பப்பாளி சாகுபடி செய்தால் ஆண்டு முழுவதும் வருமானம்


பப்பாளி சாகுபடி செய்தால் ஆண்டு முழுவதும் வருமானம்
x

சந்தையில் பப்பாளிக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது. எனவே பப்பாளியை பயிரிட்டு நல்ல லாபம் பெறலாம்.

மண் மற்றும் பருவம்

பப்பாளி பலவகைப்பட்ட மண்ணிலும் வளரும் இயல்புடையது. படுகை நிலங்கள், மணல் கலந்த பூமி, நல்ல வடிகால் வசதி கொண்ட நீர் தேங்காத நிலங்கள் போன்றவை பப்பாளி பயிரிட ஏற்றதாகும். இன்னும் சொல்வதென்றால் களிமண் பூமி பப்பாளி சாகுபடிக்கு உகந்ததாகும். தமிழகத்தை பொறுத்தவரை ஜூன் முதல் ஆகஸ்டு வரை, நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில் நடவு செய்யலாம். தொடர்ந்து மழை பெய்யும் காலத்தில் நடவை தவிர்ப்பது நல்லது.

விதையும், விதைத்தலும்

கோ-3, கோ-7, கோ-8 ரக விதைகள், ஒரு ஏக்கருக்கு 100 முதல் 125 கிராம் விதை போதுமானது. ஒரு பங்கு மக்கிய தொழு உரம், ஒரு பங்கு வண்டல், செம்மண், இரு பங்கு மணல் கலந்த மண் கலவையை 14 செ.மீ. நீளம், 9 செ.மீ. அகலம் உள்ள பாலித்தீன் பைகளில் நிரப்பி கொள்ள வேண்டும். இந்த கலவையில் விதையை 1 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.

பின்னர் தினமும் காலை மற்றும் மாலையில் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். விதைகள் 10 முதல் 20 நாட்களில் முளைக்க தொடங்கும். செடிகள் இந்த பாலித்தீன் பையில் 1 அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கும்போது எடுத்து நிலத்தில் நடலாம். பொதுவாக, பப்பாளி நாற்றுக்கள் 40 முதல் 50 நாட்களில் நடவுக்கு தயாராகும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 முதல் 3 முறை நன்கு உழுது சமப்படுத்தி 45 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம், 45 செ.மீ ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒரு குழிக்கும் மற்றொரு குழிக்கும் இடையில் 1.8 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். குழிகளை சுமார் ஒரு வார காலம் ஆறப்போட வேண்டும். குழியிலிருந்து எடுத்த மண்ணுடன் 10 கிலோ மக்கிய தொழுஉரம் 50 கிராம் மணிச்சத்து சேர்த்து குழிகளை நிரப்ப வேண்டும்.

நாற்று நடுதல்

நாற்றுக்களை வெயில் குறைந்த மாலை வேளையில் குழிகளின் மத்தியில் நடவு செய்ய வேண்டும். நாற்றுக்களின் தண்டுகள் மென்மையாக இருக்கும் என்பதால் செடிகளுடன் 2 அடி உயர குச்சிகளை வைத்து கட்டி செடிகள் ஒடியாமல் பாதுகாப்பாக வளரவிட வேண்டும்.

செடிகள் சற்று வளர்ந்த நிலையில் தேவைக்கேற்ப மண் அணைக்க வேண்டும். பொதுவாக, 4-வது, 8-வது மாதத்தில் மண் அணைப்பது நல்லது. பூக்க தொடங்கியவுடன் ஒரு குழியில் ஒரு பெண் செடியை விட்டு இதர ஆண் செடிகளை நீக்க வேண்டும். அதே வேளையில் 10 முதல் 15 செடிகளுக்கு ஒரு ஆண் செடி இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதர பராமரிப்பு

ஒவ்வொரு செடிக்கும் தழை, மணி, சாம்பல் சத்து கலந்து 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். பப்பாளி பயிர் 2 அல்லது 3 மாதங்களுக்கு வளரும் வரை 3 அல்லது 4 முறை களை எடுக்க வேண்டும். பப்பாளி செடியை அழுகல் நோய் தாக்கும்.

இது வேரிலும், தண்டுகளிலும், பழங்களிலும் தாக்கி பூஞ்சாணம் மூலம் பரவுகிறது. எனவே வேர்ப்பாகத்தை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், நோய் தாக்கிய பயிர்களை பாதுகாக்க 1 சதவீத போர்டோ கலவை அல்லது காப்பர் ஆக்சிகுளோரைடு மருந்தை 1 லிட்டர் நீரில் 2 கிராம் அளவு கலந்து வேர்கள் நனையுமாறு ஊற்ற வேண்டும்.

செடிகளை நட்ட 9 முதல் 10-வது வாரத்தில் பப்பாளி அறுவடைக்கு வரும். பழங்களின் தோலில் மஞ்சள் நிறம் தோன்றும் நிலையில் அறுவடை செய்ய வேண்டும்.

பப்பாளி மருத்துவ குணங்கள்

பப்பாளியில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் சி, ஏ என்று பல்வேறு சத்துக்கள் உள்ளன. எனவே, அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. பப்பாளியை உண்பதால் பல நன்மைகள் கிடைப்பதாக மருத்துவ நூல்கள் கூறுகின்றன. அதாவது உடல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் உதவும். குழந்தைகளின் பற்கள், எலும்பு வளர்ச்சிக்கு மிக நல்லது. ஈரல், கல்லீரலில் அழற்சியை போக்கும். ஈரலின் வீக்கங்களை சரி செய்யும்.

வைட்டமின்-ஏ அதிகம் இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கலை போக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். பப்பாளிக்காயை சமைத்து உண்டால் தாய்ப்பால் பெருகும்.


Next Story