இந்திய யானைகள் திருவிழா


இந்திய யானைகள் திருவிழா
x

பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான சிறந்த வழிமுறைகளில் உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பதும் ஒன்று என்பது தெளிவாகி உள்ளது.

உயிரி பன்முகத்தன்மை என்பது ஒரு சிக்கலான முயற்சியாகும். இந்த சவாலை சமாளிக்க பல்லுயிர் பாதுகாப்பு அணுகுமுறையை பின்பற்றுவது அவசியமாகும். அந்தவகையில், உலகளவில் அருகி வரும் ஆசிய யானைகளை இந்தியாவில் பாதுகாப்பதும் அடங்கும்.

கலாசார அடையாளம்

இந்தியாவில் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானதாகும். இதற்கு உலகளவில் ஈடு இணையில்லை. இந்தியாவில் யானைகள் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. கலாசார அடையாளங்களான அவை நமது மதம், கலை. இலக்கியம், நாட்டுப்புற கலைகள் ஆகியவற்றில் ஒரு பகுதியாக உள்ளன. இந்திய காவியங்களில் யானைகள் பற்றிய குறிப்புகள் நிறைந்திருக்கின்றன. கணேச பகவான் தனது தந்தங்களில் ஒன்றை நொடித்து மகாபாரதத்தை எழுதியதாக நம்பப்படுகிறது.

1947-ம் ஆண்டு சுதந்திரம் உதயமானபோது, மற்ற நாடுகளைவிட இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை நிலையானதாக இருந்தது. வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 போன்ற பொதுவான சட்டங்களை இந்தியா கொண்டுள்ளது. மனிதர்களின் பராமரிப்பிலும், காடுகளிலும் உள்ள யானைகளுக்கு உயரிய சட்ட பாதுகாப்பை இந்த சட்டம் வழங்குகிறது. வனப்பாதுகாப்பு சட்டம் 1980, யானைகளின் வசிப்பிடங்களை பாதுகாக்கிறது.

வலுவான வழிமுறை

கடந்த 9 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வலிமையான அரசியல் உறுதிப்பாடு, தலைமை ஆகியவற்றின் அடிப்படையில் யானைகளை பாதுகாக்க வலுவான நிறுவன ரீதியிலான வழிமுறையை இந்தியா வகுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 5 சதவீத பகுதியில் யானைகள் காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பல பயன்பாட்டு காடுகளில் யானைகள் தற்போது உள்ளன. அவை, காடுகளில் இருந்து மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் அவ்வப்போது செல்லும் நிலை இருக்கிறது.

ஆப்பிரிக்க யானைகளை தந்தங்களுக்காக வேட்டையாடும் நடவடிக்கையால் அவைகளைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய சவால் உள்ளது. ஆனால் இந்தியாவிலோ அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது.

1970 மற்றும் 80-களில், சர்வதேச அளவில் சட்ட விரோத தந்த சந்தையின் ஊக்குவிப்பால் ஏராளமான யானைகளை நாம் இழந்துள்ளோம். யானைகளை கொல்லும் இந்த வேட்டை நடைமுறை அவற்றை பாதுகாப்பதில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மத்திய-மாநில அரசுகளின் பெரும் ஒத்துழைப்பு காரணமாக யானைகளை பாதுகாக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டியது அவசியமானது.

பாதுகாப்பு திட்டம்

இதனையடுத்து, புலிகளை பாதுகாப்பதற்கான 'புராஜெக்ட் டைகர்' என்னும் அடிப்படையில், 1992-ல் 'புராஜெக்ட் எலிபண்ட்' என்னும் யானைகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது.

யானைகள் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் நிதியுதவியுடன் தொழில்நுட்ப உதவியும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் யானைகள் சரணாலயங்களை உருவாக்குவது அடிப்படை மேலாண்மையாக அமைந்தது.

இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 80 ஆயிரத்து 778 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 33 யானைகள் சரணாலயங்கள் உள்ளன. 2022-ம் ஆண்டு யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் 30-வது ஆண்டை குறிக்கிறது. யானைகள் பாதுகாப்பு திட்டம், யானைகள் பாதுகாப்புக்கான முன்முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளது. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 2 புதிய யானைகள் சரணாலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேசத்தின் துத்வா பகுதி, தெராய் யானைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் பெரியார் மற்றும் அகஸ்தியர் மலை பகுதிகளுக்கு இடையே அகஸ்தியர் மலையில் யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா வெகுவேகமாக பொருளாதார ரீதியில் வளர்ந்துவரும் நிலையில், இயற்கை கலாசார உறவுகளை பேணவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். நமது புராணங்கள் கலை, மதம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை இயற்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளன.

யானைகள் திருவிழா

யானைகள் பாதுகாப்பு செய்தியை மக்களிடையே கொண்டு செல்ல மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், அசாம் வனத்துறை ஆகியவை இணைந்து, இத்திட்டத்தின் 30 ஆண்டுகளை குறிக்கும் வகையில் யானைகள் திருவிழாவை கொண்டாட உள்ளன. இந்த பிரமாண்டமான விலங்கினத்தை பாதுகாக்க ஒன்றுபட்டு உறுதியேற்கும் தளமாக யானைகள் திருவிழா விளங்கும். இந்த திருவிழா அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் இன்றும், நாளையும் (7, 8-ந் தேதிகளில்) நடைபெறுகின்றன.


Next Story