இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20: அர்ஷ்தீப் சிங் ஏன் களமிறங்கவில்லை..? வெளியான தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக முகமது ஷமி இடம் பிடித்தார்.
ராஜ்கோட்,
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னர் 172 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி வெகுவாக தடுமாறியது. சஞ்சு சாம்சன் (3 ரன்), அபிஷேக் ஷர்மா (24 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (14 ரன்), திலக் வர்மா (18 ரன்), வாஷிங்டன் சுந்தர் (6 ரன்) வரிசையாக நடையை கட்டினர்.
ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் (40 ரன், 35 பந்து, ஒரு பவுண்டரி, 2 சிக்சர்) போராட்டம் தோல்வியின் வித்தியாசத்தை குறைக்க மட்டுமே உதவியது. 20 ஓவர்களில் இந்திய அணியால் 9 விக்கெட்டுக்கு 145 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் முதல் வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம் பிடித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளானது. ஏனெனில் அர்ஷ்தீப் நடப்பு தொடரில் மிகச்சிறப்பான முறையில் பந்துவீசி இருந்தார்.
இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் இந்த போட்டியில் விளையாடாததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பணிச்சுமை காரணமாக அவருக்கு இந்த போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.






