11 பேர் பலியான விவகாரம்: ஆர்.சி.பி. அணி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்...குற்றப்பத்திரிகையில் தகவல்


11 பேர் பலியான விவகாரம்: ஆர்.சி.பி. அணி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்...குற்றப்பத்திரிகையில் தகவல்
x

போலீசார் தயார் செய்துள்ள இந்த குற்றப்பத்திரிகை காரணமாக ஆர்.சி.பி. அணி நிர்வாத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐ.பி.எல். கோப்பையை வென்றதற்காக ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெற்றது.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதுகுறித்து கப்பன் பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கை சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது.

11 பேர் பலியானது தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் மீது வழக்குப்பதிவாகி இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டும் 11 பேர் பலியான வழக்கு விசாரணையை விரைந்து முடித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், ஆர்.சி.பி. அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் பலியான விவகாரத்தில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். சுமார் 2,200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தயார் செய்துள்ளனர். அதை ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாக காரணம் என்ன? என்பது பற்றிய தகவல்களையும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி, கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் தனியார் நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனமான டி.என்.ஏ. ஆகியவையே காரணம் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்திருப்பதாக தகவல்கள் அம்பலமாகி உள்ளது.

குறிப்பாக வெற்றிக் கொண்டாட்டத்துக்கு அரசு அனுமதி வழங்கிய பின்பு, அந்த சந்தர்ப்பத்தில் போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்திடம் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்திருந்தனர். போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் முன்பாகவே வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தி இருப்பதாகவும், ஸ்டேடியத்தின் முன்பு மக்கள் பெருமளவில் திரண்டிருந்தும் கதவுகளை திறக்காமல் ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததும் தான் 11 பேர் பலியாக காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவர்கள் அளித்த வாக்குமூலம், ஆர்.சி.பி. கிரிக்கெட் சங்கம், டி.என்.ஏ. நிறுவனத்தை சேர்ந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அளித்த தகவல்களையும் குற்றப்பத்திரிகையில் போலீசார் சேர்த்துள்ளனர்.

போலீசார் தயார் செய்துள்ள இந்த குற்றப்பத்திரிகை காரணமாக ஆர்.சி.பி. அணி நிர்வாகம், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் டி.என்.ஏ. நிறுவனத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story