வடகொரியா எனும் 'மர்மதேசம்'


வடகொரியா எனும் மர்மதேசம்
x

அது ஒரு அதிகாலை நேரம்...

வேட்டையாடச் செல்வதற்காக அரண்மனையில் இருந்து புறப்பட்ட மன்னர், குதிரையில் ஏற முயன்ற போது கல் தடுக்கியதால் அவரது கால் விரலில் ரத்த காயம் ஏற்பட்டது. அப்போது எதிரே ஒருவன் வந்து கொண்டிருந்தான். கண்கள் சிவக்க கோபத்துடன் அவனை பார்த்த மன்னர், ''இன்று இவன் முகத்தில் விழித்ததால்தான் எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது. ராசியில்லாத இவனை உடனே தூக்கில் போடுங்கள்'' என்று கட்டளையிட்டார்.

மன்னரின் இந்த உத்தரவை கேட்டதும் அந்த அப்பாவி குடிமகன் லேசாக சிரித்தான். இதைப்பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கு சென்ற மன்னர், எதற்காக சிரிக்கிறாய்? என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அதற்கு அவன், ''இன்று முதன் முதலில் என் முகத்தில் விழித்த உங்களுக்கு லேசான காயம்தான் ஏற்பட்டது. ஆனால் உங்கள் முகத்தில் விழித்த எனக்கு உயிரே போகப்போகிறது... அதை நினைத்தேன் சிரிப்பு வந்தது'' என்றான்.

முடியாட்சி காலத்தில் பெரும்பாலான மன்னர்களின் மனோபாவம் இப்படித்தான் இருந்தது. ''ம்... என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்''. கேட்பதற்கு நாதி கிடையாது.

காலங்கள் உருண்டோட, விழிப்புணர்வு ஏற்பட்டு மக்கள் தங்கள் உரிமைகளுக்காக துணிந்து குரல் எழுப்ப தொடங்கியதால் உலகில் முடியாட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டு ஜனநாயகம் மலர்ந்தது.

அடிமைப்பட்டுக்கிடந்த பல நாடுகள் இரண்டாம் உலகப்போருக்கு பின் விடுதலை பெற்றன. அதன்பிறகே அங்குள்ள மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க ஆரம்பித்தார்கள். என்றாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு இன்னும் ஒரு சில நாடுகளில் ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது.

அப்படிப்பட்ட ஒரு நாடுதான் வடகொரியா. அந்த நாடு, 'கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு' என்று அழைக்கப்பட்டாலும் அங்கு மக்களுக்கான ஜனநாயக உரிமைகள் முழுமையாக கிடைக்கிறதா? அவர்கள் சுதந்திரமாக வாழ்கிறார்களா? என்றால் பெரும்பாலோனோரின் பதில் 'இல்லை' என்பதாகத்தான் இருக்கும்.

மூன்று தலைமுறைகளாக ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சிதான் அங்கு நடைபெற்று வருகிறது.

வடகொரியாவில் அப்படி என்னதான் நடக்கிறது?.... வாருங்கள் தூர நின்று எட்டிப்பார்ப்போம்...

கிழக்காசிய நாடான வடகொரியா, கொரிய தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் தெற்கே தென்கொரியாவும், வடக்கே சீனா மற்றும் ரஷியாவும், மேற்கே மஞ்சள் கடலும், கிழக்கே ஜப்பான் கடலும் எல்லைகளாக உள்ளன. 9 மாகாணங்களையும், 3 சிறப்பு மண்டலங்களையும் கொண்ட வடகொரியாவின் தலைநகராக பியாங்யாங் விளங்குகிறது.

1 லட்சத்து 20 ஆயிரத்து 540 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வடகொரியா தமிழ்நாட்டை (1 லட்சத்து 38 ஆயிரம் ச.கி.மீ.) விடவும் சிறிய தேசம். 2 கோடியே 60 லட்சம் மக்கள்தான் வசிக்கிறார்கள்.

