தித்திக்கும் சேலத்து மாம்பழம்


தித்திக்கும் சேலத்து மாம்பழம்
x
தினத்தந்தி 5 May 2023 2:30 PM GMT (Updated: 5 May 2023 2:30 PM GMT)

சேலம் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது மாம்பழம்தான். ‘மாங்கனி நகரம்’ என்று அழைக்கப்படும் சேலத்து மாம்பழங்களுக்கு தித்திப்பு மட்டும் அல்ல; நாடுமுழுவதும் ஏகோபித்த வரவேற்பும் உண்டு.

மாம்பழத்தில் உள்ள சத்துக்கள்

மாம்பழத்தில் மனித உடலுக்கு முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை உள்ளன.

தித்திக்கும் அல்போன்சா மாம்பழம்

அல்போன்சா மாம்பழம் இந்தியாவில் மிகவும் பிரபலமான மாம்பழங்களில் ஒன்று. 15-ம் நூற்றாண்டில் கோவாவை கைப்பற்றிய போர்ச்சுகீசிய ஜெனரல் அல்போன்சோ டி அல்புகர்கியின் நினைவாக இந்த மாம்பழத்துக்கு பெயரிடப்பட்டது. அல்போன்சாவின் சதைப்பகுதி மென்மையாகவும், கூழ் போலவும், செழுமையான, இனிய சுவையுடன் இருக்கும். மெல்லிய தோலைக் கொண்டுள்ளது. பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் அதன் சதை சற்று நார்ச்சத்து அமைப்புடன் மென்மையாக இருக்கும். இதேபோல இமாம்பசந்த் மாம்பழங்கள் மஞ்சள் தோல் மற்றும் ஆரஞ்சு சிவப்பு சதையுடன் அதிக இனிப்பு சுவை கொண்டவை. இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரின் நாவிலும் நீர்வூரச் செய்யும் சுவையும், மணமும் சேலத்து மாம்பழங்களுக்கு உண்டு.

சுவைக்கு காரணம்

சேலம், மேட்டூர் வட்டாரங்களில் விளையும் மாங்கனிகள் சுவையாக இருப்பதற்கு அந்த மண்ணில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதே காரணம் என்று கண்டறியப்பட்டது. அதை அறிந்த ஆங்கிலேயர் அந்த வட்டாரங்களில் மாமரங்களை அதிக அளவில் நடுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். அவ்வாறு, ஆங்கிலேயர்கள் 130 ஆண்டுகளுக்கு முன்னர் நட்டுவைத்த மாமரங்கள் சில, அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள வரகம்பாடி, வாழையடித்தோப்பு கிராமங்களில் இன்றும் உள்ளன.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் மாம்பழச் சீசன் களை கட்டிவிடும். இந்த ஆண்டும் சீசன் வழக்கம்போல் களை கட்டி வருகிறது.

விளைச்சல்

மல்கோவா, அல்போன்சா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா, நடுசாளை ஆகிய ரகங்கள் சேலம் மாவட்டத்தில் விளையும் மாங்கனிகள். இவை, வரகம்பாடி, வாழையடித்தோப்பு, சேலத்தை அடுத்த செட்டிச்சாவடி, மேட்டூர் வட்டாரத்தில் வீரக்கல், சோரகை, மேட்டூர், நங்கவள்ளி, ஜலகண்டாபுரம், சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் அதிகம் விளைகின்றன.

இதேபோல மாவட்டத்தில் அடிமலைபுதூர், அயோத்தியாப்பட்டணம், தாரமங்கலம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

இங்கு மாம்பழ விளைச்சலும் அதிகம். இதுபோன்ற இடங்களில் விளையும் மாம்பழங்கள் கெட்டியாகவும் இருக்கும். முதிர்ந்த பருவத்தில் பறிக்கப்படும் மாங்காய்கள் பழுத்த பின்னர், 15 நாட்கள் வரை அழுகாமல் இருக்கும். மாம்பழங்களை துண்டுகளாக நறுக்கும்போது, கேக் போல துண்டுகளாகும், ஆனால், சாறு வடியாது.

ஏற்றுமதி

சேலத்தில் இருந்து மாம்பழங்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம் வ.உ.சி. பழ மார்க்கெட், மண்டிகளுக்கு (ஏலமையம்) மாம்பழம் வரத்து அதிகரித்து இருக்கிறது. சேலம் டவுனில் உள்ள பல்வேறு மண்டிகளுக்கு மல்கோவா, சேலம் பெங்களூரா, நடுசாளை, இமாம் பசந்த் ஆகிய மாம்பழங்கள் விற்பனைக்கு வர தொடங்கி இருக்கின்றன.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் மாம்பழ வரத்து வெறும் 5 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 15-ந்தேதி முதல், 30 முதல் 40 சதவீதமாக இருந்தது. தற்போது 100 டன் வரை மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. இதனை மண்டியிலிருந்து மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வாங்கிச் செல்கின்றனர்.

