என்றெல்லாம் சொல்வது உண்டு. இதுபோன்று பல சினிமாக்களில்கூட காட்சிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அதுவெல்லாம் நம்பக்கூடாத கட்டுக்கதைகள் என்பதே உண்மை.

மிரள வைக்கும் பாம்பு தீவு

பாம்புகள் மட்டுமே இருக்கும் தீவு இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? நிச்சயமாக இருக்கிறது. பிரேசிலின் சாவோ பாவுலோ மாநிலத்திற்குட்பட்ட பகுதியில் இந்த தீவு அமைந்துள்ளது. இதன் பெயர் கெய்மாதா கிராண்டி தீவு ஆகும். ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு பாம்பு எனும் வீதத்தில் அதிக நச்சுச்தன்மை கொண்ட பாம்புகள் இங்கு உள்ளன. அதிகப் பாறைகள் கொண்ட நிலப்பரப்பாகவும், வெப்ப மண்டல பகுதியாகவும் இருப்பதால் இந்த தீவில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உள்ளது. இந்தத் தீவில் தன்னை வேட்டையாடவோ, கொல்லவோ எந்த உயிரினமும் இல்லாத காரணத்தால் பாம்புகள் தங்கள் இனத்தை அங்கே பெருக்கி அதைப் பாம்புத் தீவாக மாற்றியுள்ளன.

இந்த தீவில் கோல்டன் லான்ஸ்ஹெட்ஸ் என்ற ஒரு பாம்பு இனம் உள்ளது. உலகில் உள்ள மிகக் கொடிய விஷப்பாம்புகளில் இந்த பாம்பும் ஒன்றாகும். இந்தப் பாம்புகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்கிற காரணத்தால் பிரேசில் அரசு பாம்புத் தீவுக்கு மனிதர்கள் செல்ல தடை விதித்துள்ளது.


Next Story