ஒட்டுமொத்த கொரிய தீபகற்பமும் 1910-ம் ஆண்டு முதல் ஜப்பான் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்று அமெரிக்காவிடம் சரண் அடைந்ததை தொடர்ந்து, அங்கு ஜப்பானியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

1948-ல் கொரிய தீபகற்பம் தென்கொரியா, வடகொரியா என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. இதனால் ஒன்றாக வாழ்ந்த ஏராளமான குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பிரிய நேரிட்டதால் ஒருவரையொருவர் சந்திக்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டது. பிரிவினைக்கு பிறகு இரு நாடுகளும் கீரியும் பாம்புமாக இருந்து வருகின்றன.

இரண்டு கொரியாக்களுமே தங்கள் சொந்த அரசாங்கங்களின் கீழ் கொரியாவை ஒன்றாக இணைக்க முயன்றன. அத்துடன் எல்லை தகராறும் ஏற்பட்டதால் 1950-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டது. இதில் வட கொரியாவுக்கு ரஷியாவும், சீனாவும் ஆதரவு அளிக்க, தென் கொரியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் உதவிக்கு வந்தன. இதைத்தொடர்ந்து போர் தீவிரம் அடைந்ததால் இரு தரப்பிலும் பெரும் இழப்பு ஏற்பட்டது. ஏராளமான ராணுவத்தினர் மட்டுமின்றி 20 லட்சம் அப்பாவி மக்களும் பலி ஆனார்கள். இதனால் 1953-ம் ஆண்டில் இரு தரப்புக்கும் இடையே போர்நிறுத்த சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது.

மழை ஓய்ந்தாலும் தூறல் விடவில்லை என்பது போல் போர் முடிந்தாலும் இரு நாடுகளுக்கும் இடையே, முட்டலும் மோதலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பிரிவினையால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு சென்று தங்கள் உறவினர்களை சந்திக்க முடியாத நிலை உள்ளது.

கம்யூனிச ஆட்சி நடைபெறும் வடகொரியா ஓர் இரும்புத்திரை நாடாகவே விளங்குகிறது.

சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதால் ஆட்சியாளர்களின் குடும்பத்தை பற்றிய தகவல்கள் பெரும்பாலும் ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளன. தற்போதைய அதிபர் கிம் ஜாங் அன்னின் தாத்தா கிம் இல் சங் வடகொரியாவின் நிறுவனர் என்று போற்றப்படுகிறார். 1948-ம் ஆண்டு முதல் அதிபராக இருந்து வந்த கிம் இல் சங் 1994-ல் மரணம் அடைந்ததை தொடர்ந்து, அவரது மகன் கிம் ஜாங் இல் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார்.

சர்வாதிகாரியான கிம் ஜாங் இல்-கோ யோங் குல் தம்பதிக்கு 1982-ம் ஆண்டு ஜனவரி 8-ந்தேதி பிறந்தவர்தான் தற்போதைய அதிபர் கிம் ஜாங் அன். இவர் சிறுவயதில் சுவிட்சர்லாந்து நாட்டில் கோனிஸ் நகரில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். அப்போது இவர் வடகொரிய அதிபர் குடும்பத்து பிள்ளை என்று அங்குள்ளவர்களுக்கு தெரியாது. இவருக்கு ஒரு அண்ணன் மற்றும் ஒரு தங்கை உண்டு.

கிம் ஜாங் அன் 2009-ம் ஆண்டில் ரி சோல் ஜூ என்ற பெண்ணை மணந்தார். இவர் ஒரு பாடகி என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

2011-ம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல் இறந்ததை தொடர்ந்து, கிம் ஜாங் அன் புதிய அதிபராக பதவி ஏற்றார். இவரே ஆளும் கொரிய தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். 687 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றம் இருந்த போதிலும் ராணுவம், நிதி, பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் அதிபர் கிம் ஜாங் அன் கையிலேயே இருக்கிறது. அங்கு அவர் வைத்ததுதான் சட்டம். அவரை மீறியோ, அவரது விருப்பத்துக்கு மாறாகவோ எதுவும் நடந்துவிடாது. அப்படி யாராவது நடக்க முயன்றால், அவர்களின் கதி அதோ கதிதான்!..