உச்சத்தை தொடும்

கடந்த ஆண்டு மல்கோவா, இமாம் பசந்த், சேலம் பெங்களூரா மாம்பழங்கள் ஒரு டன் சுமார் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. தற்போது டன்னுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. அல்போன்சா மாம்பழம் கடந்த ஆண்டு ஒரு டன் ரூ.90 ஆயிரம் வரையும், இந்தாண்டு ரூ.1 லட்சம் வரையும் விற்பனை ஆகிறது. கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல செந்தூரா, பங்கனப்பள்ளி மாம்பழங்கள் கடந்த ஆண்டு ஒரு டன் ரூ.95 ஆயிரம் வரையும், இந்தாண்டு ரூ.90 ஆயிரம் வரையும் விற்கப்படுகிறது. கிலோ ரூ.40 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. குண்டு வகை மாம்பழம் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், நடுசாளை கிலோ ரூ.30 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம் பகுதிகளில் இருந்து சேலத்திற்கு மாம்பழம் வரத்து சற்று குறைவாகவே உள்ளது. இன்னும் இரு வாரங்களில் மாம்பழம் வரத்து உச்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேலத்தில் தற்போதைய நிலவரப்படி வெறும் 10 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில்தான் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகிறது. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவும், தர்மபுரி மாவட்டத்தில் 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவும் மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. சீசனின் போது 60 ஆயிரம் முதல் 75 ஆயிரம் டன் மாம்பழம் விளைச்சல் கிடைக்கிறது.

கிருஷ்ணகிரி முதலிடம்

தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சுவைமிகுந்த மாம்பழங்கள் விளைகின்றன. மாங்கனி உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தையும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதலிடத்தையும் பெற்றுள்ளது. இங்கு மல்கோவா, அல்போன்சா, செந்தூரா, பீத்தர், பங்கனப்பள்ளி, சேலம் பெங்களூரா, பெங்களூரா(தோத்தாபுரி), குண்டு, நீலம், சக்கரக்கட்டி, இமாம்பசந்த், ஜஹாங்கீர், ருமானி இதுதவிர கர்நாடக மாநில வரவான மல்லிகா உள்பட பல்வேறு ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. தற்போது சீசனையொட்டி மாம்பழங்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. செந்தூரா கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரையிலும், மல்கோவா கிலோ ரூ.120 முதல் ரூ.180 வரையிலும், இமாம்பசந்த் கிலோ ரூ.200 வரையிலும், பங்கனப்பள்ளி கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரையிலும் விற்பனை ஆகிறது.

தேசியப் பழம்

இந்தியாதான் மாம்பழங்களின் பூர்வீகம். உலகிலேயே அதிகப்படியான மாம்பழங்கள் இந்தியாவில்தான் விளைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 மில்லியன் டன் மாம்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களில் மாம்பழம் அதிகமாக விளைகின்றன. மாம்பழ சீசன் பொதுவாக மார்ச் முதல் ஜூன், ஜூலை வரை நீடிக்கும்.

இந்தியாவுக்கு அடுத்ததாக சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மாம்பழங்கள் அதிகம் விளைகின்றன. உலகில் 500-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன. மாம்பழம் இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய பழமாகவும், மாமரம் வங்கதேசத்தின் தேசிய மரமாகவும் உள்ளது.

இந்தியாவில் இருந்து மதத்தை பரப்பச்சென்ற புத்த துறவிகள்தான் பிற ஆசிய நாடுகளுக்கு மாம்பழங்களை அறிமுகப்படுத்தினர். பின்னர் அரேபிய வணிகர்கள் பல நாடுகளுக்கு மாம்பழத்தை கொண்டு சேர்த்தனர்.

மாம்பழ வகைகள்

இந்தியாவில் பல்வகை ரக மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மல்கோவா, கிளிமூக்கு, கலயம், நீலம், சப்போட்டா, கல்லாமை, காதர், பச்சை, பங்கனபள்ளி, பஞ்சவர்ணம், பாதிரி, பசந்த், பொட்டல்மா, பீத்தர், பெங்களூரா, செந்தூரா, மல்லிகா, அமர்பாலி, அல்போன்சா, ரசாலு, ராஜாபுரி, ரத்தினகிரி, தானேபாடு, குண்டு, மோகன்தாஸ், இமாம்பசந்த், கேசர், தசேரி, பைகி, நீலிசா, ஜஹாங்கீர், சுவர்ணா, ஹிமாயுதீன், சுவர்ண ரேகா, காசாலட்டு, லங்கடா, மால்டா, சக்கரக்குட்டி உள்பட 100-க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.

