3வது டி20 போட்டி: சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு ஆகாஷ் சோப்ரா கடும் கண்டனம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது குறித்து ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
Image Courtesy : @BCCI
Image Courtesy : @BCCI
Published on

புதுடெல்லி,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கான்பெர்ராவில் நடந்த முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மெல்போர்னில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி ஹோபர்ட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்களாக சாம்சன், குல்தீப் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், ஜிதேஷ் சர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 74 ரன்களும், ஸ்டோய்னிஸ் 64 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 187 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 49 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கபட்டது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கூறியதாவது,

ஜிதேஷ் சர்மா விளையாடுகிறார், சஞ்சு சாம்சன் விளையாடவில்லை. இதன் அர்த்தம் என்ன? இதில் இனி நாம் லாஜிக்கைத் தேட வேண்டியதில்லை, ஏனென்றால் ஒருவேளை அணிக்கே கூட இது புரியாமல் இருக்கலாம். ஷுப்மான் கில் தொடக்க வீரராக களமிறங்கத் தொடங்கியபோது, ஜிதேஷ் வரிசையில் கீழே ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தோம், ஆனால் அது நடக்கவில்லை.

ஆசியக் கோப்பையில், சாம்சன் முதலில் கீழ் வரிசையில் விளையாடினார். பின்னர் மேல் வரிசையில் விளையாடினார். இறுதிப் போட்டியில் அவர் முக்கியமான ரன்கள் எடுத்தார், ஆனால் இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஒரு இன்னிங்ஸுக்குப் பிறகு அவர் நீக்கப்பட்டார். சாம்சன் ரசிகர்கள் வருத்தப்படுவது சரிதான், ஆனால் இதன் பொருள் ஜிதேஷ் மட்டுமே விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com