''கிம் ஜாங் அன் குடும்பத்தினர் இல்லை என்றால் வட கொரியா என்ற ஒரு நாடே கிடையாது. அவர்களால்தான் வாழ்கிறோம். அவர்களை விட்டால் நமக்கு வேறு கதிஇல்லை'' என்ற எண்ணம் ஆண்டாண்டு காலமாக அந்த நாட்டு மக்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக திணிக்கப்பட்டு உள்ளது. இப்போதும் அது தொடர்கிறது.

''நீங்கள் இல்லாமல் எங்கள் தாய் நாடு இல்லை'' என்ற பாடலை வட கொரிய ராணுவத்தினர் தினமும் பாடுகிறார்கள். பள்ளிகளிலும் இந்த பாடல்தான் பாடப்படுகிறது. பள்ளிக்கூடங்கள், அரசு கட்டிடங்கள் என எங்கு பார்த்தாலும் கிம் ஜாங் அன், அவரது தாத்தா கிம் இல் சங், தந்தை கிம் ஜாங் இல் ஆகியோரின் படங்கள்தான் இருக்கும். தலைநகர் பியாங்யாங்கிலும், மற்ற நகரங்களிலும் கிம் ஜாங் அன்னின் தாத்தா மற்றும் தந்தையின் சிலைகள்தான் உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளில் இவர்களுடைய படங்களை வைத்திருக்க வேண்டும். இவர்களுடைய படங்களை அவமதிப்பது, மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு கடும் தண்டனை வழங்கப்படும்.

ஆட்சியாளர்களின் புகழ்பாடுவதே பெருமை என்ற நிலைக்கு மக்கள் ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வடகொரிய மக்களுக்கு கருத்து சுதந்திரம் மற்றும் அரசியல், பொருளாதார சுதந்திரம் கிடையாது. சொந்த நாட்டிலேயே எல்லா இடங்களுக்கும் விருப்பம் போல் செல்ல முடியாது. அரசின் அனுமதி இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறுவது சட்ட விரோதமாகும். அப்படி தப்பிச்செல்ல முயற்சிப்பவர்கள் பிடிபட்டால், அவர்களுடைய வாழ்க்கை கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அதற்காக பிரத்யேக சிறைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவார்கள். அங்கு கடுமையான வேலைகளை செய்ய வேண்டும். போதிய உணவும் வழங்கப்படாது. அவர்களுடைய குடும்பமும் தண்டனைக்கு உள்ளாகும்.

வடகொரியர்கள் வெளிநாடு செல்ல கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. தூதரக பணி, படிப்பு மற்றும் சில முக்கிய வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். இதேபோல் அந்த நாட்டு விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் கலந்து கொள்ள வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். என்றாலும் அவர்கள் அங்கு ரகசியமாக கண்காணிக்கப்படுவார்கள். நாடு திரும்பிய பிறகும் அவர்கள் யார்-யாரை சந்தித்தார்கள்? என்னென்ன பேசினார்கள்? என்பது பற்றி விசாரிக்கப்படும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் மிகவும் அபூர்வமாகத்தான் மற்றவர்களுடன் பேசுவார்கள்.

இதேபோல் தனிப்பட்ட முறையில் வெளிநாட்டினர் யாரும் வட கொரியாவுக்கு சுற்றுலா செல்ல முடியாது. குழுவாகத்தான் அங்கு செல்ல முடியும். அதுவும் அந்த நாட்டு அதிகாரிகள் ஏற்பாடு செய்யும் குழுவினர், அல்லது வட கொரிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா ஏஜென்சிகள் அழைத்துச் செல்லும் குழுவினர் மட்டுமே அந்த நாட்டுக்குள் நுழைய முடியும். அங்கு சுற்றுலா செல்லும் போது, அந்த நாட்டின் வழிகாட்டி எப்போதும் கூடவே வருவார். வழிகாட்டி இல்லாமல் எங்கும் செல்ல முடியாது.