மும்பை அல்போன்சா மாம்பழங்களுக்கும், ஐதராபாத் பங்கனப்பள்ளி மாம்பழங்களுக்கும் பெயர் பெற்றவை. கேசர் மாம்பழங்களுக்கு குஜராத் பெயர் பெற்றது. தமிழ்நாடு இமாம்பசந்த், மல்கோவா மற்றும் செந்தூரா மாம்பழங்களுக்கு பெயர் பெற்றது.

'மேங்கோ'

மாம்பழத்திற்கு "மாம்பழம்" என்ற பெயரைத் தந்தது தமிழர்கள்தான். ஆங்கிலத்தில் 'மேங்கோ' என போர்ச்சுகீசியர்கள் பெயர் வைத்தனர். 500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் வழியாக இந்தியாவுக்கு வந்த போர்ச்சுகீசியர்கள் இந்திய மாம்பழங்களை சுவைத்தனர். அதனால் விதவிதமான மாம்பழங்களை உருவாக்கும் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அல்போன்சா மற்றும் மல்கோவா மாம்பழங்கள் போர்ச்சுகீசியர்களின் கடும் உழைப்பினால் வந்தவை.

மாம்பழ தினம்

'மாதா ஊட்டாத சோறு மாம்பழம் ஊட்டும்' என்பார்கள். அந்த அளவுக்கு மாம்பழத்தில் மாவுச்சத்து, நார்ச்சத்து, சர்க்கரை சத்து மற்றும் கொழுப்பு, புரதம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் என நிறைய தாது சத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 22-ந் தேதி தேசிய மாம்பழ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விதையில்லா மாம்பழம்

பொதுமக்களிடையே 'விதையில்லா மாம்பழம்' பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. கொட்டை இல்லாத இந்த பழம் மிகுந்த சுவையாக இருக்கும். பீகார் விவசாய பல்கலைக்கழகத்தில் அல்போன்சா மற்றும் ரத்னா போன்ற மாம்பழ வகைகளில் கலப்பினம் செய்து விதையில்லா மாம்பழத்தை உருவாக்கியுள்ளனர். இந்த விதையில்லா மாம்பழத்தின் எடை 200 கிராம் இருக்கும். இந்த மாங்காய் பழுத்தவுடன் மஞ்சள் நிறமாக இருக்கும். விதையுள்ள மாம்பழத்தை விட இந்த விதையில்லா மாம்பழத்தில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். ஆந்திராவில் இருந்தும் விதையில்லா மாம்பழங்கள் தமிழகத்திற்கு வருகின்றன.

மாம்பழங்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை...

தேங்காயை தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களை தட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம். வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், பழத்தில் இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள் ஆபத்தானவை. செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை. கருப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும். மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம். வேதிக்கற்கள், வேதிப்பொருட்கள் ஆகியவற்றின் துணையோடு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் செரிமான கோளாறுகள், அரிப்பு, வாந்தி, பேதி தொடங்கி, நுரையீரல் பிரச்சினைகள் என பல பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் மாம்பழம் வாங்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மாம்பழத்தில் இருந்து வெளிவரும் வாசனையை வைத்து மாம்பழங்களைத் தேர்வு செய்யலாம். மாம்பழங்களின் தோல், பளிங்கு போல பளபளக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. கருநிற கோடுகள், திட்டுக்கள் இருக்கும் மாம்பழங்களை தாராளமாக வாங்கலாம்.

சீசனின் போது மாம்பழங்கள் கல் வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன. அதாவது, வெள்ளை நிறத்தில் இருக்கும் 'கால்சியம் கார்பைடு' கற்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இந்தக்கற்களைப் பொடியாக்கி, ஸ்பிரே போலவும் உபயோகிக்கின்றனர். இந்த ஸ்பிரேக்கள் அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென இருக்கும். அதனால், பழத்தில் இயல்பாக இருக்கும் கருப்பு நிறப் புள்ளிகள் தென்படாது. இப்படி கற்கள், பவுடர் பயன்படுத்தப்பட்டால், மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும். எனவே மிக கவனமாக பார்த்து மாம்பழங்களை வாங்க வேண்டும்.

இயற்கையான முறையில் மாம்பழத்தைப் பழுக்கவைக்க வைக்கோல், ஊதுவத்தி, பேப்பர் ஆகியவையே போதுமானவை. வீட்டில் உள்ளவர்கள், குறைந்த அளவுக்குத்தான் மாங்காய்களை வாங்குவார்கள். அவற்றை பேப்பரில் சுற்றிவைத்து, ஓர் அட்டைபெட்டியில் போட்டு, ஊதுவத்தி ஏற்றிவைக்க வேண்டும். அதன் புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இரண்டே நாட்களில் மாங்காய்கள் பழுத்துவிடும். பச்சையாக, கடினமான காயாக இருந்தால் பழுக்க இரண்டு நாட்கள் தேவைப்படும். சற்றுப் பழமாக இருந்தால் ஒரு நாள்போதுமானது.


Next Story