கன்று ஈன்ற மாடுகளுக்கு ஏற்படும் 'பால் காய்ச்சல்'


கன்று ஈன்ற மாடுகளுக்கு ஏற்படும் பால் காய்ச்சல்
x

கன்று ஈன்ற மாடுகளில் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை காரணமாக பால் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க சரியான முறையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பால் காய்ச்சல்

கன்று ஈன்ற மாட்டில் சீம்பால் சுரக்கும் போது, மாட்டு உடம்பில் இருந்து மூன்று மடங்கு கால்சியம், சீம்பால் உற்பத்திக்காக வெளியேறும். கால்சியம் வெளியேறும் அளவுக்கு, கால்சியத்தை உடலால் உட்கிரகிக்க இயலாத நிலை தோன்றினால், ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டு பால் காய்ச்சல் நோய் ஏற்படும். இதனை மாட்டு ஜன்னி என்றும் அழைக்கிறார்கள்.

அறிகுறிகள்

கன்று ஈன்று ஒரு மணி நேரம் முதல் 48 மணி நேரத்தில் பின்வரும் அறிகுறிகள் ஏற்படும். மாட்டின் கால்கள் செயல் இழந்து மாடு நிற்க இயலாத நிலை, கழுத்தை பக்கவாட்டில் வளைத்து தலையை தூக்க இயலாத நிலை, மாட்டின் உடல் வெப்பம் இயல்பை விட குறைதல், சாணம், சிறுநீரை வெளியேற்ற இயலாத நிலை, .மூச்சு திணறல் போன்றவை தோன்றலாம். சரியான சிசிக்சை அளிக்காவிட்டால், நோயின் கடைசி கட்டத்தில் சுய உணர்வு இழந்த நிலை மற்றும் மூக்கு, வாய்வழி வயிற்று நீர் வெளியேறுதல், பின்னர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழக்கவும் கூடும்.

எனவே நடையில் தடுமாற்றம், அதிக நேரம் நின்று கொண்டு இருப்பது, இயல்பாக படுக்காமல் கீழே விழுந்து படுப்பது, அதிக நேரம் படுத்து இருப்பது போன்றவை நோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகள் தோன்றினாலேயே கால்நடை டாக்டரை அணுகி உரிய சிகிச்சை அளிப்பது அவசியம்.

ரத்த மாதிரி ஆய்வு

பசுவின் ரத்தத்தில் சராசரி கால்சியம் அளவு 8.5 ஆகும். எனவே பசுவின் ரத்தத்தை ஆய்வகத்தில் சமர்ப்பித்து ஆய்வு செய்வதன் மூலம் கால்சியம் அளவை கண்டறிந்து முறையான சிகிச்சை அளிக்க முடியும். காலம் தாழ்த்தி சிகிச்சை அளித்தால் திடீர் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி அயானிக் கால்சியம் டானிக் வாய்வழியாக கொடுக்கலாம். பால் கறவையை நிறுத்த வேண்டும். பால் உற்பத்தியை அதிகரிக்கும் தீவனங்களை தவிர்க்க வேண்டும். வழுக்காத மண் தரையில் மாட்டை பராமரிக்க வேண்டும்.

முன்தடுப்பு முறைகள்

பால்காய்ச்சல் நோயை தடுக்க சினை பருவத்திலேயே மாடு பராமரிப்பு மிக முக்கியம்.

மெட்டபோலைட் போன்ற சினைமாட்டிற்கான தாது உப்பு கலவையை கன்று ஈனுவதற்கு முன்பான கடைசி 3 வாரங்கள் கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி வழங்கலாம். அயானிக் கால்சியம் டானிக் கால்நடை டாக்டர் ஆலோசனைப்படி கன்று ஈனுவதற்கு முன் கொடுக்கலாம்.

ஜெர்சி மாடுகளுக்கு இந்நோய் அதிகம் ஏற்படும். எனவே இவ்வின மாடுகளுக்கு முன் தடுப்பு மருந்துகளை அவசியம் வழங்க வேண்டும்.

ஈற்றுக்கு மேல் கன்று ஈன்ற மாடுகளில் இந்நோய் அதிகம் ஏற்படுவது கண்டறியபட்டு உள்ளதால், முன்தடுப்பு மருந்துகள் சினைமாடுகளுக்கு அவசியம் வழங்கி இந்நோயை தடுக்கலாம்.

தீவனபற்றாக்குறை அதிகம் உள்ள பகுதிகளிலும் இந்நோய் அதிகம் ஏற்படுகிறது. பசுந்தீவனம், காய்ந்த தீவனம், கலப்புதீவனம் மற்றும் நல்ல குடிநீர் போன்றவற்றை சமச்சீரான அளவு கிடைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும்.


Next Story