உள்நாட்டு ரகசியம் கசிந்துவிடும் என்று கருதுவதால் தங்கள் மக்களுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பேசுவதை வட கொரிய அரசு விரும்புவது இல்லை. ஒருவேளை சுற்றுலா பயணிகள் பேச நேர்ந்தாலும் யாருடன் பேசுகிறோம்? என்ன பேசுகிறோம்? என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த நாட்டை பற்றியோ, அந்நாட்டின் தலைவர்களை பற்றியோ ஏதாவது மரியாதை குறைவாக பேசிவிட்டால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருந்தால் 'விசா' பெற்று அங்கு சுற்றுலாவாகவோ, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை பார்க்கவோ அல்லது வர்த்தக விஷயமாகவோ செல்ல முடியும். வேலைவாய்ப்பு தேடி அங்கு செல்ல அனுமதி கிடையாது.

வடகொரியா பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல. அங்கு பெண்கள் அதிகாரிகளால் காவலில் வைக்கப்படுவதும், மனிதாபிமானமற்ற முறையில் துன்புறுத்தப்படுவதும், சரியாக உணவு வழங்காமல் கட்டாயப்படுத்தி வேலைவாங்கப்படுவதும், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும் நடப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.

வடகொரிய அரசு நாத்திக அரசாக விளங்குவதால் மதத்தை ஊக்குவிப்பது இல்லை. என்றாலும் மதச் சடங்குகளை செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது.

வடகொரியாவில் வெறும் 30 ஆயிரம் கார்களே உள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான மக்களே கார்களை பயன்படுத்துகிறார்கள். அரசாங்கம் நடத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சி செய்திகளைத்தான் வட கொரிய மக்கள் 'விதியே' என்று கேட்கவும், பார்க்கவும் முடியும். அவற்றில் முழுக்க முழுக்க அரசாங்கத்தின் சுயபுராணம்தான்.

வடகொரியாவில் செல்போன் பயன்படுத்துவதற்கு நிறைய கட்டுப்பாடுகளை அந்த நாட்டு அரசு விதித்திருக்கிறது. அரசாங்கம் விரும்பாத எந்த தகவலையும் செல்போன் மூலம் மக்கள் பார்க்க முடியாது. அங்குள்ள போன்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பேச முடியாது. சர்வதேச அழைப்புகளுக்கான செல்போன் சிக்னல்கள் முடக்கப்பட்டு உள்ளன. 2017-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி, வடகொரியாவில் 69 சதவீத வீடுகளில்தான் செல்போனை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

வடகொரிய மக்களுக்கு இணையதள வசதி கிடையாது. அந்த நாட்டில் வெறும் 0.5 சதவீத மக்கள் மட்டுமே இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள். அங்கிருக்கும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்த முடியும். வெளிநாட்டுக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கான மையங்களுக்கு சென்றுதான் அனுப்ப வேண்டும். அனுப்பும் தகவலை அங்குள்ள அதிகாரி படித்துப்பார்த்த பின்புதான் அனுப்பி வைப்பார். எனவே அங்கிருந்து ரகசியமாக எந்த தகவலையும் கடத்த முடியாது.

2006-ம் ஆண்டு வடகொரியாவில் இருந்து ரகசியமாக தப்பி வெளிநாடு சென்ற கிம் மின் யுக் என்பவர் இதுபற்றி கூறுகையில், ''வடகொரிய மக்கள் வெளியுலகில் இருந்து துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், இணையதளம் என்றால் என்னவென்றே அவர்களுக்கு தெரியாது'' என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

இதேபோல் 2008-ம் ஆண்டு அங்கிருந்து தப்பிய இல்லியோங் ஜூ என்ற இளைஞர் கூறுகையில்; ''எங்கள் வீட்டில் அப்பா ஒரு சிறிய ரேடியோ வைத்திருந்தார். பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் கேட்டுவிடாதபடி அதில் நாங்கள் குறைவாக சத்தம் வைத்து தென் கொரிய வானொலி நிகழ்ச்சிகளை கேட்போம். வெளிநாட்டு வானொலி நிகழ்ச்சிகளை கேட்பது குற்றம் என்பதால், நாங்கள் பிடிபட்டிருந்தால் சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கப்பட்டு இருப்போம்'' என்றார்.

