2-வது டி20 போட்டி: இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது.
சண்டிகார்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது. இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டி காக் 90 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியாக தொடங்கினாலும் சுப்மன் கில் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி ஏமாற்றினார். சிறிது நேரத்திலேயே அபிஷேக் சர்மா 8 பந்துகளில் 17 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இந்திய அணியின் விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் கைப்பற்றி தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அசத்தினர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களில் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றினார். அடுத்து திலக் வர்மா களமிறங்கினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அக்சர் 21 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 20 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 27 ரன்களிலும் அவுட்டாகினர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் திலக் வர்மா அதிரடியாக ஆடி அணி வலுவான நிலையை எட்ட உதவினார். 19.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் திலக் வர்மா 34 பந்துகளில் 62 ரன்கள் அடித்த நிலையில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஓட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி வருகிற 14-ம் தேதி நடைபெற உள்ளது.