அரசுக்கு எதிராக செயல்பட்ட அல்லது கருத்து தெரிவித்த அல்லது சந்தேகத்துக்கு உள்ளான அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றிய தகவல்கள் எதுவும் வெளியாவதில்லை.

வட கொரியாவில் லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளுக்கான 6 முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பதாகவும், போதிய உணவு இன்றியும், சித்ரவதைகளாலும் இவர்களில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேர் வரை இறந்து போவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டி இருக்கிறது.

1991-ம் ஆண்டு ஐ.நா.சபையில் வடகொரியா இணைந்தது. இதேஆண்டில்தான் தென்கொரியாவும் ஐ.நா.வின் அங்கமானது. இரு நாடுகளுமே அணிசேர நாடுகள் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன. 2015-ம் ஆண்டின் நிலவரப்படி வடகொரியா 166 நாடுகளுடன் தூதரக உறவு வைத்துள்ள போதிலும், 47 நாடுகளில் மட்டுமே அதற்கு தூதரகங்கள் இருக்கின்றன. வடகொரியாவுக்கு டெல்லியில் தூதரகம் உள்ளது.

கம்யூனிஸ்டு நாடுகளான ரஷியாவும், சீனாவும் வடகொரியாவின் நட்பு நாடுகள். ரஷிய அதிபர் புதின், கிம் ஜாங் அன்னின் நெருங்கிய நண்பர். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு கிம் ஜாங் அன் முழு ஆதரவு அளிக்கிறார். தென்கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியாவுடனும் நெருக்கமான உறவு வைத்திருக்கிறது.

வடகொரியாவுடன் தூதரக உறவு வைத்துள்ள பல நாடுகள் அந்த நாட்டுக்கான தூதரகங்களை தலைநகர் பியாங்யாங்கில் அமைக்காமல்,அதன் அண்டை நாடான சீனாவின் தலைநகர் பீஜிங்கிலேயே வைத்துள்ளன.

அமெரிக்கா, ஜப்பான், அர்ஜென்டினா, பிரான்ஸ், எஸ்டோனியா, போட்ஸ்வானா, ஈராக், இஸ்ரேல், தைவான் நாடுகளுடன் வடகொரியாவுக்கு தூதரக ரீதியிலான உறவுகள் கிடையாது.

தென்கொரியாவுக்கு பக்கபலமாக இருப்பதால் அமெரிக்காவை முக்கிய எதிரியாக கருதுகிறது வடகொரியா.

2018-ம் ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினார்கள். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாக கருதப்பட்டது. அதன்பிறகு 2019-ம் ஆண்டு பிப்ரவரி 27 மற்றும் 28-ந்தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தைகளால் பரஸ்பர உறவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் அவர்களுடைய செயல்களுக்காக நினைவு கூரப்படுகிறார்களே தவிர, போற்றப்படுவது இல்லை. உரிமைகளை பறித்து மக்களை அடக்கி வைப்பது என்பது, பந்தை நீருக்குள் மூழ்கடித்து வைப்பதை போன்றது. எவ்வளவு காலம் அது சாத்தியம்?

எல்லா இரவுகளுக்கும் விடியல் உண்டு. வடகொரிய மக்களின் வாழ்விலும் அது ஏற்படாமலா போகும்?...

ராணுவத்துக்கு முக்கியத்துவம்

''ராணுவம்தான் முதல்'' என்ற அரசியல் கொள்கையை பின்பற்றும் நாடு என்பதால், வடகொரியாவில் ராணுவத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 10 லட்சத்து 21 ஆயிரம் ராணுவ வீரர்களை கொண்டுள்ள இது அணுஆயுத நாடாகவும் விளங்குகிறது. ரசாயன, உயிரி ஆயுதங்களையும் கைவசம் வைத்திருக்கும் கிம் ஜாங் அன் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி மற்ற நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தி வருகிறார். அத்துடன் விண்வெளி ஆராய்ச்சியிலும் வடகொரியா முழு கவனம் செலுத்துகிறது.

வடகொரியா-தென்கொரியா இடையேயான 240 கி.மீ. நீளம் கொண்ட எல்லைதான் உலகிலேயே அதிக பதற்றம் நிறைந்த எல்லைப்பகுதியாக விளங்குகிறது. எல்லையில் இருந்து வடகொரியாவில் 2 கி.மீ. தூரமும், தென் கொரியாவில் 2 கி.மீ. தூரமும் ராணுவ நடமாட்டம் அற்ற பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

தப்பிச்சென்றவர்களின் நிலைமை



வடகொரியாவில் இருந்து கடந்த 2000-வது ஆண்டு முதல் இதுவரை 34 ஆயிரம் பேர் தென் கொரியாவுக்கு தப்பிச்சென்றுள்ளனர். அப்படி சென்றவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். இவர்களில் 19 சதவீதம் பேர் கணவனை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசிப்பவர்கள்.

வடகொரியாவில் சுதந்திரம் இன்றி அடக்குமுறைக்கு பயந்து வாழ்ந்த இவர்களால் நவீன உலகத்துக்கும், தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கும் ஈடுகொடுத்து வாழ்வது மிகவும் சவாலாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்த தெரியாததால் நல்ல வேலைக்கு செல்ல முடிவதில்லை. இதனால் அவர்கள் வாழ்க்கை இருதலைக்கொள்ளி எறும்பு போல் சிரமம் நிறைந்ததாகவே உள்ளது.

வடகொரியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு செல்பவர்கள், ஏஜெண்டுகளின் உதவியுடன் சீனா வழியாக தப்புகிறார்கள். அப்படி தங்கள் நாட்டுக்குள் நுழைபவர்களில் பலரை சீனா பிடித்து மீண்டும் வடகொரியாவுக்கே திருப்பி அனுப்பி விடுகிறது. அவர்கள் முகாம் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகிறார்கள்.

வடகொரியாவில் சீன எல்லையையொட்டி அமைந்துள்ள ைஹசன் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி யுயோன்மி பார்க், 2007-ம் ஆண்டு தனது தாயாருடன் சீனாவுக்கு தப்பிச் சென்று, பின்னர் அங்கிருந்து கோபி பாலைவனம் வழியாக மங்கோலியா சென்றார். அதன்பிறகு அங்கிருந்து தென்கொரியா போன அவர், தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார். எசக்கீல் என்ற அமெரிக்கரை மணந்து ஒரு மகனுக்கு தாயான யுயோன்மி பார்க்குக்கு தற்போது 29 வயது ஆகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய யுயோன்மி பார்க், வடகொரியாவில் இருந்து தப்பிய போது தான் அனுபவித்த வேதனைகளையும் துயரங்களையும் கண்ணீர் மல்க தெரிவித்தார். சீனாவில் ஒரு புரோக்கர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, அதை தடுக்க தனது தாயார் தன்னையே அவனுக்கு அர்ப்பணித்ததாக அப்போது அவர் அழுதுகொண்டே கூறினார். வடகொரியாவில் பெண்கள், சிறுமிகளில் 70 சதவீதம் பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக கூறிய அவர், காதல், சினிமா என்று எதற்கும் அங்கு இடம் கிடையாது எனவும் தெரிவித்தார்.

விமானநிலையத்தில் நடந்த கொலை



வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங்-நாம் மர்மமான முறையில் கொல்லப்பட்டது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த கிம் ஜாங்-நாம்தான் மறைந்த அதிபர் கிம் ஜாங்-இல்லின் மூத்த மகன் ஆவார். அதாவது கிம் ஜாங்-இல்லின் மற்றொரு மனைவியான சாங் கை-ரிம் என்பவருக்கு பிறந்தவர். தந்தையின் மறைவுக்கு பிறகு இவர்தான் புதிய அதிபராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், கிம் ஜாங்-நாம் சீனாவில் இருந்து போலி பெயரில் போலி பாஸ்போர்ட்டில் ஜப்பானுக்கு சென்ற போது அங்கு 2001-ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு, சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதனால் தந்தையின் ஆதரவை இழந்தார். இந்த நிலையில், 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிம் ஜாங் அன் வட கொரியாவின் புதிய அதிபராக அறிவிக்கப்பட்டார். அந்த சமயத்தில் கிம் ஜாங்-நாம் வெளிநாட்டில் இருந்தபடி வடகொரியாவில் நடைபெறும் தங்கள் குடும்ப ஆட்சியை விமர்சித்ததோடு, சீர்திருத்தங்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில், 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13-ந்தேதி மக்காவுக்கு செல்ல, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் கிம் ஜாங்-நாம் காத்திருந்த போது, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த இரு பெண்களால் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட நரம்புகளை செயல் இழக்கச் செய்யும் 'வி.எக்ஸ்.' என்ற ரசாயன ஆயுதத்தின் மூலம் அவர் கொல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையின் போது, டி.வி.க்கான வேடிக்கை நிகழ்ச்சி என்று சொல்லி தங்களை சிலர் நடிக்கச் சொன்னதாகவும், தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும், தாங்கள் அப்பாவிகள் என்றும் அந்த பெண்கள் கண்ணீர் மல்க கதறினார்கள்.

இந்த சம்பவம் நடந்ததும் வடகொரியாவின் ஏஜெண்டுகள் என சந்தேகிக்கப்படும் 4 பேர் கோலாலம்பூரில் இருந்து பியாங்யோங் நகருக்கு விமானத்தில் கிளம்பிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிபர் கிங் ஜாங் அன் திட்டமிட்டு உளவாளிகள் மூலம் தனது ஒன்றுவிட்ட அண்ணன் கிம் ஜாங்-நாம்மை தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்ததாக கூறப் படுகிறது.

இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

கொல்லப்பட்ட கிம் ஜாங்-நாம்முக்கு 2 மனைவிகளும், 6 பிள்ளைகளும் உள்ளனர்.

அமெரிக்க மாணவர் சித்ரவதை



வடகொரியாவுக்கு செல்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம் என்பதால், பெரும்பாலும் அங்கு யாரும் செல்ல விரும்புவது இல்லை. அனுமதியும் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அப்படியே சென்றாலும் ஏராளமான கட்டுப்பாடுகளை பின்பற்றவேண்டும். அங்கு சுதந்திரமாக எங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ முடியாது.

2015-ம் ஆண்டு வடகொரியாவுக்கு சென்ற அமெரிக்க மாணவர் ஒருவர் சித்ரவதைக்கு ஆளாகி, பின்னர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கியது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஓட்டோ பிரெடெரிக் வாம்பியர். அங்குள்ள விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் படித்த அவர், மேல் படிப்புக்காக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் நகருக்கு சென்றார். புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஓட்டோ வாம்பியரும் மேலும் 10 அமெரிக்க மாணவர்களும் 2015-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி ஹாங்காங்கில் இருந்து சீன தலைநகர் பீஜிங் வழியாக விமானத்தில் வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஒரு சுற்றுலா ஏஜென்சி செய்திருந்தது.

பியோங்யோங் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர்கள், புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடியதோடு, உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியின் உதவியுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். சுற்றுலா முடிந்து 2016-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி மீண்டும் பீஜிங் திரும்புவதற்காக ஓட்டோ வாம்பியரும், மற்ற மாணவர்களும் பியோங்யோங் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் விமானத்தில் ஏற தயாராக இருந்த நிலையில், திடீரென்று அங்கு வந்த இரு வடகொரிய அதிகாரிகள் ஓட்டோ வாம்பியரிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக கூறி அவரை மட்டும் அங்கிருந்து அழைத்துச்சென்றனர். இதனால் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்பதை உணர்ந்த மற்ற மாணவர்கள் செய்வதறியாது தவித்தனர். நீண்ட நேரமாகியும் ஓட்டோ வாம்பியர் திரும்பி வராததால் மற்ற மாணவர்களுடனும், பயணிகளுடனும் விமானம் பீஜிங் நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

பின்னர்தான் ஓட்டோ வாம்பியர் கைது செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. ஓட்டலில் தங்கி இருந்த போது ஒரு நாள் இரவு 2 மணி அளவில், தடை செய்யப்பட்ட 2-வது மாடிக்கு சென்று அங்கு ஒட்டப்பட்டு இருந்த வாசகங்களுடன் கூடிய அதிபர் கிம் ஜாங் அன்னின் சுவரொட்டியை கிழித்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. வடகொரியாவில் கிம் ஜாங் அன்னின் படத்தை கிழிப்பது தண்டனைக்குரிய கடுமையான குற்றம் ஆகும்.

விசாரணையின் போது அவர் 2-வது மாடிக்கு சென்று சுவரொட்டியை கிழிப்பதை போன்ற கண்காணிப்பு கேமரா காட்சியை வடகொரிய அதிகாரிகள் வெளியிட்டனர். மேலும் தான் செய்தது தவறுதான் என்றும், தன்னை மன்னித்து விடுதலை செய்யுமாறு ஓட்டோ வாம்பியர் கதறியபடி கூறும் வீடியோவையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

ஆனால் இந்த சுவரொட்டி கிழிப்பு, வீடியோவில் ஓட்டோ வாம்பியர் கூறியது எல்லாம் வடகொரிய அரசின் 'ஏற்பாடு' என்றும், அமெரிக்காவுக்கு பாடம் புகட்டுவதற்காக இவ்வாறு நடந்து கொள்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் ஓட்டோ வாம்பியருக்கு வடகொரியா கோர்ட்டு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதற்கு அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளும், ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன.

தண்டனை காலத்தின் போது ஓட்டோ வாம்பியர் துன்புறுத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் 'கோமா' நிலையை அடைந்த அவரது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு கண் பார்வையும் மங்கியதால் பியோங்யாங் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, ஓட்டோ வாம்பியரை மீட்க கடும் முயற்சிகளை மேற்கொண்டார். அமெரிக்கா பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து 17 மாதங்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட ஓட்டோ வாம்பியர் 2017-ம் ஆண்டு ஜூன் 13-ந்தேதி விமானம் மூலம் அமெரிக்கா கொண்டு வரப்பட்டார். தாயகம் திரும்பிய 6 நாட்களில் அதாவது ஜூன் 19-ந்தேதி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 22.

சர்வதேச அரங்கில் வட கொரியாவின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா குரல் கொடுப்பதால் பழிவாங்கும் நோக்கில் வடகொரிய அரசு இவ்வாறு கொடூரமாக நடந்து கொண்டதாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக ஓட்டோ வாம்பியரின் பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நியூயார்க் கோர்ட்டு நீதிபதி பெரில் ஏ ஹோவல், அவர்களுக்கு 501 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வழங்குமாறு வடகொரிய அரசுக்கு உத்தரவிட்டு 2018-ம் ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி தீர்ப்பு வழங்கினார். வடகொரிய அரசு இந்த தீர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், நஷ்டஈடு தொகையை வசூலிக்க புது யோசனை ஒன்றை கோர்ட்டு தெரிவித்தது. சர்வதேச தடையை மீறி நிலக்கரி ஏற்றிச்சென்ற வடகொரியாவுக்கு சொந்தமான 'வைஸ் ஹானஸ்ட்' என்ற சரக்கு கப்பலை இந்தோனேசியாவில் அமெரிக்கா ஏற்கனவே பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்த கப்பலை விற்று ஓட்டோ வாம்பியர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு அமெரிக்க அரசுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இப்படியாக இந்த பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.


Next Story